(Reading time: 19 - 37 minutes)

அப்போது வேகமாக வந்த ஊர் பெரியவர்கள் “யோவ்... சிவம்.. ஊர் நடைமுறைன்னு ஒன்னு இருக்குதுல்லே.. அதுக்குள்ளே என்னவே அவசரம் உமக்கு ? இதுங்களுக்கு சோறு போடலைன்னா என்ன ? “

“யோவ்.. கோவிலில் அன்னதானம் போடுறதே.. ஏழை, எளியவங்க உண்கதான்.. நீரும் நானும் திங்க நம்ம வீட்டுலே போனா நிமிஷமா ஆக்கி போடுவாங்க.. அவங்க வயிறார சாப்பிடட்டும்.. பொறவு மிச்சம் இருக்கிறதா உம்ம வீட்டுக்கு எடுத்துட்டு போவும்” என்று அவர் வாயை அடைத்தார்.

நான் முதலில் சாப்பிட்டு விட்டு, எங்க கூட இருந்த சின்ன பிள்ளைகளை, சாப்பிட வைத்துக் கொண்டு இருந்தேன். அதில் சில பிள்ளைகள் பாதி சாப்பிடமால் வீண் செய்வதை பார்த்து விட்டு அவர்கள் அருகில் சென்று

“தம்பி.. இந்த சாப்பாடு கிடைக்காம தானே நாம இந்நேரம் வரை பசியில் கிடந்தோம்.. இப்போ நீ இதை வீணாக்கினா, திரும்ப உனக்கு சாப்பாடு கிடைக்காது,.. அதனாலே எல்லாம் சாப்பிட்டு முடிக்கணும் “ என்று சொல்லிக் கொண்டு இருந்தேன்..

இதனை கவனித்த அந்த பெரியவர், எங்கள் கூட்டத்தில் ஒரு பெரியவரை அழைத்து வர சொல்ல, நானும் ஒரு பெரியவரும் சென்றோம்..

எங்களிடத்தில் “நீங்க எல்லாம் யார்? இப்படி கூட்டமா வந்துருக்கீங்க.. ? உங்கள பார்த்த ரொம்ப கஷ்டப்பட்டு வந்த மாதிரி தெரியுதே? என்ன சமாசாரம்?” என்று வினவினார்.

நாங்கள் நடந்தை சொல்லி முடிக்க “கேடு கெட்டவனுங்க.. இவனுங்கள எல்லாம் உடனே தண்டிக்கணும்..” என்று இன்னும் சில வார்த்தைகளால் திட்டி விட்டு,

“இப்போ நீங்க என்ன செய்ய போறீங்க? உங்க விவகாரம் எல்லாம் பேப்பர்லே வந்துட்டுது.. இப்போ அரசாங்கம் இதிலே தலையிட்டு பிரச்சினை சரி செய்ய ஆரம்பிச்சுட்டங்க. நீங்க எல்லாம் விருப்பபட்டா உங்க இடத்துக்கு போக ஏற்பாடு செஞ்சு தாரேன்..” என்றார்.

என்னோடு இருந்த எங்கள் ஊர்க்காரர் அங்கிருந்த மற்றவர்களிடம் பேச, அவர்களில் பலர் தங்கள் ஊர் செல்வதாக சொல்ல, சிலர் மட்டும் ஊர் திரும்ப விரும்பவில்லை என்று கூறி விட்டனர்.

அவர்கள் முடிவை கேட்டவர், அவரவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தார். ஊருக்கு சென்றவர்களை தவிர எஞ்சியவர்களை தன்னுடைய பண்ணையில் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். அங்கேயே ஒரு தரிசு நிலத்தில் இவர்கள் குடிசை போட்டுக் கொள்ள அனுமதியும் கொடுத்தார்.

எல்லோரும் சென்ற பின், நான் மட்டும் தனியாக இருப்பதை பார்த்தவர்,

“என்னப்பா.. நீ யார் கூட வந்த ? உன் அப்பா அம்மா எங்கே? “ என கேட்டார்.

நான் நடந்ததை சொல், மிகவும் வேதனை பட்டவர் “இப்போ நீ யார் கூட போயி இருக்க போறே ? “

“ஐயா... நான் தனியாவே இருந்துக்கறேன் .. “

“ஏன்பா.. உனக்கு என்ன வயசு “

“பன்னெண்டு வயசாகுது”

“இந்த வயசிலே எப்படி தனியா இருப்ப?”

“இல்லையா.. இங்கே இருக்க எல்லோருமே அண்டி புழைக்க வந்தவங்க.. அவங்க அவங்க பாட்டுக்கே கூலி வேலை பார்க்கணும்.. இதிலே அவங்க குடும்பத்தை பார்ப்பாங்களா? என்னை சேர்த்துக்கிட்டா அவங்க எனக்கும் சேர்த்து தானே சம்பாதிக்கணும் .. பாவம் ஐயா அவங்க..”

“இந்த வயசிலே.. என்ன ஒரு சிந்தனை. ? உங்க அப்பா இரத்தம் .. அப்படியே உன் உடம்புலே ஓடுதுயா.. நான் ஒன்னு பண்ணறேன்.. உன்னை திருநெல்வேலிலே விடுதியோட இருக்கிற பள்ளிக் கூடத்துலே சேர்த்து விடறேன்.. வருங்காலம் படிப்புதான் நமக்கு கை கொடுக்கும்.. நீயும் படி.. “

“ஐயா.. படிக்கனும்னா வசதி வேணுமே..? நானும் கூலி வேலை செஞ்சு என் பாட்ட பார்துகிடுதேனே?”

“கூறு கெட்டவனே.. நீயும் தொழிலாளியாவே இருக்க போறியா? நீ மொதலாளி ஆகி நாலு பேத்த நல்லா வச்சுக்கிட வேணாம்..? உன்னை நான் அரசாங்க பள்ளிகூடத்துலே தான் சேர்க்க போறேன்.. அங்கனே எல்லாம் இலவசம்தான்.. “ என்றார்.

அவர் சொன்னபடி என்னை ஒரு பள்ளிக்கூடத்துலே சேர்த்து விட்டவர், எனக்கு அந்த வருஷத்துக்கு தேவையான உடுப்பு எல்லாம் வாங்கி கொடுத்தார். அதே மாதிரி லீவ் விடும்போது  இலஞ்சிலே இருக்கிற அவர் தென்னந்தோப்புலே நான் தங்கிக்க ஒரு சின்ன குடிசையும், அந்த லீவ்லே செய்யற மாதிரி சில வேலையும் கொடுத்துட்டு போயிருந்தார்.. அவராலே தான் நான்  அப்பா , அம்மா இல்லாத அனாதை ஆனாலும், பி.யு.சி.. வரைக்குமான படிப்பை முடிச்சேன். என் படிப்பு முடியும் வரை என்னாலே அவரை பார்க்க முடியல..

நான் படிப்பு முடிஞ்சு ஊருக்கு வரவும், அவரும் வந்தவர், எனக்கு அங்கனையே கொஞ்சம் நிலத்த குத்தகைக்கு கொடுத்து அதிலே வாழ்க்கைய ஆரம்பிக்க சொன்னார்.

என்னோட உழைப்பையும் , முயற்சியையும் பார்த்தவர், இலஞ்சிக்கு வரும்போது எல்லாம் பாராட்டிட்டு போவார். எல்லாம் செய்வாரே தவிர, நாந்தான் அவன வளர்த்து விட்டவன்னு யாருகிட்டயும் சொல்ல மாட்டார். நான் அத சொல்றத விரும்பவும் மாட்டார். அதனால் தான் எங்க கல்யாணத்துக்கு அவர கூப்பிட்ட போது, வரலைன்னு சொல்லிட்டார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.