(Reading time: 19 - 37 minutes)

“நான் ஏற்கனவே அவனுக்கு பொண்ணு பார்த்துட்டேன்னு சொன்னேன் தானே..”

“கொஞ்ச நாளு முன்ன,  உங்க கிட்டே மலர நம்ம செழியனுக்கு பார்க்கலாம்னு நான் கேட்ட போதே உங்களுக்கு நம்ம பையன் மனசு தெரிஞ்சு தானே இருந்தது. அப்படி இருந்தும் நீங்க எப்படி இப்போ இன்னொரு பொண்ண அவனுக்கு பேசலாம்...”

“அப்போ சொல்லும் போதே இந்த வாட்டி ஊருக்கு போய் விவரம் கிடைக்குதான்னு பார்க்காலாம்னு தானே சொன்னேன்.. நான் சொன்னது முன்ன நடந்து இருக்கு.. அப்போ இததான் நாம மேலே பேசணும்..”

இப்போது செழியன் இடையிட்டு

“அப்பா... நீங்க எங்கிட்ட விவரம் சொல்லும் முன்னாடியே நான் அவள விரும்ப ஆரம்பிச்சுட்டேன். அத உங்ககிட்டே நேரடியா சொல்லனும்னு தான் நினைச்சு இருந்தேன். ஆனா என்னோட இந்த பி.எச்.டி படிப்பு முடியட்டும்ன்னு நினைச்சேன்.. ரெண்டு பேரும் ஒரே இடத்திலே அதிலும் காலேஜ்லே வேலை பார்கிறதாலே, கல்யாணம் பேசினா அது உடனே நடக்கணும். மத்தவங்களுக்கு தவறான உதாரணமா இருக்கக் கூடாதுன்னு யோசிச்சேன்.. அதுக்குள்ளே நீங்க இந்த விஷயம் பத்தி பேசுனீங்க.. அதோட நீங்களே அவங்கள கண்டுபிடிக்கனும்னு சொல்லிட்டு இருந்தீங்க.. அதனால் அவசரபடலை. இப்போ உங்களுக்கு முன்னாடி நான் வடிவேல் மாமாவ விவரம் கேட்டு , நாளைக்கு போயி  நேரடியா பேசிராலாம்னு நினைச்சி இருந்தேன்.. அவரும் நான் கேட்டதால தான் உங்ககிட்டே நேர்லே பேசலாம்னு காத்துகிட்டு இருந்தார். நடுவில் நீங்க இப்படி அவங்ககிட்டே பேச்சு வார்த்தை நடத்தி இருப்பீங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை..”

“இப்போ அம்மையும் மகனும் என்ன சொல்லுதீங்க..? நான் சொல்ற பொண்ண ஏத்துக்கிட மாட்டீங்க அப்படிதானே.. ? அப்போ உன்னை பெத்து ஆளாக்கின எனக்கு உன் வாழ்க்கைய முடிவு பண்ண எந்த அதிகாரமும் கிடையாதுங்கியோ? “

“அப்பா .. அப்படி எல்லாம் சொல்லலை.. எனக்கு ஒரு பொண்ண பிடிச்சதுக்கு பொறவு நீங்க இன்னொரு பொண்ண பார்த்து நான் கட்டிகிடனும்னு சொன்ன , பாழாக போறது மூணு பேரோட வாழ்க்கை.. அத யோசிங்க நீங்க ?”

“நீ அந்த மலர் புள்ளைய பார்க்கலன்னு நினைச்சிக்கோ ?”

“இதயே நான் மாத்தி சொன்னா என்ன செய்வீங்க ? நீங்க தேடின நமசிவாயம் ஐயா குடும்பம் கிடைக்கலைனா என்னை காலம் பூரா கல்யாணம் பண்ணிக்காம இருன்னு சொல்லுவீங்களா?”

“இப்போ முடிவா என்னதான் சொல்லுதீங்க? “ என்று தன் மனைவி, மகனிடம் கேட்டார்.

இதுவரை அவர்களின் வாக்குவாதத்தை பார்த்துக் கொண்டு இருந்த வடிவேல்,

“மச்சான்.. எங்கிட்ட நீங்க சொன்னது நமசிவாயம் ஐயாவ பத்தி சொல்லி அவருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்.. ஆனால் எனக்கு அவர தவிர அவர் குடும்பத்தார தெரியாது.. இப்போ எங்கன , எப்படி இருக்காங்கன்னு விசாரிச்சு, அவங்க வீட்டு பொண்ணுக்கு உம்ம  பையன பேசணும்.. இததான் சொன்னீங்க.. ? ஆனாக்க அந்த விஷயத்துலே இவ்ளோ தீவிரமா ஏன் இருக்கீங்கன்னு சொல்லலையே..? அதோட நம்ம பையன் நோக்கம் வேற பக்கம் இருக்கும் போது நாம மேலே அத தொடறது சரி இல்லையே?”

“இல்லை மச்சான்.. நான் அவங்க கூட சம்பந்தம் வச்சுக்க ரொம்ப ஆசைப் படறேன்.. நான் இன்னிக்கு உங்க மச்சானா நிக்கறேன்னா அதுக்கு அந்த ஐயா தான் முழு காரணம்... அந்த நன்றி .. அவங்க கூட உறவு வச்சுக்கனும்னு நினைக்கறது தப்பா சொல்லுயா ?”

“நீங்க சொல்றது சரிதான்.. அதுக்கு மொத நம்ம பையன் மனசையும் நாம பார்க்கணுமில்ல..”

இத்தனை பேர் எடுத்து சொல்லியும் தன் அப்பாவின் மனது மாறவில்லை என்பது அவர் முகபாவனையில் அறிந்த செழியன், அதுவரை நடை போட்டுக் கொண்டு இருந்த தன் தந்தையை அணுகி , அவரை வெளியே அழைத்து வந்து அங்கிருந்த திண்ணையில் காற்றாட அமர செய்தான்.

அவனை தொடர்ந்து அவன் அம்மா, வடிவேல் மாமா இருவர்க்கும் கண் கட்ட, அவர்களும் அங்கிருந்த மற்றொரு திண்ணையில் அமர்ந்தார்கள்.

அவர் அருகில் அமர்ந்து அவர் கைகளை பிடித்துக் கொண்டு, ஆறுதலாக பேச ஆரம்பித்தான்.

“அப்பா.. இதுவரை நான் கேட்ட எதுக்கும் நீங்க மறுத்ததில்லை. என் படிப்பு விஷயத்தில் ஆரம்பிச்சு, உங்க கடைய நான் பார்த்துக்கணும்னு ஆசை இருந்தும், நான் ப்ரொபசராக வேலை பார்க்க இஷ்டபட்டதால், அதுக்கும் மறுப்பு சொல்லாம என்னை என் போக்கில் விட்டுருக்கீங்க.. இதுவரை நான் என்ன சம்பாதீக்கீறேன்னு கூட நீங்க கேட்டது கிடையாது.. இன்னைக்கும் நான் உடுத்துற துணிலேர்ந்து, என் செலவு எல்லாம் நீங்க தான் பார்க்கறீங்க? ஏன்பா?”

“இது என்னாலே கேள்வி? நீ என் ராசா.. நான் சம்பாரிக்கிறது எல்லாமே உனக்கும், உன் வாரிசுகளுக்கும் தான். உனக்கு இல்லாம வேற யாருக்கு நான் செலவழிக்க போறேன் ? அதோட உன் சம்பாதனையில் நீ எங்களுக்கு அப்போ அப்போ ஏதோ வாங்கியார .. நாங்களும் அத பெருமையா போட்டுக்குறோம்.. பொறவு ஏன் இந்த வியாக்கியானம்”

“நீங்க என் மேலே வச்சிருக்கிற பாசம் எனக்கு விளங்குதுப்பா.. இத்தனையும் மீறி இந்த விஷயத்திலே என்னை கட்டயாபடுத்தறீங்க அப்படின்னா.. உங்க மனசுக்கு ரொம்ப நெருக்கமா அவங்க இருந்து இருக்காங்கன்னு எனக்கு புரியுது.. நீங்க எங்க கிட்ட அதுக்கான காரணத்தை சொல்லுங்க.. நான் உங்களுக்கு வேற ஏதாவது வழி சொல்றேன் “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.