(Reading time: 12 - 24 minutes)

அமேலியா - 41 - சிவாஜிதாசன்

Ameliya

சிரியை நடத்தும் பாடத்தைக் கூட கவனிக்க பிரியப்படாமல் ஏதோ ஒரு ஞாபகத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்டிருந்தாள் பஹீரா. சமீப காலமாக தன் அண்ணன் ஹகீம் நடந்து கொள்ளும் விதம் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவன் தன்னிடம் பேசுவது வெகுவாக குறைந்துள்ளதாய் நினைத்தாள் பஹீரா.

ஏதோ ஒரு பயத்தோடு வாழ்க்கை, உறக்கத்தில் சிறிய சப்தம் கேட்டால் கூட உடனே எழுந்து பயத்தோடு பார்க்கும் அந்த பார்வை, அவன் தன்னை விட்டு தூரத்தில் எங்கோ திரும்பாத பாதையில் சுமக்கமுடியா கனவுகளோடு அதில் கலந்திருக்கும் பழிவாங்கும் உணர்வோடும் சென்றுகொண்டிருக்கிறான் என்பதை அவளால் உணர முடிகிறது. ஆனால், அதை அவளால் சொல்ல முடியவில்லை.

சிறு பெண், அவளால் என்ன செய்துவிட முடியும்? ஏதோ ஒன்று நடக்கிறது. அதை தெரிந்துகொள்ள முடியவில்லை. தன் தாய் தந்தையரை எண்ணிப் பார்த்தாள். அவர்கள் உயிருடன் இருந்தபோது இது போல் நடக்கவில்லை. நீண்ட நாட்கள் கழித்து பெற்றோரை நினைத்துப் பார்க்கையில் அவளையும் அறியாமல் கலங்கினாள் பஹீரா.

ஹகீம் இரண்டு நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தான். அது என்னவென்று அவன் சொல்லவில்லை. பஹீரா கேட்டால் அது உனக்கு புரியாது என்று கூறினான். எங்கெங்கோ தேடினான். வேலை செய்யும் இடம், நடந்து வரும் வீதி, கழட்டி போட்ட துணிமணிகள், அவன் சென்ற இடங்களில் எல்லாம் மீண்டும் ஒருமுறை சென்று பார்த்தான்.  கிடைக்கவில்லை.

அவன் தேடிக்கொண்டிருக்கும் அந்த சயனைட் குப்பியை பஹீரா பையில் இருந்து எடுத்து பார்த்தாள். அவள் கை நடுங்கியது. அதை சாப்பிட்டால் உயிர் போய்விடும் என ஹகீம் சொல்லியிருந்தான். ஒரு நாள் அவன் தூங்கியிருந்த நேரம் அவனுக்கு தெரியாமல் திருடிவிட்டாள். திருடினாள் என்று சொல்வதை விட மரணத்தை அணைத்திருந்தவனிடம் இருந்து  தற்காலிகமாக விலக்கினாள் என்று கூறலாம்.

அந்த மரணத்தை இப்பொழுது அவள் கையில் வைத்திருந்தாள். 'இதை சாப்பிட்டால் எப்படி உயிர் போகும்? சாப்பிடலாமா?' மழலைகளுக்கே வரும் வினோத சிந்தனை அது. உயரமான கட்டடத்தில் ஏறி கீழே பார்த்தால் நமக்கு தோன்றும் முதல் எண்ணம், 'இங்கிருந்து குதித்தால் என்ன ஆகும்?' என்பது தானே!

"பஹீரா!!"

ஆசிரியையின் குரலைக் கேட்டு சிந்தனை கலைந்து எழுந்து நின்றாள் பஹீரா.

"நான் இங்க பாடம் நடத்திட்டு இருக்கேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க?"

"ஒண்ணும் பண்ணல" பயக் கண்களோடு சொன்னாள் பஹீரா.

"கையில என்ன?"

பஹீராவின் இதயத்தை பயம் பிசைந்தது. கண்களை அகல திறந்து விழித்தாள். 'என்ன சொல்வது? உண்மையை சொல்லலாமா? வேண்டாம் பொய் சொல்லியாக வேண்டும். என்ன கூறுவது?.....என்ன கூறுவது?'

"கையில என்னனு கேட்டேன்?"

"எதுவும் இல்லை"

"கையை காட்டு"

பஹீரா அமைதியாக நின்றாள்.

"காட்டுனு சொன்னேன்"

அந்த நேரத்தில் மாலை நேர மணி அடிக்கவும் பிள்ளைகள் வீட்டிற்கு செல்ல எழுந்து சென்றார்கள். ஆசிரியையும் அதற்கு மேல் பஹீராவிடம் கேள்வி கேட்காமல் 'சிறியவள்! என்ன வைத்திருக்க போகிறாள்? மிட்டாயாக இருக்கலாம்' என்று எண்ணி அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

பயம் கலந்த முகத்தோடு பள்ளியை விட்டு வெளியே வந்தாள் பஹீரா. பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை அழைத்துச் செல்ல காத்திருந்தனர்.  பஹீராவுக்காக யாரும் காத்திருக்கவில்லை. தன் அண்ணன் வரமாட்டான் என்று அவளுக்கு தெரியும். பெற்றோர் இறந்தபின் பஹீராவை அழைத்துக்கொண்டு போக தினமும் வரும் ஹகீம், தற்போது அதையெல்லாம் மறந்து போயிருந்தான்.

அன்று மாலை ஏனோ மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து லேசான சாரல் மழையை தூறிக்கொண்டிருந்தது. தன் தோழியின் பின்னால் சென்றுகொண்டிருந்தாள் பஹீரா. ஆசிரியையிடம் திட்டு வாங்கிய பஹீராவைப்பற்றி விளையாட்டாக அம்மாவிடம் கூறிக்கொண்டு வந்தாள் அந்த சிறுமி. பஹீராவிற்கு கோபம் கொப்பளித்தது. தோழியை முறைத்தாள் 

தோழியின் அம்மா பஹீராவை பார்த்து புன்னகைத்தார்.

தோழியும் அவளின் அம்மாவும் கடை ஒன்றில் நின்றார்கள். கடையின் முதலாளி வயதானவர். நீண்ட வருடங்களாக கடையை நடத்தி வருகிறார். கால தேவன் போட்ட கோடுகள் அவர் முகத்தில் நெளிந்திருந்தன. மிட்டாய் பாட்டில்களை தவிர வேறு எதுவும் அந்த கடையில் இல்லை. பிள்ளைக்காக அம்மா மிட்டாய் வாங்கினார். பின்னால் வந்து கொண்டிருந்த பஹீராவை தோழியின் அம்மா அழைத்தார். புரியாத பார்வையோடு அவர்கள் முன் வந்து நின்றாள் பஹீரா.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.