(Reading time: 12 - 24 minutes)

விளக்கின் ஒளியில் வீட்டு பாடத்தை முடித்தாள் பஹீரா. இரவு மணி ஒன்பதை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. கிழிந்த போர்வையை போர்த்தியபடி ஹகீமின் மடியில் வந்து படுத்தாள் பஹீரா.

அவனுள் சூழ்ந்திருந்த மிருக குணத்தில் தீ வைத்தது போலிருந்தது. அவன் மனம் தடுமாறியது. பஹீராவின் அன்பு ஹகீமை பயமுறுத்தியது. எந்த ஒரு காரியத்தையும் செய்ய முயற்சிக்கையில் தன்னையும் மீறி தடுமாற்றம் வருகிறதென்றால் அந்த காரியத்தில் இயற்கை எதிராக நிற்கிறதென்று பொருள்.  

இயற்க்கை பேசுமா? ஏதோ ஒரு காரண காரியத்திற்காக சதா சர்வ நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் சாமான்ய மனிதன் கேட்கின்ற கேள்வி தான். படித்தவுடன் பகுத்தறிவு வந்துவிட்டது. அதனால், காண்பவற்றை மூட நம்பிக்கைகள் என்று கூறுகிறார்கள். எங்கிலும் விஞ்ஞானம், எல்லாவற்றிலும் விஞ்ஞானம். பிறப்பும் இறப்பும் விஞ்ஞானம். அப்படியென்றால் பசி, சோகம், கோபம், காமம், பொறாமை, வஞ்சம் இவையெல்லாம் என்ன?

தாயோ தந்தையோ உடன்பிறந்தாரோ நண்பர்களோ இறந்துவிட்டால் ஏன் அழுகிறீர்கள்? பிறந்தால் இறப்பது தானே நியதி. விஞ்ஞானம் அதை தானே கூறுகிறது. எல்லாம் தெரிந்துகொண்டும் எதற்காக கலங்குகிறாய்? உடலிலுள்ள ஏதோ ஒரு உணர்வு துடிக்கிறது. உற்று கவனித்தால் அந்த உணர்வு இதயத்திலிருந்து பிறப்பதை அறிவீர்கள். அந்த உணர்வுகளை விஞ்ஞானத்தால் விளக்க முடியாது.  

விஞ்ஞானம் கண்களால் காண்பது. பெருகி வரும் கண்ணீரை அதனால் தடுக்க முடியுமா? மரணத்தை வெற்றிகொள்ள முடியுமா? விஞ்ஞானத்தையெல்லாம் விஞ்சி நிற்பது தான் இயற்கையின் அழகு. உலகமும் மனிதனும் என்ன தான் நவீன வாழ்வு வாழ்ந்தாலும் இயற்கையை ஒரு நாளும் வெற்றிகொள்ள முடியாது.

இயற்கை பேசும். அதை கேட்பதற்கு ஓட வேண்டிய அவசியமில்லை. இருந்த இடத்திலேயே அமைதியாக அமருங்கள். அங்குமிங்கும் அலைபாயும் மனதை சிறைப்படுத்துங்கள். எங்கிருந்தோ தவழ்ந்து வரும் தென்றல் உடலை தீண்டும். அந்த தென்றலின் மேன்மையை உணருங்கள். பல எண்ணங்கள், காட்சிகள் மனக்கண் முன்னால் தோன்றும். அதனை அப்புறப்படுத்துங்கள். மெல்ல மெல்ல இயற்கை உங்களுக்குள் ஊடுருவும். மனம் லேசாகும். துன்பங்கள் பறந்தோடும். நம்பிக்கை பிறக்கும். இவை எல்லாம் நடந்தால் இயற்கை உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறது என்று பொருள். இதற்கு விஞ்ஞானம் பதில் சொல்லுமா?

ஹகீம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். தெளிவில்லாத சிந்தனைகள் வருவதும் போவதுமாய் இருந்தது. பஹீரா உறங்கி விட்டிருந்தாள். அவள் முகத்தை விளக்கொளியில் உற்று நோக்கினான். அவன் மனதில் குண்டூசியால் குத்தியது போல் வலி உண்டானது. பஹீராவை அருகே இருந்த படுக்கையில் படுக்க வைத்துவிட்டு முத்தம் ஒன்றை நெற்றியில் பதித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.  

ஊரெங்கும் அமைதி. ஹகீம் மட்டும் தனியாக நடந்து சென்றான். அவ்வப்போது தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று பயம் கலந்த பார்வையை நாலா பக்கமும் வீசினான். சமீப காலமாகவே அவன் எதை கண்டாலும் பயப்படத் தொடங்கிவிட்டான். யாரேனும் புதியவர்கள் அவனை சில நொடிகள் உற்று நோக்கினால் கூட அவனை பயம் பிடித்துக் கொள்கிறது. அதற்கான பரிகாரம் என்னவென்று அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.  

சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமெரிக்க வாகனங்கள் ரோந்து சென்றுகொண்டிருந்தன. அவர்களை கண்டதும் இருளில் தன்னை மறைத்துக் கொண்டான் ஹகீம். அவனது பயணம் ஒரு மணி நேரத்தையும் தாண்டி சென்றது. இறுதியாக அவன் வர வேண்டிய இடத்தை வந்தடைந்தான். இதயம் தாறுமாறாக துடித்து பயமூச்சு வாங்கியது.

அவன் சார்ந்த தீவிரவாத இயக்கத்தினர் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பது அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. அவர்களிடம் எதற்கு சேர்ந்தோம் என்று கூட அவன் எண்ணினான். தான் இருக்கும் இடத்தினை ஒருமுறை சுற்றி பார்த்தான். எல்லாம் பாழடைந்த வீடுகள். அங்கு ஒருவர் கூட வாழவில்லை. அந்த ஊரில் இருந்தவர்கள் எப்பொழுதோ இடம்பெயர்ந்து விட்டனர். வீட்டின் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் ஓட்டை போட்டிருந்தன.

சிறிது தூரத்தில் சுடுகாடு இருந்தது. வித்தியாசமான சப்தங்கள். பேய்களா! ஹகீம் பயந்தான். காலடி ஓசை யாரோடது? நெஞ்சை பிடித்தபடி திரும்பினான். ஓசை நின்றுவிட்டது. அங்கிருந்து ஓடி விடலாமா? வாழ்ந்த வாழ்க்கையை அழித்துவிடும் ஆற்றல் மட்டுமிருந்தால் அல்லது மாற்றி அமைக்க முடியுமென்றால் ஹகீம் அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்க மாட்டான்.

உண்மையான வாழ்க்கையை உணர முடியாமல் வாழ்ந்து முடித்தவர்கள் ஏராளம். படித்த மேதைகள், தத்துவஞானிகள் வாழ்க்கைக்கு பல்வேறு அர்த்தங்களை கற்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் சொல்வது போல் நிஜத்தில் வாழ முடியாது. மயங்கும் வார்த்தைகள், எதுகை மோனைகள். கவிநயங்கள் செயற்கை பூக்களாய் வாசம் தராதவையாகத்தான் இருக்கும். அதை ரசிக்கமுடியுமன்றி வாழ முடியாது.

மீண்டும் காலடி ஓசை. "யாரது?" ஹகீம் கத்தினான். பதில் வரவில்லை. கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எறிவதற்கு தயாராக வைத்துக்கொண்டான். கால்களும் ஓடுவதற்கு தயாராகத்தான் இருந்தன. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.