(Reading time: 27 - 53 minutes)

24. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

றுவீட்டிற்கு வந்திருந்த மகள் கிளம்பிய உடனேயே அறைக்குள் வந்து முடங்கியிருந்த மனைவியை தேற்றும் வழி தெரியாமல் திணறிப் போனார் ரவிகுமார்.

“என்னங்க?” என்று கதறியவரை தோளோடு அணைத்து,

“ஷ்..... அழக்கூடாதுனு சொல்றயில்ல” சாரதாவின் மனநிலையை அறிந்தாலும், மனைவியின் வேதனையை குறைக்க வேண்டி அதட்டினார்.

அதில் சற்று தெளிந்தவரின் அழுகை சற்று மட்டுபட்டது.  இதுதான் சமயமென பேச ஆரம்பித்தார் ரவிகுமார்.

“சின்ன பிள்ள மாதிரி நீயே இப்படி அழுதா, நல்லாவாயிருக்கு?” என்று கேட்டவரை பாவமாக ஏறிட்ட சாரதாவின் கண்களில் மறுபடியும் கண்ணீர் கரைகட்டியது.  மனதை அழுத்தும் பாரத்தை பொறுக்க முடியாது,

“இவளா தானே ஜெய்யை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா? இப்போ இவ நடந்துக்குறதெல்லா.... எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.  முதல்ல நானும் இந்த கல்யாணத்துல விருப்பமில்லாமதா இருந்தே.  ஆனா....இவ என்ன செய்தாலும் சிரிச்ச முகமா, நம்மகிட்ட எதையும் காண்பிச்சுக்காம இருக்க ஜெய் தம்பிய பார்க்கும் போது... என் பொண்ணுக்கு ஒரு குறையும் வராதுனு சந்தோஷ படுறதா இல்லை இவளால அந்த தங்கமான பிள்ளையோட வாழ்க்கை வீணாகுதேனு வருத்த படுறதானு தெரியல.  நான் பிடிவாதமா இந்த கல்யாணத்தை நிறுத்தியிருந்தா ஜெய்யோட வாழ்க்கையாவது நல்லாயிருந்திருக்கும்”

மகளின் வாழ்க்கையை பற்றிய பயம் ஒருபுறமிருந்தாலும் ஜெய்யின் நிலைக்காக வருந்திய மனைவியை புரிந்தாலும், இப்போது தன்னிடம் சொன்னதை மகளிடமோ மருமகனிடமோ சொன்னால் என்னாகும் என்று தோன்றவும்,

“என்ன பேசுறுனு தெரிஞ்சுதா பேசுறியா சாரதா? அன்னைக்கு அத்தனை பேரு முன்னாடி, எதை பத்தியும் யோசிக்காம சரயூவை கொடுத்திருங்கனு கொஞ்சின ஜெய்யை மறுந்துட்டியா? நாம கல்யாணத்தை மறுத்திருந்தா விபரீதமா ஏதாவது கூட நடந்திருக்கலாம்.  அப்படி இருக்கும்போது ஜெய் வாழ்க்கை எப்படி நல்லாயிருந்திருக்குனு நினைக்கிற?” என்று சற்று கண்டிப்பாகவே கேட்டார்.

கணவனின் வார்த்தையிலிருந்த உண்மை உரைத்தாலும், “அப்போ நம்ம பொண்ணு செய்றது சரின்னு சொல்றீங்களா?” என்று ஆதங்கமாய் கேட்க..

“நான் அப்படி சொல்லல” அவசரமாக அதை மறுத்தவரோ, “அவங்க ரெண்டு பேரும் விரும்பிதா இந்த வாழ்க்கைய தேர்ந்தெடுத்திருக்காங்க....என்ன பிரச்சனைன்னாலும் அதை சரி செய்து, முன்னாடி போக வேண்டிய கட்டாயம் ரெண்டு பேருக்கும் இருக்கு” 

“அதே சமயம்...நாலு வருஷமா ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்காம பேசிக்காம இருந்திருக்காங்க... அந்த அளவுக்கு நடந்த விஷயம் அவங்களை பாதிச்சிருக்கு.  அதிலிருந்து வெளி வர கொஞ்ச காலம் தேவைப்படும்.  அது வரைக்கும் நாம பொறுமையா இருந்தாகனும் சாரதா.  அப்படி இல்லாம அவசரபட்டு சரயூவை உடனே மாத்தனும்னு எதையாவது செய்து, அதனால பிரச்சனை பெரிசாகிடுச்சுனாலும், நாமதானே வருத்த படுவோம்”

“நீங்க சொல்றது எனக்கு புரியுது! ஆனா...” கணவனை ஆமோதித்த போதும் மனதை அழுத்திய நிகழ்வில் அச்சத்தோடு அமர்ந்திருந்தார்.

அவரின் கண்களிலிருந்த பயத்தை கவனித்து, மனைவியை தோளோடு சாய்த்து தலையை வருடியவர், “மனசுல வச்சு தவிக்காம, எதுவானாலும் சொல்லுமா சாரதா” என்று தைரியமளிக்க, மடைத்திறந்த வெள்ளமாக எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்.

“அன்னைக்கு காலையில காஃபியோட போயி கதவ தட்டுற...மெதுவா வந்து கதவு திறந்தவகிட்ட ஜெய் தம்பிக்கு கொடுனு சொல்லி கப்பை கொடுக்குற... திருதிருனு முழிக்கிறா”

திருமணத்தின் அடுத்த நாள் காலை நடந்ததை... மகளின் வாழ்க்கை இருக்கும் நிலையும், அது கொடுத்த வருத்தத்தையும், யாருக்கும் தெரியாது மறைத்திட நினைத்ததை இன்று கணவனிடம் சொல்லி, சரயூவின் வாழ்வை சீர் செய்திடும் வேகத்தோடு பேசினார்.

“சீக்கிரமா காஃபியை குடிச்சுட்டு தம்பியோட கீழே வானு சொல்லிட்டு நான் திரும்ப கூட இல்லை....ஜெய் தம்பி அடுத்த ரூமிலிருந்து குளிச்சு ரெடியா வருது.  பார்த்த எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, “இவள என்னன்னு கேட்கலாம்னு நினைக்குறக்குள்ள, நான் அவகிட்ட கேள்வி கேட்க போறேனு எப்படி தெரிஞ்சுதோ அந்த தம்பிக்கு அவசரமா பொண்டாட்டிக்காக பேசுச்சு”  

“சரூ தூங்கிட்டிருந்தாளா....அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு இந்த ரூம்ல குளிச்சு தயாராயிட்ட... நானே கீழ வந்து காஃபி குடிச்சிருப்பேன்... நீங்க எதுக்கு சும்மா அலையுறீங்க?”

“சரூ காஃபியை எங்கிட்ட கொடு” என்று வாங்கியவன், “நீ சீக்கிரமா குளிச்சுட்டு வந்துருடா”

“சிரிச்ச முகமா பொண்டாட்டிய விட்டு கொடுக்காம பேசி, என்னோடவே கீழ வந்த தம்பியை, இவ புரிஞ்சுக்கலையே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.