(Reading time: 27 - 53 minutes)

“என்னை மன்னிச்சிருங்க ராகுல்!” என்றவனின் குரலில் சொல்லொண்ணா வருத்தமிருந்தது.

சரயூவின் அண்ணனாக கோபப்பட்டவன், தன்னிடம் பேசிட காத்திருந்து, இப்போது மன்னிப்பு கேட்கும் ஜெய்யை யோசனையாக பார்த்தான்.  முதன்முறையாக அவன் தரப்பை தெரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டது தவறோ என்று தோன்றவும்...

“பாரு ஜெய்! ஒரு அண்ணனா உன்னை என்னால மன்னிக்கமுடியாது.  அதுக்காக நீ தினமும் ஆஃபீஸ் முன்னாடி வந்து நிக்கிறதையும் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.  சொன்னா புரிஞ்சுக்கோ ஜெய், ஒழுங்கா உன் வழிய பார்த்துட்ட போ”

தங்கையின் நிலையில் எந்த மாற்றமும் இல்லாத போது, அதற்கு காரணமானவனை மன்னிக்கும் மகாத்மாவாக மாற அவனால் முடியவில்லை.  அதனால் ஜெய்யை தள்ளி வைக்க முயன்றான்.

“நான் செஞ்சது தப்புதா...அதுக்காக என்னை அடிங்க திட்டுங்க இல்லையா எதாவது தண்டனை கூட கொடுங்க.  ஆனா என்னை ஒதுக்கிடாதீங்க பாஸ்! சரூவும் மைதியும் என்னை வெறுத்துட்டாங்க.  இப்போ நீங்களும் என்னை தள்ளி வைக்க முயற்சிக்குறது ரொம்ப கஷ்டமாயிருக்கு.  அம்மா அப்பா போன பிறகு கூட தோனாத தனிமையும், எனக்குனு யாருமே இல்லைங்கற உணர்வும் இன்னைக்கு தான் அதிகமாயிருக்கு.  ப்ளீஸ் ராகுல்! கொஞ்ச புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.  எனக்கு சரூ வேணும்!”

ஜெய் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டபடி அமர்ந்திருந்தவன், தங்கயை பற்றி அவன் பேசவும், வேகமாக எழுந்தவன், அதே வேகத்தோடு ஜெய்யின் சட்டையை கொத்தாக பிடித்து...

“போதும் நிறுத்துடா! செய்ய கூடாததை செய்துட்டு, தைரியமா சரயூவை பத்தி பேசுறயா? ஐய்யோ பாவம்னு நினைச்சு உன்னை பேச விட்டா, என்ன வேணாலும் கேட்பியா? வெளிய போடா” கோபத்தில் அவனை பிடித்து தள்ளிவிட்டான். 

அதில் தடுமாறி கீழே விழவிருந்த ஜெய், பக்கத்திலிருந்த மேஜையின் துணையோடு சமாளித்து நின்று....

“நீங்க அடிச்சாலும்...ஏன் கொன்னாலும் கூட எனக்கு சரூ வேணுங்கிறதுல எந்த மாற்றமுமில்லை.  என்னோட காதல் உண்மை! யாருக்காவும் எதுக்காகவும் அதை விட்டுகொடுக்க மாட்டே... ஒரு வேளை நீங்களோ, வேற யாரவதோ இல்லை சரூவே முடியாதுனு சொன்னாலும் சரூ எங்கிட்ட வந்திருவா... என்னோட காதல் அவளை எங்கிட்ட சேர்த்திரும்” நிமிர்ந்து நின்று, உறுதியோடு அவன் சொன்ன தோரணையில் ராகுல் பிரம்மித்து போனான்.

அன்று இவனைக் காண வந்த போதாகட்டும் இன்றாகட்டும் இவன் கொடுத்த அடிகளை தடுக்காமல் வாங்கிய ஜெய்யிடம் இப்போது தெரிந்த அசாத்தியமான நிமிர்வும், கம்பீரமும், நம்பிக்கையும் கண்டு வியந்து நின்றான். 

“காம்பிடேடிவ் எக்சாம் எழுத போனவனை, அவளோட முதல் பார்வையிலயே கவர்ந்துட்டு போயிட்டா” என்று சரயூவை கண்டதும் காதல் கொண்டதுமாக அவன் சொல்ல....

ராகுல் சொல்லிக்கொண்டிருந்ததை தடுத்து, “அவனோட காதலை முதல்ல எங்கிட்டதா சொன்னா தெரியுமா” என்று மைத்ரீ பெருமையாக சொல்லிவிட்டு, “அப்றம் என்னாச்சு?” என்றாள் அடுத்து நடந்த்தை தெரிந்துகொள்ளும் ஆவலில்.

அதை ரசித்தவனாக, “காதலிக்கிற எனக்கு அவனோட காதல் உண்மைனு தெரிஞ்சது” என்றவனின் பார்வையில் மைத்ரீயின் முகம் சிவந்தது.

“நீங்க காதலிக்கிற கதை எனக்கு தெரியாதா?” என்று போலியாக சலித்தவளை இறுக்கி அணைத்து விடுவித்தவன், “என் காதல்ல என்ன குறை கண்ட மையூ? அப்படி ஏதாவது இருந்தா சொல்லிடு...இப்போவே சரி செய்திடலாம்” ஹஸ்கி குரலில் சொன்னவன், அவள் இதழோடு இதழ் பதித்தான்.

கணவனின் காதலில் கரைந்தவளுள் எழுந்த சந்தேகத்தில் அவனை விலக்க, “மையூ!” கிறக்கமான ராகுலின் குரலை கண்டுகொள்ளாது அவன் முகத்தை கைகளில் ஏந்தி, “நானும் ஜெய்யும் பேசியதை உங்கட்ட சொல்லலைனு என் மேல கோபம் வரலையா?” என்று தவிப்போடு அவள் கேட்க...

மைத்ரீயின் குரலிலிருந்த வித்தியாசத்தை புரிந்து கொண்டவன், தவிப்பு நிறைந்திருந்த முகமெங்கும் முத்தமிட்டு, தன்னுடைய பதிலை சொல்லாமல் சொன்னான்.

ராகுலின் செயலின் அர்த்தம் புரிந்தும் தவிப்போடு பார்த்தவளிடம், “எதுக்கு கோபம் வரனும்?” அவன் பதில் கேள்வி கேட்டான்.

“இல்லை! என்னோட ஃப்ரெண்டை காப்பாத்தனும்னு விஷயத்தை உங்கட்ட மறைச்சிட்டனு தோனலயா? அன்னைக்கு மட்டும் உங்க ஃபோன் காலை நான் ஆன்சர் செய்யாம இருந்து... இந்த விஷயம் உங்களுக்கு வேற யார் மூலமாவாவது தெரிஞ்சிருந்தா, என் மேல கோபம் வந்திருக்கும்.  அது நியாயமான கோபமும் கூட.  அதான்...” மனதிலிருந்த படபடவென கொட்டியவள், அவனுடைய இளநகையில் குழம்பி போனாள்.

“இந்த விஷயத்தை என்னோட நல்லதுக்காக நீ மறைச்சிருக்கும் போது, உன் மேல கோபம் வருமா, என்ன? ஜெய்யை காப்பத்தனும்னு நினைச்சிருந்தா அவனை அறைஞ்சிருக்கவும் மாட்ட... அவங்கிட்ட இப்படி பேசாமலும் இருந்திருக்க மாட்ட... சரயூவோட அண்ணனா நான் இதை எப்படி ஹாண்டில் பண்ணுவன்னு பயந்து தானே மறச்ச... எனக்காக இவ்ளவு யோசிச்ச புத்திசாலி பொண்டாட்டி மேல காதல் வருவதுதானே நியாயம்?” என்று அவன் புருவங்களை உயர்த்தி புன்னகை பூக்க...மைத்ரீ அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.