(Reading time: 27 - 53 minutes)

அவளின் மனதை படித்தவனாக, “அது உண்மை தானே மையூ! போன வேலையை சீக்கிரமா முடிச்சுட்டேன்” என்று இளநகை புரிந்தவன், “சஞ்சயைதா முதல்ல பார்க்கனும்னு நினைச்ச...ஆனா வீட்ல சரயூவை பார்த்தப்புறம் ஜெய்யை கொல்ற அளவுக்கு கோபம் வந்தது.  அந்த நேரத்துல அவனை என்ன வேணாலும் செய்திருப்ப.  அதனால அவனை பார்க்க கூடாதுனு என்னை நானே கண்ட்ரோல் செய்துட்டு ஆஃபிஸ்லியே நிறைய நேரத்தை செலவழிச்ச.  வீட்டுக்கு வந்தாலே அம்மாவோட புலம்பல்.  சரயூ ரூமை விட்டு வெளிய வரவே இல்லை.  எப்படியெப்படியோ பேசி பார்த்தும் அவகிட்டிருந்த எதையும் தெரிஞ்சுக்க முடியலை” 

இதற்கு தானே ராகுலிடம் எதையும் சொல்லாது மறைத்தாள்.  ஆனால் தன் மூலமாகவே அவனுக்கு எல்லாமே தெரியவந்திருப்பது அவளுக்கு பெரும் அதிர்ச்சி!

“ஆனா நான் எது நடக்க கூடாதுனு நினைச்சு ஆஃபிஸ்ல இருந்தேனோ அது அங்கேயே நடந்தது”

“ஜெய் ஆஃபிஸ் வந்தானா?” என்றாள் படபடப்பாக...

“ஆமா! என்னை பார்க்க ஆஃபிஸ்கே வந்தான்”

ன்ன விஷயம்?” அடக்கப்பட்ட கோபத்தோடு ராகுல் கேட்கவும்...

“உங்கட்ட கொஞ்ச பேசனும்.... நீங்க சிங்கப்பூர்லிருந்து வந்தது தெரிஞ்ச உடனே கிளம்பி வந்துட்ட” என்றவன் இப்போது ராகுலை பார்ப்பதை தவிர்த்து அமைதியாக....

அவனே பேசட்டுமென்று ராகுல் காத்திருக்க... பெரும் தயக்கோடு ஜெய்,

“அது...அது வந்து...சரூவை பத்தி....உங்கட்ட பேச”

கண்களில் சீற்றத்தோடு, “ம்.... என் தங்கச்சியை பத்தி என்ன?” தங்கச்சி என்ற வார்த்தையில் அவன் கொடுத்த அழுத்தம், ‘அவளுக்கு அண்ணன் நான் இருக்கிறேன்’ என்ற அர்த்தம் மறைந்திருந்தது.

ராகுலின் சீற்றத்தில், அவனுக்கும் ஏதும் தெரிந்திருக்குமோ என்ற எண்ணம் எழுந்தது.  இல்லையென்றாலும் அவனுக்கு தானே அதை சொல்ல வந்திருப்பதை நினைத்தவன் மனதை திடபடுத்திக்கொண்டு ரிசார்ட்டில் வைத்து நடந்ததை சொல்லி மன்னிப்பை வேண்டினான்.

அன்றே ஜெய் சொன்னதை ஃபோனில் கேட்டிருந்தாலும், தங்கையின் நிலையை பக்கத்திலிருந்து பார்த்தவனுக்கு, இன்று தான் நடந்ததை முதன்முறையாக கேட்பவன் போல் கொதித்து போனான்.  கலகலப்பான அவர்கள் வீட்டின் உயிர்ப்பான சரயூ, அறையில் முடங்கியிருப்பதற்கு காரணமானவன் தன் எதிரில் தைரியமாக வந்து பேசியதை பொறுக்காதவனாக அவன் மேல் பாய்ந்தான்.

“என்ன தைரியம்டா உனக்கு? செய்றதெல்லாம் செய்துட்டு, எங்கிட்டயே வந்து அதை சொல்ற.  உன்னையெல்லாம் நல்லவனு நினைச்சு என் தங்கச்சியோட வாழ்க்கையே பாழாக்க இருந்தோமே” யாரிடமும் பகிரமுடியாது குமுறிக்கொண்டிருந்ததை இப்போது கொட்டியவன் ஜெய்யின் முகத்தில் குத்தினான்.  அதில் அவன் மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது.

அது எந்த வகையிலும் ராகுலை பாதிக்கவில்லை.  அவனுக்கிருந்த கோபம் ஜெய்யை கொன்றாலும் குறையாது எரிமலை குழம்பாய் தகிக்க, ஜெய்யை கீழே தள்ளி காலால் உதைக்க ஆரம்பித்தான்.

“சரயூக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு தெரியுமாடா? காலேஜுல சேர்ந்த நாளிலிருந்து உன்னை பத்தி அவள் பேசாத நாளே கிடையாது.  அவகிட்ட போயி நீ இப்படி நடந்திருக்கியே...ச்சீ”

குற்றவுணர்வில் சிக்கியிருந்த ஜெய், சரயூவின் மனதை சொன்ன ராகுலை தடுக்கவும் மறந்து செயலற்று படுத்துகிடந்தான்.  எத்தனை நேரம் அவன்  அப்படியிருந்தானோ தெரியாது...திடீரென ராகுல் அவனை இழுத்து வந்து தெருவில் தள்ளிவிட்டு, “என் கண்ணுல விழுந்துறாத, உன்னை கொன்னாலும் கொன்னுடுவேன்” என்று எச்சரித்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டான்.

ராகுலின் கோபத்தில் சட்டை கிழிந்து, மூக்குடைந்து, உடலெங்கும் காயங்களோடு விழுந்திருந்த ஜெய் தன் தவறுக்கு தண்டனை கிடைத்துவிட்டதாக நினைத்தவனுக்குள் குற்றவுணர்வு சற்று குறைந்திருந்தது.  அவன் செயலுக்கு சரயூ எதிர்வினை காட்டியிருந்தால் கூட மனதிற்கு ஆறுதலாக இருந்திருக்கும்.  ஆனால் அவளின் அமைதி அவனை உயிருடன் கொன்றுக் கொண்டிருந்தது.  ராகுலாவது தன் மீதான கோபத்தை வெளிபடுத்தினானே என்று சிறு நிம்மதியும் எழுந்தது.

அதன் பிறகு ராகுலின் அலுவலக வாசலில் ஜெய் காத்திருப்பது வழக்கமானது.  இருமுறை காவலாளியை ஏவிவிட்ட ராகுல், சலித்து போய் அவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான்.  மைத்ரீயும் தன்னை ஒதுக்கிவிட, தன் பக்கத்தை ராகுலிடமாவது சொல்லி விட வேண்டுமென தவமிருந்தான்.

மாதங்கள் கடந்திருக்க...பக்தனுக்காக கடவுளே வரம் கொடுக்கும்போது ராகுல் எம்மாத்திரம்..... ஜெய்யின் தவத்தில் மனமிறங்கியவன், அவனை அழைத்து பேசினான்.

“உனக்கு என்ன சொல்லனும் ஜெய்?” என்றவனின் கேள்வியில் ஆச்சரியமாக அவனை ஏறிட்டான்.  சரயூவோ, மைத்ரீயோ உணர முடியாதது....ராகுலுக்கு எட்டியது.  தன் மனதுக்கு நெருக்கமான இருவரும் புரிந்துகொள்ள முடியாததை ராகுல் எப்படி உணர்ந்தான் என்ற ஆச்சரியம் இவனுக்கு.  ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணுக்கு தான் தெரியும் என்பது போல ஒரு ஆணின் மனதை பெண்ணை விட மற்றொரு ஆணுக்கு தான் புரியுமோ!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.