(Reading time: 27 - 53 minutes)

“சாரி சரயூ! என் பொண்டாட்டிக்கு பக்கத்து சீட்டை யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது” என்றவன் மனைவியை பார்த்து கண் சிமிட்டவும், மைத்ரீயின் முகம் சிவந்து போனது.

“அங்க என்ன வெட்டியா பேசிக்கிட்டு....சரயூ! உனக்கு வேற தனியா சொல்லனுமா? உன்னோட இடத்துல போயி உட்காரு...நேரமாகுது” என்று மகளை விரட்டியவர், ஜெய்யிடம், “தம்பி! அவளுக்கு ஜன்னலோரமா உட்காரனும்னா பிடிக்கும்.  நீங்க கொஞ்சம்....” சாராதா சொல்லவும், மனைவியை பார்த்தபடி எழுந்து அவள் உள்ளே செல்ல வழிவிட்டு நின்றான்.

சரயூ இப்போதும் தயங்கி நிற்க, மகளின் செயலில் வருத்தமுற்றவர், “ஜன்னல் சீட்டுதா கிடைச்சிடுச்சுல்ல...மசமசனு நிக்காம போயி உட்காரு” என்று அதட்டினார் சாரதா.

தன்னுடைய ஆசை நிறைவேறிய சந்தோஷம் சிறிதுமின்றி, அவனருகில் உட்கார்வதை தவிர்ப்பதற்காக மனைவி ராகுலிடம் கெஞ்சியது, தயங்கி தயங்கி அவள் நின்ற விதம், இப்போதும் ஜன்னலோடு ஒட்டிக் கொண்டிருப்பதும் அவனுக்கு வருத்தத்தை கொடுத்தது.

மகளை உருட்டி மிரட்டி ஜெய்யோடு உட்கார வைத்த சாரதாவிற்கு, இப்படியிருக்கும் இவர்களின் உறவை சரிபடுத்த முடியுமா என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது.  குலதெய்வத்தை வழிபட்டால் குடும்பத்தில் இருக்கும் குறைகள் தீர்ந்து வளம் பெருகும் என்பது நம்பிக்கை.  அந்த நம்பிக்கையை பின்பற்றி தான் சாரதா இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.  ஆனால் மகளின் செயலோ, மனதில் பாறாங்கல்லாய் கனத்தை தூக்கி வைக்க... அதே யோசனையில் அவரும் மூழ்கிபோனார்.

விடியற்காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டுமென்பதால் இரவு எட்டு மணிக்கு கிளம்பியிருந்தனர்.  இரண்டு குடும்பங்களும் ஒரே காரில் செல்லவும் முடியாது... அதோடு பத்து மணி நேர இரவு பயணமும் என்பதால் ராகுல்தான் டெம்போ ட்ராவ்லெரை ஏற்பாடு செய்திருந்தான்.

வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சரயூவிற்கு தூக்கம் வரவும் ஜன்னலில் தலையை சாய்த்து கொண்டவள், சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கியும் விட்டாள்.  வண்டியின் வேகத்திற்கு மேடு பள்ளத்தில் போகும் போது குலுங்கியதில் தலை ஜன்னலில் முட்ட, மறுபக்கத்தில் தலையை சரித்தவள் ஜெய்யின் தோளில் சாய்ந்தாள்.

சரயூவைப் பற்றிய கவலையில் கண்மூடியிருந்தவனின் வலது தோளில் திடீரென கனம் கூடவும் விழித்தவன் மனைவியின் செயலில் இனிமையாக அதிர்ந்தான்.  இத்தனை நேரம் மனதை அழுத்திய அவளின் செயலை பின்னுக்கு தள்ளி அவனுள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.  அசையாது அப்படியே அமர்ந்து கொண்டான்.  ஏனெனில் அவன் அசைவில் அவள் எழுந்துவிட்டால் இந்த நெருக்கமும் இல்லாமல் போகுமே!

ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவளின் தலை இவன் தோளிலிருந்து சருக்கவும், இரண்டு மூன்று முறை அதை சரி செய்தவன்....’இது சரிபடாது’ என்று சொல்லிக்கொண்டே அவள்புறமிருந்த தன் வலது கையை மெதுவாக உருவியவன், அவளை நெஞ்சோடு சாய்த்து, வளைத்து கொண்டான்.

இவன் செயலில் சற்று தூக்கம் கலைந்தவள், “ம்ஹும்...” என்று சிணுங்கியபடி, முகத்தை இன்னும் ஆழமாக அவன் நெஞ்சில் புதைத்து கொண்டாள்.

அவள் சிணுங்கலில்...தூக்கம் கலைந்துவிட்டால், தன் கை வளைவில் அவளிருக்கும் சுகம் தொலைந்து போகுமோ என்று பயந்தவன் மறுபடியும் அசையாது அமர்ந்து கொண்டான். 

விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, தெரு விளக்குகளிலினால் வண்டியில் விழுந்த சிறு வெளிச்சத்தில் சரயூவின் முகத்தை ஆசையாக பருகியவன், முன்னெற்றி முடிகளை விலக்கி காதலோடு தன் இதழை பதித்தான்.

எல்லாம் சரியாக நடந்திருந்தால், இந்நேரம் அவளை தூங்க விட்டிருப்பானா? தன்னை தானே கேட்டு கொண்டவனிடத்தில் ஏக்க பெருமூச்சு எழுந்தது.  ஆனாலும் அந்த நேர சுகத்தை அனுபவித்தபடி விழித்தே கிடந்தான் ஜெய்.

விடியற்காலை ஐந்து மணிக்கு தஞ்சை மாவட்டத்திலிருக்கும் அரசியூரை சென்றடைந்தனர். 

குலதெய்வ வழிபாட்டுக்கு மட்டுமே இங்கு வரும் ரவிகுமார், தன்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த மண்ணின் பெருமையை சம்மந்தியிடம் பேசியபடி இறங்கி நடந்தனர்.

வண்டியின் விளக்குகள் ஒளிர ஒவ்வொருவராக விழித்து கொண்டனர். சரயூவோ அத்தனை பளிச்சிடும் வெளிச்சத்திலும் தூக்கம் கலையாமல் ஜெய்யின் மார்பில் அழகாக சாய்ந்திருந்தாள்.

இவர்களின் நிலையை பார்த்த பெரியவர்கள், கண்டும் காணாது இறங்கி சென்றுவிட, ஆதர்ஷும் ராகுலும் அப்படியில்லாமல் கேலியில் இறங்கினர்.

“மச்சா! நாம சாமி கும்பிட வந்ததா ஒரு ஞாபகம்” என்று நமட்டு சிரிப்போடு ராகுல் ஜெய்யை பார்க்க...

ஆதர்ஷ், “தப்பு...தப்பு...இங்க யாரோ ஹனிமூன் கொண்டாட வந்திருக்குறதா இல்ல நான் கேள்விபட்டேன்” என்று மிகவும் சீரியசாக சொல்லவும்... ஜெய் சங்கடமாக நெளிந்தான்.

ப்ரியா தான் அவன் உதவிக்கு வந்தாள்...”குளிச்சு ரெடியாக வேணா? இங்க ஜெய்கிட்ட என்ன வம்பு வளர்த்துக்கிட்டு...இறங்குங்க தர்ஷ்” கண்வனை அங்கிருந்து கிளப்பியவள், “மைதி! ராகுலை கையோட கூப்பிட்டிட்டு வா” என்றுவிட்டு, ஜெய்யிடம் திரும்பியவள், “நாங்கெல்லா குளிக்க நேரமாகும்...நீங்க மெதுவா வந்தா போதும் ஜெய்” என்று சொன்னவள் கணவனோடு இறங்கி சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.