(Reading time: 12 - 24 minutes)

"இந்தா எடுத்துக்க" என்று மிட்டாயை அவள் முன் நீட்டினார்.

"எனக்கு வேணா"

"பரவால்ல எடுத்துக்க"

மிட்டாயின் மேலிருந்த ஈர்ப்பால் அதை வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள் பஹீரா. ஓடியவள் அடுத்து தெருவில் நின்று தோழியும் அவளின் அம்மாவும் எங்கு வருகிறார்கள் என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு மிட்டாயை ருசி பார்க்கத் தொடங்கினாள்.

மிட்டாயின் சுவை மாலிகாவை நினைவுபடுத்தியது. அவளை பார்த்து ஐந்து நாட்கள் கடந்துவிட்டது. வீட்டுப்பாடம், பரீட்சை, அண்ணன் தொல்லை என போராட்டங்களின் மத்தியில் மாலிகாவை பார்க்க முடியவில்லை. இன்றாவது பார்க்கலாம் என்றால் இன்றும் வீட்டுப்பாடம் அதிகமாக இருக்கிறது, மழை வேறு! 'இந்த மழை எதற்காக பெய்து என்னை தொல்லைப்படுத்துகிறது' என்று கூட நினைத்தாள் பஹீரா.

வழக்கம் போல் அமேலியாவின் வீட்டை வந்தடைந்தாள் பஹீரா. அந்த வீடு பாதி இடிந்து மீதி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அளவிற்கு அபாயகரமானதாக இருந்தது. மழை வேகமெடுத்தது. அமேலியா இருந்த அறையில் தன்னை புகுத்திக்கொண்டாள் பஹீரா. வீட்டில் அந்த அறை மட்டும் ஏதோ உருப்படியாக இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் அறையை பிரகாசமாக்கினாள். வீட்டுப் பாடம் எழுத அந்த வெளிச்சம் போதுமானதாக இருந்தது.

வீட்டுப் பாடத்தை எழுதிக்கொண்டே ஹகீம் இன்னும் வரவில்லையே என கவலைப்பட்டாள். அவ்வப்போது எழுந்து ஜன்னல் வழியாக பார்த்தாள். சாலையே இருளாக இருந்தது. அவ்வப்போது தோன்றும் மின்னலின் ஒளி சில நொடிகள் சாலையை பிராகாசமாக காட்டியது. சரியாக ஒரு மணி நேரத்தில் ஹகீம் மழையில் நனைந்தபடி வந்து சேர்ந்தான்.   

"ஏன் காலதாமதம்?"

"மழையில நனைஞ்சிட்டு எப்படி சீக்கிரம் வர முடியும்?" எரிச்சலோடு சொன்னான் ஹகீம்.

"ஏன் இப்படி கோபப்படுற அண்ணா?"

"நீ அது போல கேள்வி கேக்குற"

பஹீரா ஹகீமை வேதனையோடு பார்த்தாள்.  

"இந்தா சாப்பிடு" என்று வாங்கி வந்த உணவை நீட்டினான் ஹகீம்.

அதை வாங்கி பிரித்து சாப்பிட தொடங்கினாள் பஹீரா.  

"நீ சாப்பிடலையா அண்ணா?"

"எனக்கு பசிக்கல"

அந்த பதில் பஹீராவிற்கு புதுமையாக இருந்தது. எப்பொழுதும் தன்னோடு சேர்ந்து உண்ணும் பழக்கமுடையவன் இன்று ஏனோ அந்நியப்பட்டு நிற்கிறான்.

"நீயும் வா சேர்ந்து சாப்பிடலாம்"

"எனக்கு தான் பசிக்கலைனு சொல்லுறேன்ல" ஹகீம் எரிந்து விழுந்தான்.

பஹீரா சாப்பிடாமல் உணவை மூடி வைத்தாள். ஹகீம் அதை கண்டுகொள்ளவில்லை.

"பஹீரா நான் கிளம்பணும். நீ தூங்கு அப்புறம் வரேன்"

"எங்க போற?"

"வேலையிருக்கு"

"எங்கயும் போகாத. தனியா இருக்க பயமா இருக்கு"

"சீக்கிரம் வந்துருவேன்"

பஹீரா அழுதாள்.

"குழந்தை போல அழாதே பஹீரா" எரிச்சலில் ஹகீம் கத்தினான்.

பஹீரா விடாமல் அழுதாள். வேறு வழியில்லாமல் பஹீராவை சமாதானப்படுத்த ஹகீம் அங்கிருந்தான்.

அவன் உடல் பயத்தால் நடுங்கியது. சொல்ல முடியாத காரணத்தை மனதிற்குள் மென்றுகொண்டிருந்தான். எதற்கும் துணிந்தவன் போல பாசத்தையும் அன்பையும் துறந்துவிட்டு மிருகத்தின் குணங்களை மனதிற்குள் ஊடுருவவிட்டான். அவன் சார்ந்த தீவிரவாத இயக்கம் நயவஞ்சக எண்ணங்களையும் கொலை செய்யும் கொடூர மனப்பான்மையையும் எதையும் செய்ய வல்லமை கொண்டவனாய் அவனை மாற்றியது 

இப்பொழுது ஹகீமிற்குள் இருக்கும் எண்ணங்கள் பழி வாங்குதல் மட்டுமே. உயிருக்கு உயிர் இவை தான் அவன் கற்றுக்கொண்ட தத்துவம். 'பந்தம் பாசம் இவையெல்லாம் போராளிகளுக்கு இருக்கக்கூடாது. அவர்கள் எந்நேரத்திலும் தங்கள் இன்னுயிரை கொடுக்க தயாராக இருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் உயிர்கள் அத்தனையும் புரட்சிகளாக வெடித்து அமெரிக்கர்களை பழி வாங்கும்'. இவையெல்லாம் தீவிரவாத இயக்கம் அவனுக்கு வழங்கிய போதனைகள்.

"இந்தா சாப்பிடு". பஹீரா அவனுக்கு உணவை ஊட்ட கைகளை நீட்டினாள்.

"எனக்கு வேணாம்"

"நீ சாப்பிடலைனா நானும் சாப்பிட மாட்டேன்"

"சாப்பிடாத"

"நீ ஏன் இப்படி நடந்துக்குற? காட்டுல இருக்க மிருகத்தை போல"

ஹகீம் அமைதியாக இருந்தான். பஹீரா மறுபடியும் உணவை நீட்டினாள். வேண்டா வெறுப்பாக வாயில் வாங்கிக் கொண்டான் ஹகீம். இருவரும் உண்டார்கள். மழை மெதுவாக குறைந்து அவ்விடமே குளிர்ச்சியால் நிரம்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.