(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 03 - பூஜா பாண்டியன்

En arugil nee irunthum

வாசலில் வீல் சேரில் இருந்தவனைப் பார்த்து சுனைனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. பார்ப்பதற்கு பெரிய இடத்து பையன் போல் இருந்தான். தரமான ஆடைகள், கையில் ராடோ வாட்ச், அவனது வீல் சேரும் சாதாரணமாக இல்லை. யாரும் தள்ள வேண்டியது இல்லாமல் தானே செயல் படுத்தும் வகையில் பாட்டரி மூலம் இயங்கும் வகையில் இருந்தது.

அதற்குள் பால்கியும் பேப்பர் எடுக்க வெளியில் வர, இவனைப் பார்த்து அவரும் குழப்பத்தில் மூழ்கினார். பால்கியும், சுனைனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், அவனை மற்றவர்க்கு தெரியுமோ என்று. கண்களாலேயே தெரியாது என்றும் பேசிக் கொண்டனர்.

“வணக்கம் அத்தை, மாமா” என்றான் வந்தவன்.

“எங்களுக்கு சொந்தமாபா நீ? நேற்று கல்யாணத்திற்கு வராமல் இன்று வந்திருக்கிறாயா? என பால்கி அவனிடம் வினவ.

“இல்லை மாமா, என்று பால்கியிடம் கூறி திரும்பி, காம்பவுன்ட்க்குள் நின்றிருந்த  தனது  எஸ்.யூ.வி. மாடல் ஆடி காரை நோக்கினான். இவர்களும் அவன் பார்வை சென்ற திசையில் பார்த்த பொழுது, காரில் இருந்து பூமிஜா இறங்கினாள்.

இருவருக்கும் அவள் கிடைத்தது கண்டு சந்தோஷமாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று குழப்பமாக இருந்தது.அதற்குள் குமாரும், வசுவும் கூட வெளியே வந்தனர்.

வந்த புதியவனை விட்டு அனைவரும் பூமிஜாவிடம் சென்றனர்.

“என்ன பூமி, என்ன ஆச்சு நேற்று” என்று அப்பொழுதும் அவள் மேல் கோபப்படாமல் கேட்டார் பால்கி. அவளிடம் சரியான காரணம் இருக்கும் என்று அப்பொழுதும் நம்பினார்.

சுனைனாவிற்கு தான் கோபம் தலைக்கு மேல் வந்தது, “என்ன என்று சொல்லு பூமி” என்று பதட்டமானார்.

அதற்குள், அபியும், உத்ராவும் இறங்கி வந்தனர், அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தபடி.

பூமிஜா மெதுவாக நடந்து வந்து, அந்த புதியாவனின் அருகில் நின்று, “அப்பா இவர் ஆதித்யா விக்னேஷ். ஆதித்யா குருப் ஆப் கம்பெனிஸின் சேர்மன்.

“அது சரிமா, நான் உன்னைப் பற்றி கேட்டால், நீ அவரைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்க. நேற்று என்ன நடந்தது? அதை முதலில் சொல்லு.” என்றார் பால்கி.

சற்று நிதானித்து மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள் பூமிஜா, “நேற்று எனக்கும் இவருக்கும் ரெஜிஸ்டர் ஆபிசில் திருமணம் நடந்தது.” என்று கூறிய பொழுது அங்கு சற்று நேரம் நிசப்தம் நிலவியது. யாருக்கும் பேச்சே வரவில்லை.

முதலில் சுதாரித்தது, அபிமன்யு தான், “சரி வெளியே நின்று பேசாமல் உள்ளே போகலாம் மாமா, அத்தை நீங்க போய் ஆரத்தி கரைத்து எடுத்து வாருங்கள்” என கூறினான்.

அதற்குள் ஆரத்தி தட்டுடன் வந்த வசு, “பூமி நீ அவர் பக்கமா சேர்ந்து நில்லு” என்று கூறி ஆரத்தி எடுக்க ஆரம்பித்தார்.

என்ன நடக்குது இங்க என்று பால்கி புலம்பாத குறை தான். தன் மனைவியைப் பார்த்தார், சுனைனாவும், வசுவுடன் சேர்ந்து ஆரத்தி தட்டின் மறு முனையை பிடித்து சுற்ற ஆரம்பித்திருந்தார். பால்கி எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.

எல்லோருக்கும் சற்று சங்கடமாகத் தான் இருந்தது. அபி தான் இருவரையும் உள்ளே அழைத்து வந்தான். பால்கி, பூமிஜாவைப் பார்த்து

“இவருக்கு இப்போ ஏதாவது விபத்தில் இப்படி ஆகி இருக்கிறதா?” என்று கேட்டப் பொழுதே அவரது குரல் உடைந்திருந்தது. இது தற்காலிகமா இல்லை நிரந்தரமா என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகம் இருந்தது அந்த கேள்வியில்.  இது தற்காலிகமே என்ற பதில் வர வேண்டுமே எதிர்ப் பார்ப்பும் அதில் இருந்தது.

“இல்லை அப்பா, சிறு வயதில் வந்த விஷ காய்ச்சலில் இப்படி ஆகி விட்டது.” என பூமிஜா கூறும் பொழுதே பால்கி நெஞ்சை பிடித்துக் கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

 “அப்பா” என்று உத்ரா பதற, சுனைனாவும் பதறி அவர் பின்னால் சென்றனர். அவர்களுடன் பூமிஜாவும் சேர்ந்து கொண்டாள்.  அவர்கள் இருவரையும் நகர்த்தி பூமிஜாவைப் பார்த்து

“ என்னிடம் சொல்லி விட்டு செய்து இருக்கலாமே பூமி” என்றார் பால்கி.

“சொல்லி இருந்தால் நீங்கள் ஒப்புக் கொண்டு இருக்க மாடீர்கள் என்று தான் சொல்லவில்லை அப்பா “ என்று பூமிஜாவும் கண் கலங்கினாள்.

“சிறு வயதில் என் மகளின் இரக்க குணத்தை பார்த்து எல்லோரிடமும் சொல்லி பெருமை பட்டுக் கொள்வேன். ஆனால் அவளது இரக்க குணமே அவளது வாழ்க்கைக்கு பெரும் சுமையாக வந்து விட்டதை என்னும் பொழுது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை பூமி.” என்று கூறி கண்ணீர் விட்டார் பால்கி.

“அவர் ரொம்ப நல்லவர் அப்பா” என கூறி அவரை தேற்றினாள் பூமிஜா.

“வெறும் நல்லவரா மட்டும் இருந்தா போதுமா பூமி. என் மகளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டாமா?

“எல்லோரும் இப்படியே யோசிச்சா அவரை யார் தான் திருமணம் செய்து கொள்வார்கள் அப்பா?”

“அதற்கு என்று சில பேர் இருப்பாங்கம்மா, அவர்கள் செய்து கொள்வார்கள்.

“அப்படியே செய்தாலும் அவருடைய பணத்திற்காக தான் இருக்கும் அப்பா.”

“நான் என் மகளைப் பற்றி கவலைப் படுகிறேன். நீ அவரைப் பற்றி கவலைப் படுகிறாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.