(Reading time: 7 - 14 minutes)

19. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

வளது பதட்டமான குரலானது அவனுக்கு தனது நிலையை விளக்கிட, தன்னை திடப்படுத்திக்கொண்டு “ஒன்னுமில்லை… கொஞ்சம் சீக்கிரம் போகணும்…” என்றதும், “நான் இறங்கிக்கிறேன்…” என்றாள் அவளும் வேகமாய்…

“இல்லை… நான் உங்களை வீட்டுல விட்டுட்டு போறேன்…”

அவன் தெளிவாய் உரைத்திட, “ஏதோ பிரச்சினை மாதிரி தெரியுது… நீங்க அவசரமா வேற போகணும்னு சொல்லுறீங்க… இதுல நானும் ஏன் தடையா இருக்கணும்… அதனால தான் சொல்லுறேன்… என்னை இறக்கி விட்டுருங்க இங்கேயே….” என்றாள் அவளும் நிலைமையை புரிந்து கொண்டு…

“அவசரம் தான்… நான் இல்லைன்னு சொல்ல்லை… ஆனா, அதுக்காக உங்களை இங்கேயே விட்டுட்டுப் போகவும் நான் தயாரா இல்லை…”

“இல்ல… நான் என்ன சொல்லுறேன்னா….”

அவள் சொல்லி முடிப்பதற்குள், அவன் செல்போன் மீண்டும் சிணுங்கிட, விரைந்து போனை எடுத்தான் அவன்….

“அம்மா… வந்துட்டே இருக்கேன்மா…”

கலைவாணி பேசுவதற்குள் அவன் முந்திக்கொண்டு சொல்ல, அந்தப்பக்கம் அவர் என்ன சொன்னாரோ,

“வாட்?...” என்றபடி சடன்பிரேக் போட்டு காரை நிறுத்தினான் அவன்…

அவன் முகமெங்கும் வேதனை பரவிட, தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவாறு,

“அம்மா… அழாதம்மா… நான் இப்போ வந்துடுறேன்…”

அவனது குரலில் அழுகை தென்பட, அவளுக்கு நிலைமை சிக்கலாக இருப்பது புரிந்தது…

“உங்க வீட்டுக்கேப் போகலாம்… நானும் வரேன்…”

அவள் சட்டென சொல்லிட, திரும்பி பார்த்திட்டவனின் முகத்தில் ஏகப்பட்ட வலிகள்… அதனூடே ஒரு சிறு சந்தோஷமும் எட்டிப்பார்த்திட, அவளுக்கு அது புரிந்திடவில்லை…

“இல்ல வீட்டுல உங்களைத் தேடுவாங்கல்ல?...”

அவன் திணறியபடி கேட்டிட, “உங்க போன் தரீங்களா?...” என அவனிடம் அவள் கேட்டிட, அவனும் தன் போனை கொடுத்தான்…

தன் அம்மாவிற்கு போன் செய்து, வர சிறுது தாமதம் ஆகும் என கூறிவிட்டு போனை திரும்ப அவனிடம் கொடுத்தாள்…

அவனும் வேகமாக வீட்டிற்கு சென்றிட, அங்கே அவனின் அன்னை வாசலிலேயே காத்திருந்தார் அவனுக்காக…

“ப்ரசன்…..” என அவனை நோக்கி ஓடிவந்தவரை கைத்தாங்கலாகப்பிடித்துக்கொண்டான் அவன்…

“அம்மா….” என்றவனுக்கும் தொண்டை அடைத்திட, அவனது அப்பா வாசலில் நிற்பதை அறிந்து தகப்பனை பார்த்திட்டான் அவன்…

அவரோ வாசற்படியில் சாய்ந்து கல்லாய் நின்றிருக்க, தகப்பனையும் தாண்டி அவனது விழிகள் உள்ளே பார்த்திட,

“அண்ணா…” என்றபடியே ஓடிவந்தாள் அவனை நோக்கி ஒரு பெண்…

“ஜாக்குலின்…” என்றவனின் விழிகளும் கலங்கியிருக்க,

“என்னை விட்டு போகமாட்டார்னு சொன்னாருண்ணா… இப்போ அவர் என்னை விட்டு மொத்தமா போயிட்டார்…”

அவள் அழுதுகொண்டே கூறிட, அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன் தானும் அழ, கலைவாணியும் அழுதுவிட்டார் வெகுவாகவே…

“எப்படிம்மா?...”

அவனால் தாங்க இயலாது கேட்டிட, “ஜாக்குலின் அப்பா, அவளை கூட்டிட்டு போக வந்தாருடா… நல்ல விதமா தான் பேசினார்… மகனையும் மருமகளையும் தன்னோட அழைச்சிட்டு போக விரும்புறேன்னு சொல்லிட்டிருந்தார்… நானும் நம்பிட்டேண்டா ஒரு நிமிஷம்… அப்புறம் யாரும் எதிர்பாராத விதமா, ஜாக்குலினை அவர் தன்னோட துப்பாக்கியால சுடப்போக, நம்ம ரஞ்சித்…. இடையில….”

மேற்கொண்டு சொல்ல முடியாது கலைவாணி கதறி அழுதிட, அவரைப் பார்த்து ஜாக்குலினும் அழுதாள் ஏங்கி ஏங்கி…

இருவரையும் என்ன சொல்லி சமாதானப்படுத்துவான் அவன்?... போனவன் திரும்பி வருவானென்றா?... தன் ஒரே தம்பி உயிர்பிழைத்து மீண்டும் உயிர்த்தெழுவான் என்றா?...

அவனும் மனதிற்குள் வெடித்து அழ ஆரம்பித்த தருணம், அவனது காலடியில் அழுதபடி விழுந்தாள் ஜாக்குலின்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.