(Reading time: 13 - 25 minutes)

“சாரிப்பா, இதை முன்பே உங்களிடம் சொல்லி இருந்தால், நீங்க கண்டிப்பா ஒப்புக் கொண்டு இருக்க மாட்டீர்கள். அதன் பின் உங்களை எதிர்த்து என்னாலும் எதுவும் செய்து இருக்க முடியாது. நீங்க கவலைப் படும் அளவிற்கு அவருக்கு இல்லை. அவருடைய வேலைகளை அவரே செய்து கொள்வார். ஒரு பெரிய மென் பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரிடம் அறநூறு பேர் வேலை செய்யறாங்க.”

“அதெல்லாம் சரிம்மா, அபிமன்யுவைப் போல் நாலு எடத்துக்கு அவரால வந்து போக முடியுமா?

“முடியும்ப்பா, மனம் இருந்தா மார்க்கம் உண்டு. அவங்களாவது அமெரிக்காவில் இருப்பாங்க, நாங்க இங்க தான் ஈ.ஸி.ஆர். ல் இருப்போம். எப்பொழுது நினைத்தாலும் வந்து போக முடியும்.”

“நான் சொல்ல வருவது உனக்கு புரியலையா? இல்லை புரியாதது போல் நடிக்கிறாயா பூமி.”

“அப்பா, ப்ளீஸ் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க, எனக்கு வாழ்கையில், நல்ல அப்பா, அம்மா தங்கை என்று எல்லாம் கிடைத்த மாதிரி தான் இப்போ எனக்கு ஆதித்யாவும் கிடைத்து இருப்பதாக  நான் நினைக்கிறன்.  நான் எப்படி முழு மனதா அவரை ஏற்றுக் கொண்டேனோ அதே போல் என் குடும்பமும் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.”

“அவராவது முன்பே என்னிடம் இது பற்றி பேசி இருக்கலாம்.”

“ நான் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன் அப்பா. திருமணதிற்கு பின் சொல்லிக் கொள்ளலாம் என்றும் கூறினேன்.

“அவங்க வீட்டில் சொல்லி விட்டீர்களா?

“அம்மா, அவரோட சின்ன வயசில் இறந்துட்டாங்க. அப்பா இன்னொரு கல்யாணம் செய்து பெங்களூரில் தங்கி விட்டார். இவரை வளர்த்தது எல்லாம் இவரோட தாத்தாவும், பாட்டியும் தான். அவங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரிந்த பின், அனைவருக்கும்   ஒரு வரவேற்ப்பு கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.

“அவர்களிடம் சொல்லத் தோன்றிய உங்களுக்கு, எங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா?

“அப்பா ப்ளீஸ், அவர்களிடம் சொல்லிய பொழுது அவர்கள் அதை சந்தோசமாக எடுத்துக் கொண்டார்கள். உங்களிடம் கூறி இருந்தால் அப்படி இருந்திருக்காது.”

“இப்பொழுதும் அப்படி தான் பூமி, நான் இப்பொழுதும் சந்தோசமாக இல்லை.”

“எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்த என் அப்பாவா இதை பேசுவது. “

“உதவி வேறு, வாழ்க்கை வேறு பூமி. அப்படி என்றால் அவர் மேல் பரிதாப்பட்டு தான் அவரை திருமணம் செய்து கொண்டாயா? என்று அவளது வார்த்தைகளை வைத்தே அவளை மடக்கினார் பால்கி.

“அவரைப் பார்த்தால் பரிதாபப்பட வேண்டும் என்று தோன்றுகிறதா  அப்பா?

“சரி நீ விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டாய். அதற்கு ஏன் உனக்கு திருமணம் நிச்சயிக்கும் வரை காத்திருந்தாய்? முன்பே சென்றிருக்கலாமே.”

“ஆதியாவும், வெளி நாடு சென்றிருந்தார் அப்பா. நான் யோசிக்கும் முன் எல்லாம் முடிவாகி விட்டது. நான் அபிமன்யுவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். என்று தன் நிலையை விளக்கினாள் பூமிஜா.

அதுவரை ஹாலில் அபிமன்யுவும், ஆதித்யாவும் பேசிக் கொண்டிருந்தனர். ஆதியுடன் பேசிய சிறிது நேரத்திலேயே அவனது தன்னம்பிக்கை மிகுந்த பேச்சு அபியை கவர்ந்து விட்டது.  இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் மாறி இருந்தனர் சிறிது நேரத்திலேயே.

“நீங்களும், நம்ம கம்பெனியிலேயே வேலைக்கு சேரலாமே அபிமன்யு. இப்படி குடும்பத்தை எல்லாம் விட்டு வெளி நாட்டில் வேலை பார்க்க வேண்டுமா என்ன? என்று ஆதி கேட்டதற்கு ...

“இது படித்த படிப்பிற்காக ஆதி, இன்னும் சில காலம் மட்டும் அங்கே வேலை பார்த்துவிட்டு இங்கு வந்து எங்களது கிராமத்திற்கு சென்று பெரிய அளவில் விவசாயம் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.” என்று அபி கூற

“பெரிய அளவில் என்றால் உங்களிடம் நூற்றுக் கணக்கான ஏக்கரில் விவசாய நிலம் உள்ளதா?

“ஊரில் தாத்தா ஒரு இருநூறு ஏக்கர் வைத்து இருக்காங்க. அதை தவிர நான் ஊருக்கு போகும் போது எல்லாம், கூட்டு விவசாயம் பற்றி எல்லாரிடமும் பேசி வருகிறேன். ஊரில் நிறைய படித்த இளைஞர்கள் இதில் ஆர்வமாக இருக்காங்க. எல்லாம் சரியாக வந்தால் இன்னும் சிறிது காலத்தில் பெரிய அளவில் எல்லா விவசாய நிலத்தையும் ஒன்று சேர்த்து இயற்க்கை விவசாயம் செய்வோம்.”

“வாவ், சூப்பர் அபிமன்யு, இதில் என்னிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் எப்பொழுதும் உங்களுக்கு உதவ தாயாராக இருக்கேன்.” என்று ஆதியும் மகிழ்ச்சியுடன் கூறினான்.

“முதலில் என் உதவி தான் உங்களுக்கு தேவைப் படும். நான் போய் மாமாவிடம் பேசி வருகிறேன்.” என கூறி இதுவரை அவர்கள் அறையை விட்டு வெளி வராதது கண்டு அந்த அறையை நோக்கி நடந்தான்.

அவனைக் கண்டதும் பால்கி அவனிடம் “வாப்பா, பூமி உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்” எனக் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.