(Reading time: 14 - 27 minutes)

அமேலியா - 43 - சிவாஜிதாசன்

Ameliya

ண்களை பிடுங்கிக்கொண்டு திக்கற்ற திசையில் தவிக்கவிட்டதைப் போல் உணர்ந்தான் ஹகீம். அவன் முகம் முழுவதும் பயத்தின் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.

'இனி தப்ப முடியாது. என்ன செய்வது? யோசிப்பது கூட வீண் செயல். ஒரே ஒரு முடிவு. எப்படியிருந்தாலும் அந்த முடிவு தான் ஒரே விடை. அது மரணம்!'

தன் உடலில் கட்டியிருக்கும் வெடிகுண்டை சுமந்தபடி பயத்தோடு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அவன்.இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது. அவ்வப்போது அவன் கால்கள் தடுமாறின.

சிந்தனை செய்ய கூட நடுங்கினான் ஹகீம். சிந்தனையில் முதல் ஆளாய் பஹீரா வருகிறாள். 'பஹீரா! அவள் முகத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? ஆ! சிந்திக்காதே'. தன் தலையைப் பிடித்துக்கொண்டு ஆட்டினான் ஹகீம்.

அன்றிரவு தீவிரவாதியின் தலைவன் கூறியது ஹகீமின் காதுகளில் ஒலித்தது. "நாளை உனது கடைசி நாள். மறுமையில் உன் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அந்த உலகத்தில் எல்லா வகையான இன்பங்களும் கொட்டிக் கிடக்கும். நீ புரட்சி விதை அது. மரமாக முளைத்து தழைத்தோங்கும்". மனித வெடிகுண்டுகள் கேட்கும் கடைசி வாக்கியங்கள் அவை.

தீவிரவாதிகள் பெரும்பாலும் மறுமை உலகைப் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் கூறும் கதைகளை கேட்டாலே அந்த உலகத்தில் வாழ்ந்த திருப்தி கிடைக்கும். எல்லோரையும் மறுமைக்கு அனுப்பும் அந்த தலைவன் மட்டும் ஏன் இந்த உலகில் வாழ்கிறான்? எதற்காக கடவுள் இந்த உலகை படைத்தார்?

தீவிரவாதி சொன்ன இடத்தை அடைய இன்னும் ஒரு மணி நேர பயணம். சரியாக இரவு ஏழு மணிக்கு வெடிகுண்டை வெடிக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் அதிகமாக கொல்லப்படுவார்கள். எதிரியை விட்டுவிட்டு எதற்காக மக்களை கொல்லவேண்டும் என்ற கேள்வியை தீவிரவாதிகளிடம் கேட்டால் மழுப்பலான பதில்கள்.

வெடிகுண்டை கழட்டி தூர எறிந்துவிட்டு எங்காவது ஓடிவிடலாமா? அப்படி செய்தாலும் குண்டு வெடித்துவிடும். ஆக மொத்தம் மரணம் மட்டுமே உறுதி.  

பஹீரா! அவளை நினைக்கையில் அவன் இதயத்தில் வலி உருவானது. தான் இறந்துவிட்டால், பஹீராவின் கதி? அதற்கு என்ன விடையை கொடுத்துக்கொள்வது? பஹீரா அநாதை ஆக்கப்படுவாள். நான் மிகப்பெரிய பாவத்தை பஹீராவிற்கு செய்ய துணிந்துவிட்டேன். கடவுளே! நரகத்தில் எனக்கொரு இடம் கொடுத்துவிடு. அதற்கு பதில் பஹீராவை நல்லபடியாக வாழ வை,

"ஹகீம்" என்றது ஒரு குரல்.  

அவன் திடுக்கிட்டு நின்றான். சுற்றி பார்த்தான். அவன் வேலை செய்யும் கடையின் முதலாளி அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர் முகத்தில் கோபம். அவரை சற்றும் எதிர்பார்க்காத ஹகீம் திகைத்தபடி நின்றான்.  

"இரண்டு நாளா வேலைக்கு வராம என்னடா செஞ்சிட்டு இருக்க?"

ஹகீம் ஓடினான்.

"டேய்!.. டேய்!"

எவ்வளவு தூரம் ஓடிவந்தோம் என்று கூட தெரியாமல் காட்டுத்தனமாக ஓடிவந்து ஓரிடத்தில் மூச்சு வாங்கி நின்றான் ஹகீம். அமெரிக்க ராணுவ வாகனங்கள் விர் விர் என்று அவனைக் கடந்து சென்றன. ஹகீமின் பயம் மலையளவு எகிறியது. வண்டியில் இருந்தவர்கள் தன்னையே பார்ப்பது போல் அவனுக்குள் பிரம்மை.

"ஹகீம்" மீண்டுமொரு குரல். பெண் குரல். அதில் கனிவு.

திரும்பி பார்த்தான். பஹீராவின் டீச்சர் நின்றுகொண்டிருந்தார்.

"சொல்லுங்க"

"இரண்டு நாளா எங்க போயிருந்த?"

போலீஸ் விசாரணை கைதியை கேட்டது போல், அந்த  கேள்வி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"பஹீரா பள்ளியில அழுதுட்டே இருக்கா. இரண்டு நாளா அவளை கவனிக்காம என்ன செஞ்சிட்டு இருந்த?"

"மார்க்கெட்ல நிறைய வேலை"

அந்த பதில் டீச்சருக்கு திருப்தியை தரவில்லை.

"நான் கிளம்பணும் டீச்சர்". அங்கிருந்து சென்றான் ஹகீம்.

ஓடி வந்த வேகத்தில் கல்லில் கால்பட்டு கட்டை விரல் அடிபட்டது. அந்த வேதனையை சுமந்துகொண்டு நடந்து சென்றான். அவனால் வேகமாக நடக்க முடியவில்லை.

"பஹீராவை பாத்துட்டு போறியா?".டீச்சர் நின்ற இடத்தில இருந்து சத்தமாகவே கேட்டார்.

"இப்போ வேணாம் டீச்சர். நான் வேலைய முடிச்சிட்டு வந்து பாக்குறேன்".

ஹகீமின் நடவடிக்கைகள், பேச்சுக்கள் எல்லாம் டீச்சருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 'குளிக்காத மேனி, வேலை என்று கூறுகிறான். பின்பு ஏன் இங்கு சுற்றி கொண்டிருக்கிறான். பஹீராவை பார்ப்பதையும் தவிர்க்கிறான். அப்படியென்றால் எதற்காக இங்கு வந்தான்?' பதில் சொல்லிக் கொடுக்கும் டீச்சருக்கே அக்கேள்விகளுக்கான விடை தெரியவில்லை. பள்ளிக்கு நேரமாகிவிட்டது. சிந்திப்பதை நிறுத்திவிட்டு பள்ளிக்குள் நுழைந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.