தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 13 - வத்ஸலா
முத்தம். கன்னத்தில் விழுந்த அந்த அழுத்தமான முத்தம். ஒரு முத்தம். அப்படியே அவனது அடி மனதில் பதிந்து போனது அந்த முத்தம். அவனது அத்தனை குழப்பங்களுக்கும் அவள் பதில் கொடுத்துவிட்டதை போலவே தோன்றியது அவனுக்கு.
எது வந்த போதும் உனக்கென நான் இருக்கிறேன் என்று சொல்வது போல இருந்தது அந்த முத்தம் அன்று அந்தமானில் அவன் கைமீது கை வைத்து செய்த சத்தியம் என்ன பெரிய சத்தியம் என்று தோன்ற வைத்திருந்தது அந்த முத்தம்.
‘சரி பேச வேண்டியதெல்லாம் பேசி முடிச்சாச்சு நாம வேறே ஏதாவது இன்டரெஸ்டிங்கா பண்ணுவோமா?’ என்றான் ஹரிஷ்
‘ஹேய்... பேசினோமா என்ன பேசினோம்?
‘அதெல்லாம் பேசியாச்சு. நீயும் எனக்கு வேண்டிய பதில் சொல்லியாச்சு. இனி உன்கிட்டே நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன்’. வேணும்னா ஏதாவது கொடுக்கலாம்’ என்றபடியே அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டு விழி அகற்றாமல் சில நொடிகள் அவள் முகம் பார்த்தவன் ஏனோ அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான் இறுக்கமாக. சற்றே கரைந்தாள் அவன் அணைப்பில்.
சில நொடிகள் கழித்து மெலிதான குரலில் ‘ஹரிஷ்... என்னாச்சு... ப்ளீஸ்... விடேன்...யாரவது பார்க்க போறாங்க.. இது ரோடு...’ என்றாள்.
மெல்ல விலகியவனின் முகத்தில் ஏதோ குழப்ப ரேகைகள் ‘என்னாச்சு ஹரிஷ்... ஒரு மாதிரி ஆகிட்டே...’ அவள் கேட்க இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டான்.
‘என்னமோ மனசு சரியில்லை. நான் வேணும்னா சவுத் ஆப்ப்ரிகா போகலை போ...’ சற்றே தளர்ந்த குரலில் சொன்னான் அவன்..
‘ஹேய்... லூசா நீ... இப்போதான் டீம்லே கொஞ்சம் கொஞ்சமா மேலே வரே... இப்போ போய்... சும்மா போயிட்டு வா ஹரிஷ். ஒரு மாசம்தானே?’ சட்டென சொன்னாள் அனுராதா.
‘ஒரு மாசம்தானே இல்ல.... ஒரு மாசம்! அதுவும் உன்னை விட்டு ரொம்ப தூரம். அதுதான் யோசனையா இருக்கு. கல்யாணம் முடிஞ்சா உன்னையும் அள்ளிட்டு போயிடுவேன்’ அவன் சொல்ல அழகாய் சிரித்தாள்.
‘சரி சரி சரி.. நீ சவுத் ஆப்ரிக்கா போயிட்டு வந்ததும் நம்ம கல்யாணத்தை வெச்சிடலாம் சரியா?’ அவன் கன்னத்தை தொட்டு அவள் சொல்ல
‘நிஜமாவா? நிஜமா சொல்லிடலாமா அனும்மா? சந்தோஷ பரபரப்புடன் அவன் கேட்க அவள் சின்ன வெட்க பூக்களுடன் தலை அசைக்க சட்டென அவள் அருகில் வந்த அவனது இதழ்களை தனது விரலால் தள்ளி நிறுத்தினாள் அனுராதா.
‘கல்யாணம் உண்டு. ஆனா இது கிடையாது. நானா முத்தம் கொடுன்னு உன்னை கேட்குற வரைக்கும் உனக்கு பெர்மிஷன் கிடையாது’ என்றாள் குறும்பு புன்னகையுடன்.
‘நீயா எப்போ கேட்பே?’
‘தெரியலையே. கடைசி வரைக்கும் நான் கேட்கலைன்னா உன் பாடு திண்டாட்டம்தான். இப்போவே சொல்லிட்டேன்பா. யோசிச்சுக்கோ.’
‘இல்ல இல்ல அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்கு அப்புறம் என் அனும்மா என்ன சொன்னாலும் சரிதான்’ அவன் அவள் நெற்றி முட்ட
‘கேட்பேன். என் மனசு சொல்லும்போது நான் என் ஹரிஷ்கிட்டே மனசார கேட்பேன். ஒரு முத்தம் கொடு ஹரிஷ்.... ப்ளீஸ்னு... அப்போ குடு’ சற்றே நெகிழ்ந்த குரலில் சொல்லிவிட்டு அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள் அனுராதா.
மறுநாள் காலை.
ஹரிஷ் சவுத் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பும் இரண்டாம் நாள் திருமண தேதி குறிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணம் சீக்கிரம் நடந்துவிட வேண்டும் என்பதில் கொஞ்சம் உறுதியாக இருந்தார் பெரியப்பா.
வீட்டில் உள்ளவர்கள் யார் என்ன சொன்னாலும் இந்த திருமணத்தை முடித்து விடுவதில் உறுதியாக இருந்தார் அவர். ஒரு முறைக்கு இரு முறை அவரிடம் உறுதி கேட்டுக்கொண்டே தேதியை குறித்தார் சுவாமிநாதன்.
நிச்சியம் என்று தனியாக இல்லாமல் திருமணத்தோடு சேர்த்து நடத்திவிடலாம் என்றும் ஹரிஷ் திரும்பி வருவதற்குள் எல்லா ஏற்பாடுகளும் செய்து விடுவது என்றும் திட்டம். கிளம்பும் தருவாயில் ஹரிஷிடம் மெல்ல கேட்டார் பெரியப்பா.
‘உன்கிட்டே ஒரு ரெக்வெஸ்ட் வைக்கலாமா ஹரிஷ்’
‘இன்னும் ஏன் அங்கிள் இவ்வளவு ஃபார்மலா பேசறீங்க? நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க’
‘இங்கே இருந்து கொஞ்ச தூரத்தில்தான் எங்க அப்பா, அனுவோட தாத்தா ஊர். தொண்ணூறு வயசாச்சு அவருக்கு. அனுன்னா ரொம்ப பிடிக்கும் அவருக்கு. கல்யாணதுக்கெல்லாம் அவராலே வர முடியுமான்னு தெரியலை. என்னமோ இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் அவர்கிட்டே கூட்டிட்டு போகணும்னு தோணுது. போகலாமா? போய் அவரை பார்த்திட்டு ராத்திரிக்குள்ளே நாங்க ஊருக்கு கிளம்பிடுறோம்’ அவர் கேட்க, தாத்தா என்ற வார்த்தையிலேயே அனு மகிழ்ந்து போனாள்.
‘நீ எத்தனை நாள்மா லீவ் போட்டிருக்கே’ பெரியப்பா அவளிடம் கேட்க