(Reading time: 13 - 25 minutes)

‘லோசனா..இது அனு வாழ்க்கை அவ விருப்பம்’ என்றார் பெரியப்பா.

‘சரி அவ வாழ்க்கை அவ விருப்பம். நான் வெச்சிடறேன்’ பெரியம்மா துண்டித்துவிட்டார் அழைப்பை.

வீடு வந்து சேர்ந்திருந்தனர் அனுவும் பெரியப்பாவும். பெரிய பெரிய அதிரடிகளை எதிர்ப்பார்த்து வந்திருந்த இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு சிறு சலசலப்பு கூட இல்லாமல் அங்கே நடந்ததை, சுவாமிநாதன் சொன்னதை எல்லாம்  கேட்டுக்கொண்டனர் ஷங்கர், கீதா, பெரியம்மா மூவரும் .நிஜமாகவே அனுவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துக்கொள்ளவே முடியவில்லை அவளால்.

‘என்னை பொருத்தவரைக்கும் நீங்க யாரும் இந்த கல்யாணத்துக்கு வராம இருக்கிறதுதான் நியாயம். இது அனு வாழ்க்கை அவ சந்தோஷமா வாழட்டும்’ பெரியப்பா திட்டவட்டமாக சொன்னார்.

‘ஜாதக பொருத்தமெல்லாம் பார்த்துட்டீங்களா?

‘மனசு பொருந்தி போனதுக்கு அப்புறம் எதுக்கு ஜாதகமெல்லாம்?’ இது பெரியப்பா

‘ஓ...அப்படி..சரி ரொம்ப சந்தோஷம்..’ என்றபடியே பார்வையால் துழாவினார் அனுராதாவை

‘பெரியம்மா..’ அவள் சற்றே தடுமாறி ஆரம்பிக்க

‘நீ மட்டும் இந்த ஜென்மத்திலே என்கிட்டே பேசாதே’ என்றார் அவள் முன்னே ஆள்காட்டி விரலை நீட்டி. ‘மத்தவங்களுக்கு நான் எப்படியோ என்னமோ உனக்கு ‘அம்மா’டீ நான். அப்படித்தான் அப்படி நினைச்சுத்தான் உன்னை வளர்த்தேன். என்னை விட்டுக்கொடுத்துட்டே இல்ல நீ?

‘பெரியம்மா. அப்படி இல்லை பெரியம்மா..’ என்றவளின் கண்களில் நீர் கோர்க்க எழுந்துவிட்டார் லோசனா.

‘அப்போ நீ எந்த தப்புமே செய்யலை அப்படிங்கறியா?’ பெரியப்பா சட்டென பாய

‘இவளுக்கு நான் எந்த தப்பும் செய்யலை’ லோசனா சற்றே அழுத்தி சொன்னார். அது சுருக்கென்றது அனுராதாவுக்கு.

‘அதுதான் சொல்லிட்டீங்க இல்ல அவ வாழ்க்கை. அவ விருப்பம்னு. நடக்கட்டும். என்ன வேணும்னாலும் நடக்கட்டும். நாங்க யாரும் பக்கத்திலேயே வர மாட்டோம்.’ பெரியப்பாவை பார்த்து சொன்னார் லோசனா.

‘இது என்ன பேச்சு லோசனா. உன் பொண்ணுன்னு சொல்றே இல்லையா. நல்லா இரும்மான்னு ஒரு வார்த்தை சொல்லேன். குழந்தை நல்லா இருந்திட்டு போகட்டும்’ பெரியப்பா சொல்ல எதுவுமே பேசாமல் நகர்ந்து சென்றுவிட்டிருந்தார் லோசனா.

அப்படியே நகர்ந்தனர் கீதாவும், ஷங்கரும் கூட. மனம் ஆறவில்லை ஷங்கருக்கு. இந்த திருமணம் நடப்பதில் கண்டிப்பாக உடன்பாடு இல்லை அவனுக்கு  கீதா மட்டும் அனுவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு நடக்க அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான் அவன்.

அருகில் வந்து அனுவின் தோள் அணைத்துக்கொண்டார் பெரியப்பா.

‘என்னவோ பயமா இருக்கு பெரியப்பா’ அவள் சொல்ல

‘ஒரு பயமும் இல்லை. உன்னை பொண்ணா நினைச்சு வளர்த்தேன்னு சொல்றா ஆனா உன்னை நல்லா இருன்னு வாழ்த்த மனசு வரலை அவளுக்கு. அவனுக்கு நம்ம குடும்பம் அவ்வளவு தப்பு செஞ்சிருக்கோம் தாத்தாவை பார்த்ததும் உங்களை கூட்டிட்டு போய் என் கூட வெச்சுக்கறேன்னு டக்குன்னு சொன்னானே யாருக்குமா நல்ல மனசு? அவன் நல்ல மனசுக்கு எந்த தப்பும் நடக்காதுமா. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் நல்லா இருப்பீங்க. தைரியமா இரு.’

ரு வாரம் கடந்திருந்த நிலையில் எல்லா ஏற்பாட்டையும் ஆரம்பிக்க சுவாமிநாதனிடம் முழு சம்மதம் சொல்லி இருந்தார் பெரியப்பா.

அன்று ஹரிஷ் சவுத் ஆப்ரிக்கா கிளம்ப வேண்டிய தினம். மும்பை விமான நிலையத்துக்கு வந்து இறங்கி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. ரகு அணியில் இல்லாதது மட்டுமே அவனுக்கு பெரிய குறையாக இருந்தது. கிளம்பும் முன் ரகுவை அழைத்து பேசிவிட்டுத்தான் கிளம்பி இருந்தான் ஹரிஷ்.

‘ஸ்வேதா இப்போ கொஞ்சம் சந்தோஷமா இருக்காடா. எனக்கு அது போதும்’ அவன் சொல்ல

‘அதெல்லாம் போதாது ஐ.பி.எல்’ முடியட்டும் அதுக்கு அப்புறம் வர்ற ஆஸ்ட்ரேலியா டூர்லே நீ எப்படியும் விளையாடுவே ரகு; அதுக்கு மனசார ஸ்வேதாவும் சம்மதிப்பாங்க. நான் பொறுப்பு’ உறுதியாக சொன்னான் ஹரிஷ்.

‘அதெல்லாம் எப்படிடா நடக்கும்?’

‘நடக்கும் நான் சொல்றேன் பாரு. அது வரைக்கும் ஃபிட்னெஸ் பார்த்துக்கோ மாப்பிள தொப்பை போட்டுடாதே’ என அவனுக்கு உற்சாகம் கொடுத்துவிட்டு அழைப்பை துண்டித்தான் ஹரிஷ்.

மொத்த அணியும் வி.ஐ.பி லாஞ்சில் இருந்தது. அணியில் பரம் அகர்வாலும் இருந்தான். அதே நேரத்தில் அங்கே வந்திறங்கிய விமானத்திலிருந்து அன்றைய டியூட்டியை முடித்துக்கொண்டு  கீழிறங்கினாள் நம் அனுராதா. அப்போது ஒலித்தது அவள் கைப்பேசி. அழைத்தவன் ஹரிஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.