(Reading time: 14 - 27 minutes)

அடுத்த நாள் முந்தைய நாளை விட பரவாயில்லை. வசந்த் எதையோ தன்னிடம் கூற ஆசைப்படுகிறான். அதனால் தான் ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கிறான் என்பது மட்டும் அமேலியாவிற்கு புரிந்தது.

வசந்த் கார் ஷெட்டில் நீண்ட நேரத்தை கழிப்பது ஜானிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்ன நடக்கிறது என்று மறைந்திருந்து பார்த்தான். வசந்த் அமேலியாவிற்கு குழந்தையை போல் கற்றுக்கொடுப்பது அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

"என்னடா செஞ்சிட்டு இருக்க?". திடீரென ஜான் உள்ளே வந்து கேட்டதும் வசந்திற்கு தூக்கிவாரிப் போட்டது.

"ஜான்.."

"என்ன இதெல்லாம்?"

"அமேலியா ஆங்கிலம் படிக்கணும்னு ஆசைப்பட்டா அதான் கற்று கொடுக்கிறேன்"

"பொய் சொல்லுறதுக்கு முகபாவனை எல்லாம் ரொம்ப முக்கியம் வசந்த்"

"உண்மையைதாண்டா சொல்லுறேன்"

"சரி கத்து கொடு. உன்கிட்ட சில உண்மைகள் பேசணும்"

"என்ன?"

"நான் அமேலியாவை கல்யாணம் செஞ்சுக்கிறதா முடிவு பண்ணிட்டேன்"

வசந்த் அதிர்ந்தான். "டேய்ய்..."

"அவளுக்கு என் ஆசையை புரிய வை"

"இது ரொம்ப தப்பு ஜான்"

"எதுக்கு?"

"நீ ஜெஸ்ஸியை லவ் பண்ணுற"

"ஆனா அவ பண்ணலையே"

"அதுக்கு அமேலியா எப்படி தீர்வாகும்?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு? நான் அவளை கல்யாணம் செஞ்சுக்க போறேன்"

"முடியவே முடியாது"

"உன்கிட்ட என்ன பேச்சு. நான் அவ கிட்டயே நேரடியா கேக்குறேன்"

"ஜான்ன்ன்....நான் அமேலியாவை காதலிக்கிறேன்"

"அப்படி வாடா ராஜா. எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன்"

"எலி அம்மணமா ஓடாம கோட் சூட் போட்டுட்டா ஓடும்?"

"சரி, நீ லவ் பண்ணுறதுக்கும் ஆங்கிலம் கத்து கொடுக்குறதுக்கும் என்ன சம்மந்தம்?"

"நான் ஐ லவ் யு சொன்னேன். அவளுக்கு புரியல"

"அதனால அவளுக்கு ஆங்கிலம் கத்து கொடுத்து உங்க காதலை புரிய வைக்குறிங்க"

"ஆமா"

ஜான் சிரித்தான்.

"என்ன?"

"இவ இப்பதான் எல் கே ஜி சேர்ந்திருக்கா. இன்னும் யு கே ஜி, பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட், செகண்ட் ஸ்டாண்டார்ட்...எல்லாம் படிச்சு அப்புறம் நீ சொன்ன ஐ லவ் யு வுக்கு அர்த்தம் புரிஞ்சு, உன் காதலை ஏத்துக்கலாமா வேணாமான்னு அவ யோசிச்சு, சரி நமக்காக இங்கிலிஷ் எல்லாம் கத்து கொடுத்து நாய் படாத பாடுபட்டிருக்கானே அவன் காதலை ஏத்துக்கலாம்னு முடிவு செஞ்சு உன்கிட்ட வந்து காதலை சொல்லுறப்போ அவளுக்கு வயசு எண்பது ஆகியிருக்கும் உனக்கு எண்பத்தி ஏழு ஆகியிருக்கும். அவ காதலை சொன்ன அதிர்ச்சியில் நீ மண்டையை போட்டுடுவ"

"என்ன காமெடியா?"

"அது நீ எடுக்குறது பொறுத்து"

"சரி வா வீட்டுக்குள்ள போலாம். அவளையும் கூப்பிடு"

"வேலைகாரங்க பார்த்துட போறாங்க"

"அவங்கெல்லாம் வேலையை முடிச்சு போய்ட்டாங்க. நீ வா"

வசந்த் அமேலியாவை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று ஹாலில் அமர்ந்தான். அமேலியாவையும் தன்னோடு அமர்த்திக்கொண்டான்.

"ஜெஸ்ஸி எங்க?"

"உள்ளே தூங்கிட்டு இருக்கா. எழுப்பட்டுமா?"

"வேணாம்"

"சரி நீ கத்து கொடு. நான் டிவி பாக்குறேன்"

வசந்த் கற்றுக் கொடுக்கத் துவங்கினான். அவன் கற்றுக் கொடுக்கவும் அமேலியா தவறாக சொல்லவும் டீவியில் அந்த காட்சி ஓடுவதற்கும் சரியாக இருந்தது.

இன்று போய் நாளை வா என்ற திரைப்படத்தில் ஆசிரியர் மாணவனுக்கு பாடம் எடுக்கும் காட்சி.

"ஏக் கவுமே ஏக் கிசான் ரஹ தாதா"

"ஏக் கவுமே ஏக் கிசான் ரகு தாத்தா"

"ரகு இல்லப்பா ரஹ ரஹ ஹ ஹ"

வசந்த் புத்தகத்தை மூடி வைத்தான்.

"அதுக்குள்ள பாடம் முடிஞ்சிடுச்சா?"

பெருமூச்சை விட்டான் வசந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.