(Reading time: 14 - 27 minutes)

காற்று பட்டவுடன் மகிழும் சோலைவனம் போல உள்ளுக்குள் மகிழ்ச்சி கொண்டாள் அமேலியா. சில நொடிகள் தன்னையே மறக்க வைக்கும் அந்த தருணங்கள் என்றுமே அழியக் கூடியதல்ல.

இருள் கமழும் அந்த வேளையில் வசந்தின் முகம் அவளுக்கு தெளிவாகவே தெரிந்தது. அவனது புன்னகை அவளிடம் எதையோ தெரியப்படுத்திக்கொண்டிருந்தது. நின்ற இடத்திலேயே ஏதோ ஒரு வகையான பயணம்.

"ரொம்ப நேரம் நீ இங்க இருக்க வேண்டியதா போச்சு. என்னை மன்னிச்சுடு"

அமேலியா அவன் பற்றியிருந்த கைகளை நோக்கினாள். ஷாக் அடித்தது போல் அவள் கைகளை விட்ட வசந்த், "தெரிஞ்சே தான் பிடிச்சேன்" என்றான். மனதிற்குள் 'அவளுக்கு புரியவா போகுது?' என்ற எண்ணம்.

அமேலியா, அவன் மன்னிப்பு கோருகிறான் என்று நினைத்தாள்.

"ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

அமேலியா கடலை நோக்கிக்கொண்டிருந்தாள்.

"உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்" என்று அவள் தோள்களை தட்டினான் வசந்த்.

அமேலியா, என்ன என்பது போல் பார்த்தாள்.

"உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்". சைகையில் கூறினான் வசந்த்

அவன் கோமாளி போல் சைகை செய்தது அமேலியாவை சிரிக்க வைத்தது.

வசந்த் சுற்றும் முற்றும் நோக்கினான்.

"ஐ"

அமேலியா அவனையே பார்த்தாள்.

"லவ்"

அவள் முகத்தில் மாற்றம் தெரிகிறதா என்று நோக்கினான் வசந்த்.

"யு"

அமேலியா தலையை மட்டும் ஆட்டிவிட்டு கடலை நோக்கினாள்.

"உலகத்துல ஐ லவ் யு கேட்டு எந்த பெண்ணும் இப்படி ரியாக்ட் பண்ணதில்லை" என அலுத்துக்கொண்டான் வசந்த்.

'இவளுக்கு எப்படி புரிய வைப்பது?' என்று சிந்தித்தபடி அவளை அழைத்துக்கொண்டு வீட்டை அடைந்தான் வசந்த்.

வேலையாட்கள் இரவிலும் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் செய்யும் வேகத்தைப் பார்த்தால் எதிர்பார்த்ததை விட சீக்கிரத்திலேயே வேலையை முடித்து விடுவார்கள் போல் தோன்றியது.

தன் வீடு சீர் செய்யப்படுவதால் ஜானிற்கும் சந்தோசம். ஜெஸிகாவும் உடனிருக்க வேண்டிய சூழ்நிலை. வேலையாட்கள் செய்வதை கண்காணித்துக்கொண்டிருந்தனர். அந்த இடைப்பட்ட நேரங்களில் வசந்தையும் அமேலியாவையும் அவர்கள் கவனிக்கவில்லை. அது அவர்களுக்கு சாதகமாய் அமைந்தது.

இரண்டு நாட்களாக அமேலியா கார் ஷெட்டில் மறைந்துகொள்ள வேண்டிய நிலை. அங்கேயே தான் உறங்கினாள். மீண்டும் மறைந்து வாழ்வது அவளை வருத்தமடைய வைத்தது. அங்கிருக்கும் ஜன்னல் வழியே வேலையாட்கள் செய்யும் வேலையை வேடிக்கை பார்ப்பதில் தன் பொழுதைக் கழித்துக் கொண்டாள். பசிக்கும் நேரத்தில் வசந்த் உணவை கொண்டு வருவான்.

ஜன்னல் வழியே அவ்வப்போது வசந்த்தையும் காண்பாள். நிமிடத்திற்கு ஒரு முறை தானிருக்கும் இடத்தை நோக்குவது அவனுக்கு தன் மேல் உள்ள அக்கறையை எண்ணி அக மகிழ்ந்தாள் அமேலியா.

வசந்த், காரை எடுத்துக்கொண்டு சில நேரங்களில் வெளியே செல்வது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது. அவன் திரும்பி வரும்வரை ஜன்னலை பார்த்தபடியே தவம் கிடப்பாள். வசந்த் திரும்பி வந்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியே பிறக்கும். அவன் இல்லாத நேரத்தில் ஆதரவற்றவளை போல  உணர்ந்தாள் அமேலியா.

வசந்தின் கார் வந்து நின்றது. கையில் எதையோ எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினான் வசந்த். வேலையெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்தபடியே கார் ஷெட்டிற்குள் நுழைந்தான்.

வசந்த் வந்தது தெரிந்தும் ஜன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அமேலியா. தொண்டையை செருமினான் வசந்த். அமேலியா திரும்பிப் பார்த்தாள்.

"இது உனக்கு தான்" என்று சில புத்தகங்களை அவளிடம் கொடுத்தான் வசந்த்.

எல் கே ஜி புத்தகம். அதில் ஆங்கில எழுத்துக்கள், படங்கள் நிறைந்திருந்தன. புரியாத பார்வையை வசந்தின் மீது வீசினாள் அமேலியா.

"நீ படிச்சு தான் ஆகணும். நான் கத்து தரேன்"

அமேலியாவுக்கு புரியவில்லை. அவளை தரையில் அமரவைத்து அவளுக்கு ஏ பி சி டி கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். அமேலியா புரிந்துகொள்ள நேரமானது. கூச்சமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. அவள் படிக்க சிரமப்படுவது வசந்திற்கு கோபத்தை வரவழைத்தது. இருந்தும் பொறுமையாக எடுத்து கூறினான். ம்ஹூம்! பலனில்லை. ஏ பி சி டி என்ற அந்த நான்கு எழுத்துக்களுக்கு மேல் அவளுக்கும் வரவில்லை. அந்த நாள் பலனில்லாமல் போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.