லட்சணா லட்சணா பார்த்தியா நான் சொன்ன போது யாருமே நம்பவில்லையே இவள் என் மாயாவாக இருக்கப்போய் தானே என்னை அறிந்து கொண்டாள். என் கண்மணி இறக்கவில்லை, என் உள்மனது உரைத்தது உண்மை என் காதல் அவளை இழுத்து வந்துவிட்டது . யாரோ ஒரு பொண்ணைக் காட்டி என் மாயா என்று நம்ப வைக்கப் பார்த்தார்களே இப்போது பார் என் மாயா திரும்பிவிட்டாள். இன்றைய அழைப்பு ஒன்று போதுமே எனக்கு !அது மனதின் அடி ஆழம் வரையில் நிறைந்திட்ட அவளின் குரலை நான் மீண்டும் கேட்டுவிட்டேனே மீண்டும் அவள் சுயநினைவு அடைவாளா பாருங்கள் உடனே மருத்துவரை அழையுங்கள் என்று மேற்கொண்டு கட்டளைகளாக பிறப்பித்துக்கொண்டே சென்ற கமலை அமைதிப் படுத்திட முனைந்தாள் லட்சணா
அண்ணா பொறுங்கள் மாயா கண்விழித்ததில் எனக்கும் சந்தோஷமே ! நீங்கள் அமைதியாக இருங்கள் உங்களைப் போல் என்னால் உணர்வு பூர்வமாக இந்த விஷயத்தைக் கையாள முடியாது, முதலில் அவங்களோட பிபி, மற்றும் சில விடயங்களை நான் செக் பண்ண வேண்டும் அதன்பிறகுதான் டாக்டரை அழைக்கவேண்டும். தாங்கள் தயவு செய்து தொந்தரவு செய்யாமல் இருந்தீர்களானால் .... எல்லாவற்றையும் முடிக்க சரியாக இருக்கும் கொஞ்சம் வழிவிடுங்கள், அவர்கள் சீக்கிரம் நலம் பெற்று திரும்புவதுதானே முக்கியம், முதலில் கமல் சற்று கோபப்பட்டாலும் லட்சணாவின் வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டு அமைதியாய் நகர்ந்து போனான். மனம் முழுக்க மாயா வியாபித்து இருந்தாள். இத்தனை நாள் தவத்திற்கு பலன் கிடைத்துவிட்டது.
கண்மூடி ஓவியமாய் படுத்திருந்தவள் இன்று தன் மலர் விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்திருக்கிறாள் அடர்ந்த இருளில் சட்டென்று தோன்றிய மென் வெளிச்சத்தைப் போல அவளின் குரல் முழுமையாய் அவர்களின் நேசத்தினை வெளிப்படுத்திட அவள் எழுந்திடுவாள் என்று நம்பிக்கையோடு, மாயாவின் முகத்தினையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
லட்சணா தன் பணியில் மும்முரமானாள். டாக்டருக்கும் அசோக்கிற்கும் உடனே தகவலை தெரிவித்தாள். மருத்துவரின் வரவிற்காய் இருவரும் காத்திருந்தார்கள்.
போன்ல யாரு அசோக் ?
லட்சணா மாயா கண்விழித்ததையும் அவள் பெயர் சொல்லி அழைத்ததையும் சுருக்கமாக சொல்லிவிட்டு வினிதா இன்னமும் அங்கே போகவில்லை என்பதையும் சொல்லி முடித்தான்.
ம்.. அதெப்படி போக முடியும் அதுதான் நம்மை பின்தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்களே
யார் வினிதாவா ?
ம்... பின்பக்கம் சற்று இடைவெளி விட்டு வரும் வண்டியில் முகத்தை மறைத்து கூலிங்கிளாஸ் போட்டு அமர்ந்திருக்கும் அந்த பெண் வினிதாதான்.
ஆனால் வினிதா ஏன் ?
இந்தக் கேள்விக்கு வீரா கெளதமைப் பார்த்தார். இறந்து மாயா இல்லை என்ற சந்தேகம் எனக்கும் டாக்டருக்கும் முதலிலேயே வந்தது வக்கீல் ஸாரும் அதை ஊர்ஜிதப் படுத்தினார். மாயா எழுதியதாக கொண்டு வந்த கடிதம் இன்று எல்லாவற்ையும் எனக்கு உணர்த்திவிட்டது.
புரியவில்லை,,,,
வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டு வருகிறோம் அசோக்.....மாயாவின் இந்தக் கடிதம் அவளின் கையெழுத்து பிரதி அல்ல, இந்த கையெழுத்து வினிதாவுடையது.
மாயா என்ற பெயரில் இறந்த போன பெண்ணின் பிரேத பரிசோதனையில் இருந்து சில உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டது. என்னதான் உருவ ஒற்றுமைகள் இருந்தாலும், மாயாவின் இரத்தப்பிரிவும் இறந்து போன பெண்ணின் ரத்தபிரிவும் வெவ்வேறு ! இந்த விஷயம் அறிந்த உடனேயே நான் வக்கீல் சாரைத் தொடர்பு கொண்டேன். மாயாவிற்கு ரத்ததானம் செய்யும் பழக்கம் இருந்ததால் எங்களின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது, மாயா இறந்ததாக சொல்லப்படும் அந்த நாளிற்கு ஒருவாரம் முன்னதாகவே அவர் ரத்ததானம் செய்திருக்கிறார். அப்போதைய பரிசோதனையில் மாயா கன்னிப் பெண். ஆனால் இறந்ததாக சொல்லப்படும் பெண் தாய்மை அடைந்தவர், இந்த விஷயங்கள் என்னை ஆரம்பம் முதலே குழப்பியதால் தான் மாயாவின் வீட்டில் கமலைப் போல எஸ்.ஐ. கெளதமை நுழையச் சொன்னேன்.
நான் அந்த வீட்டு மாயாவின் காதலனாக சென்ற நாள் முதலில் இருந்து ஒரு பாவப்போர்வையினை தன் மேல் படர விட்டுக்கொண்டாள் வினிதா. தான் மாயாவின் மேல் அக்கறை உள்ளவள் என்று அநேகம் உணர்த்திடப் பார்த்தாள். அதற்கு பல சம்பவங்களை என்னால் உதாரணம் காட்டிட முடியும். சந்துருவும் அவளுக்கும் ஏதோ பிணக்கம் ஏற்பட்டதும், அவனை விட்டு விலகியிருக்கிறாள். சில நேரங்களில் சந்துருவைப் பார்த்து அவள் பயந்தமாதிரி நடித்ததையும் என்னால் நம்ம முடியவில்லை, ஒருநாள் இரவு என்னை அடிக்க ஒருவன் வந்திருந்தான் அது டிரைவர் மணி என்று எனக்கு மறுநாளே தெரிந்தது. ஆனால் சரியாய் அவன் என்னைத் தாக்கிய அடுத்த சில நிமிடங்களில் சந்துருதான் அது என்று ஒரு காயத்தோடு என்னை நம்ப வைக்க முயற்சி செய்தாள், பர்வத்தம்மாளிடம் பயமுறுத்தியே உண்மையை வாங்கிடலாம் என்று மாயாவின் குரலை அவளின் சலங்கைகளை சில ஒலிக்க செய்து பயமுறுத்தியதும் அவள்தான், இது எல்லாம் நமக்கு உதவும் நடவடிக்கைகளாக அவள் காட்டிக் கொண்டாலும் என்னுடைய சந்தேக வட்டத்தில் முதலில் வந்தது வினிதாதான்.