(Reading time: 13 - 25 minutes)

“ஏன் தீபா புரிஞ்சிக்க மாட்டிக்குற?.. நீ இப்போ அங்க போய் தேவை இல்லாத பிரச்சினையை இழுத்து வச்சிட்டு வந்துருக்குற… அது தெரியுமா உனக்கு?...”

“ஆமா… இல்லாட்டா மட்டும் பிரச்சினையே வராது பாரு… அட போக்கா… வர்றது வரட்டும்… எதுக்கும் துணிஞ்சு தான் நான் இருக்குறேன்…”

“முட்டாள் தனமா பேசாத தீபா… ப்ராக்டிக்கலா யோசிச்சுப்பாரு…”

“என்ன புடலங்கா ப்ராக்டிக்கல்?... எல்லா வெங்காயத்தையும் யோசிச்சு பார்த்து தான், ஒரு முடிவோட கிளம்பி போனேன்… அதை முதல்ல நீ புரிஞ்சிக்கப்பாரு சாரு…”

“ஐயோ இல்ல தீபா… உனக்கு பிரச்சினையே புரியமாட்டிக்குது… அதுதான் எனக்கு வருத்தமா இருக்கு…”

அவள் குரலில் வருத்தம் இழையோடிட, இருகைகளையும் தன் மார்பின் குறுக்கே கட்டியவனாய், தமக்கையை நிமிர்ந்து பார்த்தவன்,

“சரி… நீ புரிய வை…” என்றான் நேர் பார்வையுடன்…

“நேத்தே உங்கிட்ட சொன்னேன் தான?... இனி இந்த விஷயத்துல தலையிடாதன்னு.. அப்புறம் எதுக்கு இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்திருக்குற?...”

கைகளை சட்டென கீழே இறக்கியவன், “தலையிடக்கூடாதா?...” என வேகமாக சிரித்துவிட்டு,

“சாரு… நீ என் அக்கா… உன் லைப்ல முடிவெடுக்குற உரிமை எவ்வளவு இருக்கோ, அதை விட அதிகமாவே எனக்கு இருக்கு…” என தெளிவாய் கூறியவன்,

“அன்ட் ஒன் மோர் திங்க்… நான் இப்போ செஞ்சிட்டு வந்த காரியம் கூட என் அக்கா லைப்க்காக மட்டும் தான்…” என்றான் கண்களில் கொந்தளிப்புடன்…

அவனின் அந்த அக்கறையான பாசமான உரிமையான ஆதங்கத்துடன் கூடிய கோபம் அவளுக்கு புரிந்தது… ஆனாலும், அவள் அதனை வேண்டாம் என்றாள்…

“விட்டுடு தீபா… என் லைப் பத்தி நானே கவலைப்படலை… நீ மட்டும் ஏன்?...”

அவளும் ஆதங்கம் கொஞ்சம், கோபம் கொஞ்சம், விரக்தியோடு கூறிட,

“ஏன்னா நான் உன் தம்பிடி…” என கோபம் கொண்டு கத்தியவன், “இந்த உலகத்துல எனக்கு எதுவுமே முக்கியமில்லை… உன்னைத்தவிர…” என்றான் அழுத்தத்துடன்…

அவனின் வார்த்தைகள் கேட்டு அவளது விழிகள் கலங்கிட, மௌனமாய் இருந்தாள் சில நொடிகள்…

அவளின் அந்த மௌனம் அவனுக்கு பிடித்தமாயில்லை…

“இங்க பாரு சாரு… எனக்கு என் சாரு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்… இதுவரை உன்னை நான் சந்தோஷமா பார்த்துக்கிட்டேன்… இனி கௌஷிக் சார் பார்த்துக்கணும்… அவர் என்னை விடவுமே உன்னை சந்தோஷமா பார்த்துப்பார்… அந்த நம்பிக்கை இருக்கப்போய் தான் நான் அவர் வீட்டுக்கே இன்னைக்குப் போனேன்… அதுமட்டுமில்லாம, பேச வேண்டியவங்க கிட்ட பேசி ஒரு முடிவுக்கும் வந்துருக்கேன்… நீ அதை தப்புன்னு சொன்னா, அதுக்கு நான் கவலைப்படமாட்டேன்… ஆனா, என் முடிவு முடிவுதான்… அதையும் யாராலயும் மாத்த முடியாது… உன்னால கூட….”

சிறுபிள்ளைத்தனமான அடத்துடனும், வாலிபனுக்கே உண்டான திடத்துடனும் அவன் கூறிட, அவள் மலைத்து நின்றது சில நொடிகளே…

“என் ஒருத்தி சந்தோஷம் உனக்கு முக்கியமா படலாம் தீபா… ஆனா, எனக்கு எல்லாரோட சந்தோஷமும் முக்கியம்… அதுமில்லாம அவங்க…. அவங்க….”

மேற்கொண்டு பேச முடியாது, அவள் திணறிட, அவன் அவள் முகத்தினை ஆராய்ந்தான் கூர்மையாக…

“அவங்க பெரியவங்க… அவங்க வார்த்தைக்கும் நாம மரியாதை கொடுக்கணும்… அதை நாம அவமதிக்கக்கூடாது…”

“நான் அவமதிக்கலையே… ஆனா சின்னவங்க வார்த்தைக்கு அவமதிப்பை ஏற்படுத்துற அவங்களுக்கு நான் மரியாதை கொடுத்து மதிக்க விரும்பலை… அவ்வளவுதான்…”

எளிதாக அவன் உரைத்திட, அவளுக்கு அவனிடம் எடுத்துரைப்பது எளிதாக இல்லை…

“சின்னவங்க நம்ம நல்லதுக்குத்தான் பெரியவங்க சொல்லுவாங்க… அது உனக்கும் தெரியும்தான தீபா…”

“கண்டிப்பா… ஆனா அதே நேரத்துல சின்னவங்க சந்தோஷமும் முக்கியம் தான?...”

“அந்த சந்தோஷம் பெரியவங்க ஆசிர்வாதம் இருந்தா மட்டும் தான் கிடைக்கும் தீபா…”

“நம்ம சந்தோஷத்தைக் கொல்லணும்னு நினைக்குறவங்க ஆசீர்வாதம் நமக்கு கிடைச்சா என்ன?... இல்ல கிடைக்காட்டாதான் என்ன?...”

“தீபா?...”

“நீ எங்கிட்ட என்ன சொன்னாலும் நான் இப்படித்தாங்க்கா பேசுவேன்… நீ என் மேல கோபப்பட்டு அடிச்சாலும் சரிதான்… நான் வாங்கிப்பேன்… பட் அதுக்காக நீ சொல்லுற அந்த பெரியவங்க பேச்சை கேட்பேன்னு கனவுல கூட நினைச்சிடாத… எனக்கு உன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்…”

அடி என்றாலும் வாங்கிக்கொள்வேன்… கடினமான வார்த்தைகள் கூட கேட்டுக்கொள்வேன்… ஆனாலும் தமக்கையின் சந்தோஷம் ஒன்றே முக்கியம் என்று கூறும் தம்பியின் மனநிலையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தாள் சாரு… அவனிடம் இதே ரீதியில் பேசினால் சரி செய்ய முடியாதென்று நினைத்தவள் தன்னையே ஆயுதமாக்கிட முடிவெடுத்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.