(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 10 - மது

AT THE END OF INFINITY

Heart

ரு மாதம் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது.

ஹரிணிக்கு அடுத்து மெடிகல் எமர்ஜன்சி மற்றும் ஐசியூ பத்து நாள், பின் வார்ட் இருபது நாள் என்று ஒரு மாத கால பயிற்சி.  

ஹேமமாலினி ஏற்கனவே இப்பயிற்சியை முடித்து விட்டிருந்த நிலையில் அவளை தேடிச் சென்றாள் ஹரிணி.

“அவ்வளவு ஒன்னும் கஷ்டம் இல்ல ஹரிணி. எமர்ஜன்சி, ஐசியூ கொஞ்சம் கஷ்டம். ஷிப்ட் சிஸ்டம் சோ அவ்வளவா சிரமமா இருக்காது. மெடிகல் எமர்ஜென்சி சீப் குணா சார் நல்ல டைப். வார்ட் ப்ரீ தான். வாரத்தில் ஒரே ஒரு நாள் தான் 24  ஹவர்ஸ். மத்தபடி ஈசி தான்” ஹேமா சொல்லவும் சரி என்று கேட்டுக் கொண்டாள் ஹரிணி.

“உனக்கு சர்ஜிகல் எமர்ஜன்சி அண்ட் வார்ட் தானே. ஆபரேஷன் தியேட்டருக்கு போவீங்க தானே” ஆர்வமாய் கேட்டாள் ஹரிணி.

“ஹாவ் டு பேஸ் டெரர் துரை ஹரிணி” சோகமாய் சொல்லிச் சென்றாள் ஹேமமாலினி.

ஹர்ஷா ஹரிணி இருவருக்கும் முதலில் எமர்ஜன்சி மற்றும் ஐசியூ பிரிவில் பணி இருந்தது.

நிறைய கற்றுக் கொண்டார்கள். பயிற்சி பெற்றார்கள். இப்போது தான் உண்மையாக மருத்துவர் ஆகி இருக்கிறோம் என்று உணர்ந்தார்கள்.

அன்று ஹர்ஷா ஹரிணி இருவரும் பணியில் இருந்தார்கள். எழுபது வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் மிகுந்த மூச்சிழைப்புடன் வந்தார்.

ஹரிணி ஓடிச் சென்று அவரை கைத்தாங்கலாக பற்றி பெட்டின் அருகே அழைத்துச் செல்ல ஹர்ஷா அவரது மார்பில் ஸ்டேதேஸ்கோப் வைத்து பார்க்க முற்பட்டான்.

ஆனால் அவரோ சாவாதானமாக அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்தார்.

“ஒரு சிசி டெரிபைலின் ஒரு சிசி டெக்சோனா நரம்பில போடுங்க” மூச்சிரைக்க அவரே மருந்தின் பெயர், அதன் டோஸ் அனைத்தையும் சொல்லி தனது கையை நீட்டினார்.

ஹர்ஷா ஹரிணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நர்ஸ் பிருந்தா ஊசியை எடுத்து வந்து பெரியவருக்கு செலுத்தினார்.

சிறிது நேரத்திலே அவரது சுவாசம் சீரானது.

“தாத்தா இப்போ பரவாயில்லையா” ஹரிணி அவரிடம் வினவினாள்.

“புது ஹவுஸ் சர்ஜனா” ஹர்ஷா ஹரிணி இருவரையும் பார்த்துக் கேட்டார்.

“ஆம்” என்று இருவரும் தலையாட்டினர்.

“எனக்கு ஆஸ்துமா உண்டு. அடிக்கடி ரொம்ப மோசமா போய்டும். ஊசி போட்டா தான் சரியாகும். இத்தனை வருஷமா நோயோடு இருக்கிறேன். அதான் மருந்து பெயர் எல்லாம் அத்துபடி. அடிக்கடி இங்க வந்து போவேன். உங்கள மாதிரி நிறைய டாக்டர் பார்த்துட்டேன்” விளக்கம் சொன்னார்.

“உங்க கூட யாரும் வரலையா தாத்தா” ஹரிணி அவரிடம் கேட்டாள்.

“பசங்க எல்லாம் இருக்காங்க மா. அவங்க அவங்க குடும்பமா ஆகிடாங்க. இஸ்திரி போடறேன். மூணுவேளை கஞ்சிக்கு யாரையும் எதிர்ப்பார்க்காம பொழப்பு ஓடுது. இந்த இழுப்பு வந்தா தான் கொஞ்சம் சிரமமா போகுது. அதுவும் இங்க வந்து ஒரு ஊசி போட்டுட்டு போய்ட்டா சரியா போய்டும்” பெரியவர் சொல்ல ஹர்ஷவர்த்தன் முகத்தில் வருத்தத்தின் ரேகைகள்.

“ராசாவாட்டம் இருக்க நீ ஏன் பா வருத்தப்படுற. உங்க நல்ல மனசுக்கு ரெண்டு பேரும் பெரிய டாக்டரா வருவீங்க” வாழ்த்திவிட்டு சென்றார் அந்தப் பெரியவர்.

ஹர்ஷவர்தன் மிகவும் நெகிழ்ந்து போனான். அவனுக்குள் பல சிந்தனைகள். அன்றைய பணி நேரம் முடிந்ததும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் இருவரும்.

அன்று நிறைந்த பௌர்ணமி. வானில் பால்நிலா தண்ணொளியை வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

ஈரப்பதம் நிறைந்த கடற்காற்று வீச ரம்மியமாக இருந்தது அந்த முன்னிரவு பொழுது.

ஹர்ஷா மிகவும் அமைதியாக இருப்பதை கவனித்த ஹரிணி அவனிடம் அது பற்றி கேட்டபதா வேண்டாமா என்று தனக்குள்ளேயே ஆலோசனை செய்து கொண்டிருந்தாள்.

“அந்த தாத்தாவை பார்க்க பாவமா இருந்துச்சு” உண்மையான வருத்ததுடன் சொன்னான் ஹர்ஷா.

“அவரைப் போல நிறைய பேர் இருக்காங்க. அவரை விடவும் இன்னும் மோசமான நிலையிலும் பலர் இருக்காங்க” ஹரிணி அவனிடம் சொன்னாள்.

“அந்த தாத்தாவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்திருக்கலாம்”அவன் சொல்ல ஹரிணி நின்று விட்டாள்.

இரண்டு அடி எடுத்து வைத்த ஹர்ஷா அவள் வராதது கண்டு நின்று திரும்பிப் பார்க்க அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு”

“பணம் கொடுத்தா எல்லாம் சரி ஆகிடுமா ஹர்ஷவர்தன்” அவள் அவன் பெயரை அழுத்திச் சொன்னது ஏனோ அவனுக்குப் பிடித்தமாய் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.