(Reading time: 15 - 30 minutes)

“மினி கேன் வீ ஸ்டார்ட்” டாக்டர் துரை டாக்டர் மீனலோசினியைப் பார்த்துக் கேட்டார். இவ்வளவு மென்மையாக கூட இவர் பேசக் கூடுமா என்று ஹரிணி ஹர்ஷா இருவருமே ஆச்சரியப்பட்டனர்.

டாக்டர் மீனலோசனி ஆரம்பிக்கலாம் என்று சொன்னவுடன் ஹர்ஷா கையில் ஸ்கேல்பல் என்று அழைக்கப்படும் கத்தியைக் கொடுத்தார்.

அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

ஹர்ஷா அவர் கையில் இருந்து அந்தக் கத்தியை வாங்கினான்.

யாரும் எதுவும் பேசவில்லை. ஹரிணியை திரும்பிப் பார்த்தான். அவள் கண்களாலே டாக்டர் துரையைக் காண்பித்து புருவங்களை உயர்த்தினாள்.

ஹர்ஷா அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் இவை அனைத்தும் நடந்தேறியது.

ஹர்ஷா அந்த நோயாளியின் பெயர், அவரது நோய் இவற்றைக் கூறி இந்த அவசர அறுவை சிகிச்சையை எப்படி செய்ய வேண்டும் என்ற முறைகளை கூறினான்.

டாக்டர் துரை என்ன சொல்ல போகிறாரோ என்று அனைவரும் ஒரு வித எதிர்ப்பார்ப்போடு காத்திருக்க ஹர்ஷா கையில் ஸ்கேல்பலை சரியான முறையில் பிடித்திருந்ததை .கவனித்தார் டாக்டர் துரை. .

குழந்தைக்கு முதன்முறை அகரம் எழுத பயிற்றுவிப்பதைப் போல ஹர்ஷாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு ஸ்கேல்பலை பயன்படுத்த கற்றுக் கொடுத்தார்.

அதன் பிறகு டாக்டர் துரை சர்ஜரி செய்ய ஹர்ஷா ஹரிணி இருவருக்கும் ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார்.

வெற்றிகரமாக சர்ஜரி முடிந்து விட இறுதியில் தையல் போட இருவருக்கும் தெரியுமா என்று கேட்டார்.

இருவருமே ஒரு மாத காலம் பயிற்சி எடுத்திருந்ததால் தெரியும் என்று சொல்லவே அவர்களை போட அனுமதித்தார்.

ஹர்ஷா ஹரிணி இருவரும் எதிர்முனைகளில் இருந்து ஆரம்பிக்க ஹர்ஷா விறுவிறுவென அதே சமயம் சிறப்பாகவும் தையலை போட்டு முடித்து விட்டிருந்தான்.

ஹரிணி மெல்ல மெல்ல போட பொறுமையாக காத்திருந்தான். அவளோ அவனையே முழுவதையும் போடச் சொன்னாள்.

டாக்டர் துரை நோட்ஸ் எழுதிக் கொண்டே இவர்கள் புறம் ஓர் கண் வைத்துக் கொண்டு தான் இருந்தார்.

ஆனால் அவர் கவனித்தது ஹரிணிக்கு தெரியவில்லை. ஹர்ஷா தையலைப் போட ஹரிணி அவனுக்கு உதவி செய்தாள்.

நர்ஸ் டிரஸ்ஸிங் செய்யும் முன் டாக்டர் துரையை சரி பார்க்க அழைத்தார்.

அவர் வந்து பார்த்து விட்டு, “மினி வி ஆர் டன்” எனவும் நர்ஸ் டிரஸ்ஸிங் செய்ய டாக்டர் மீனலோசனி நோயாளியை  மயக்கத்தில் இருந்து தெளிவித்தார்.

சர்ஜரி முடிந்து நோயாளியை ரிகவரி வார்டில் அனுப்பி விட்டு ஹர்ஷா ஹரிணி இருவரும் எமர்ஜன்சி வந்து சேர்ந்தனர்.

ஹர்ஷாவின் விசிறிகள் அவனுக்காக வைத்திருந்த பிஸ்கட் மற்றும் தேநீரை அவன் அப்போது ஹரிணியோடு பங்கிட்டு கொண்ட போது எதுவும் சொல்லாமல் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

‘இப்போ மட்டும் வாங்கிப்பா’ மனதில் நினைத்தாலும் அவன் எதுவும் சொல்லவில்லை.

“சார் அந்த மேடம் கிட்ட மட்டும் எவ்ளோ மெதுவாக பேசுறார்” ஹரிணி அவனிடம் சொன்னது அங்கிருந்த மற்றவர் காதுகளிலும் விழுந்தது.

“எந்த மேடம்” அங்கிருந்த பணியாளர் ஒருவர் கேட்டார்.

“அனஸ்தடிஸ்ட் மேடம் டாக்டர் மீனலோசனி” ஹர்ஷா பதில் சொன்னான்.

“மேடமா, பின்ன அவங்ககிட்ட கோபமா பேசினா சார் புவ்வாக்கு என்ன பண்ணுவார்” அந்தப் பணியாளர் சொல்லி சிரித்தார்.

அவர் சொன்னது ஹர்ஷவர்தனுக்கு விளங்கவில்லை. அவன் புரியாமல் விழித்தான்.

“மேடம் சாரோட வைப்” ஹரிணி சொல்ல அப்போதும் அதனால் என்ன என்று கேட்டு வைத்தான்.

“ஹ்ம்ம் உனக்கு வைப் வருவா அப்போ அவகிட்ட நீ கேட்டுக்கோ இது பத்தி” ஹரிணி சொல்லவும் ஹர்ஷா மந்தகாசமாய் புன்னகைத்தான்.

அன்று இரவு நெடுநேரம் ஆகி விட்டதால் விடியலில் அன்னையை அழைத்து அனைத்தையும் அவரிடம் ஒப்புவித்தான்.

“ஹரி உன்னை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு” சாரதா பூரிப்புடன் கூறினார்.

அன்னையின் இந்த மொழிகளைக் கேட்க தான் அவன் எவ்வளவு காலம் தவம் இருந்தான். என்றாலும் இதே வார்த்தைகளை ஹரிணியும் சொல்ல வேண்டும் என்று அவன் உறுதி கொண்டானே. அது எப்போது நடக்குமோ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.