(Reading time: 15 - 30 minutes)

‘அன்று கோயிலில் மட்டும் ஹரி என்று சொன்னாள். இப்போது மட்டும் என்ன நீட்டி முழக்கி சொல்கிறாள்’ அவன் மனதில் கோபம் எட்டிப் பார்த்தது.

“ஏன் சரியாகாது” அவளோடு வாதம் புரிய வேண்டும் என்று தான் அப்படி சொன்னான்.

“பார்ன் வித் சில்வர் ஸ்பூன்க்கு எல்லாம் புரிய வைக்க முடியாது” அவளும் விட்டேறியாக கூறிவிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள்.

அது வரை சுமூகமாக சென்று கொண்டிருந்தவர்கள் அன்றிலிருந்து முறைத்துக் கொண்டே இருந்தனர்.

வார்ட்டில் பணிபுரியும் போது அங்கிருக்கும் நர்ஸ், வார்ட்டில் இருக்கும் மற்ற ஊழியர்கள் அனைவரும் ஹர்ஷவர்தனை பிரின்ஸ் என்று கொண்டாடி அவனுக்காக உதவிகள் எல்லாம் செய்வதைப் பார்த்து ஹரிணிக்கு இன்னும் அதிகமாக கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“நம்ம ஏதாச்சும் ஹெல்ப் கேட்டா ஒருவரும் செய்யவே மாட்டாங்க. அவனுக்கு மட்டும் விழுந்து விழுந்து எல்லா வேலையையும் செய்து தராங்க” என்று பொருமினாள்.

ற்றொரு மாதமும் கடந்து விட சர்ஜிகல் போஸ்டிங்கில் இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

அன்று முதல் நாள் நாம் ஒழுங்காக வேலை செய்தால் போதாதா. யார் என்ன சொல்லி விட முடியும் என்று வசனம் பேசியவள் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று படிந்து போகும் அளவிற்கு டாக்டர் பாண்டிதுரையின் கீழ் பணி புரிவது மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் தான் இருந்தது.

டாக்டர் துரை பாரபட்சம் இன்றி நடந்து கொண்டார். எல்லோரையும் போல ஹர்ஷாவிடமும் அதே கடுமையைக் காட்டினார். சொல்லப் போனால் சற்று அதிகமாக காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.

இரவு பதினோரு மணி. சர்ஜிகல் எமர்ஜன்சியில் ஹர்ஷா ஹரிணி இருவரும் பணியில் இருந்தனர். அன்று காலை எட்டு மணிக்கு வந்தவர்கள் ஓய்வின்றி பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

“ஹர்ஷவர்தன் ஹரிணி கம் டு தியேட்டர் த்ரீ” டாக்டர் துரை ஆணையிட்டு சென்றுவிட்டார்.

இருவரும் விழுந்து அடித்துக் கொண்டு ஆபரேஷன் தியேட்டர் சென்றனர்.

உள்ளே சென்றவர்கள் ஓர் ஓரத்தில் விழித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

“திஸ் இஸ் ஆபரேஷன் தியேட்டர். இங்க என்ன படமா ஓடுது. கோ அண்ட் ஸ்க்ரப்” கர்ஜனை செய்தார்.

டாக்டர் பாண்டிதுரை பொதுவாக ஹவுஸ் சர்ஜனைகளை அவருடன் சர்ஜரி செய்ய உதவி சர்ஜனாக அழைப்பதில்லை. முதுகலை மாணவர்கள், உதவி பேராசிரியர்கள் தாம் அவருக்கு உதவியாக செல்வர்.

“உண்மையில் நீங்க ரெண்டு பேரும் லக்கி. ஸார் ரொம்ப அபூர்வமா தான் ஹவுஸ் சர்ஜன்களை அவர் தியேட்டரில் அனுமதிப்பார். மனுஷன் எவ்வளவு கடுமையா கத்தினாலும் அவரைப் போல ஒரு அருமையான சர்ஜனை பார்க்க முடியாது. ஆல் தி பெஸ்ட்” அவர்களுக்கு உதவி செய்த மூத்த நர்ஸ் ஒருவர் சொல்ல இருவரும் சற்றே நம்பிக்கை கொண்டனர்.

ஸ்க்ரப் செய்து கையில்  உறை அணிந்து இருவரும் அவருக்கு எதிரில் வந்து நின்றனர்.

“இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம். உங்களை முதலில் அறிமுகம் செய்து இங்க இருக்க எல்லோருக்கும் வணக்கம் சொல்ல வேண்டாமா. ஆபேரஷன் தியேட்டர் எதிக்ஸ் கூட தெரியாதா” மீண்டும் சாடினார்.

இருவருமே ஒன்றும் புரியாமல் விழித்தனர்.

“பி.டி குழந்தைகளை மிரட்டாதே” இனிமையான குரல் எங்கிருந்து வந்தது என்று ஹர்ஷாவும் ஹரிணியும் திரும்பிப் பார்த்தனர்.

“டாக்டர் மீனலோசினி யுவர் அனஸ்தடிஸ்ட்” தலையில் கேப் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அவரின் கனிவான விழிகள் மட்டுமே தெரிந்தன.

“ஐ ஆம் ஹர்ஷவர்தன்” என்று ஹர்ஷா சொன்னது தான் தாமதம்.

“ஐ ஆம் ஹர்ஷவர்தன்னா என்ன அர்த்தம். ரோட்ல போற ஹர்ஷவர்தனா” அவர் குரலில் சற்று நடுங்கித் தான் போனான் ஹர்ஷா.

“டாக்டர் ஹர்ஷவர்தன், ஹவுஸ் சர்ஜன்னு சொல்லு ஹரி” ஹரிணி மெல்ல அவன் காதில் ரகசியமாய் சொன்னாள்.

ஸ்விட்ச் போட்டதும் எரியும் பல்ப் என்பார்களே அப்படி ஒரு பிரகாசம் வந்தது ஹர்ஷாவின் முகத்தில்.

ஹரிணியின் ஹரி என்ற அழைப்பே அந்த ஸ்விட்ச்.  

“குட் ஈவனிங் சார் மேடம் அண்ட் ஆல். ஐ ஆம் டாக்டர் ஹர்ஷவர்தன் ஹவுஸ் சர்ஜன் போஸ்டட் இன் சர்ஜிகல் எமர்ஜன்சி” கம்பீரமாக தெளிவாக அவன் சொல்ல ஹ்ம்ம் என்று அமோதித்தார் டாக்டர் துரை.

அவனை பின்பற்றி ஹரிணியும் அவ்வாறே சொல்லவும் அங்கே ஒரு வினாடி அமைதி நிலவியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.