(Reading time: 15 - 30 minutes)

டாக்டர் துரை ஹர்ஷாவை இரண்டொரு சர்ஜரிகளில் உதவி சர்ஜனாக அழைத்து அவனுக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்.

“ஒரு நல்ல சர்ஜனின் கரங்கள் ஒரு தாயின் கரங்கள் போல மென்மையாக அதே சமயம் பாதுகாப்பாக நோயாளியைக் கையாள வேண்டும், அவன் விழிகள் பருந்தினைப் போல கூர்மையாக இருக்க வேண்டும், எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அஞ்சாத நெஞ்சம் வேண்டும். இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கேப்டனாக திகழ வேண்டும். வெற்றியை குழுவினருக்கு அர்ப்பணித்து தோல்விக்கு தான் மட்டுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” அவர் கூறியது அவன் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போனது.

உடனே வந்து ஹரிணியிடம் இவ்வாறு சார் சொன்னார் என்று பகிர்ந்தும் கொண்டான்.

“கண்டிப்பா நீ ஒரு நல்ல சர்ஜனா வருவ ஹரி” அவள் மனப்பூர்வமாக சொன்னது அவனுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை தந்தது.

இருவரும் அதன் பிறகு இணக்கமாகவே இருந்தனர்.

அன்று இவர்களின் சர்ஜிகல் பிரிவின் கடைசி நாள். ஒரு பெரிய விபத்து ஒன்று அருகில் ஏற்பட்டுவிட அதில் சிக்கிய பலர்  எமர்ஜன்சியில் அனுமதிக்கப் பட்டனர்.

டாக்டர்கள் அனைவரும் அவசர அறுவை சிகிச்சைகள் புரிந்த வண்ணம் பிஸியாக இருக்க ஹரிணி ஹர்ஷா இருவர் மட்டுமே ஒரு நர்சுடன் எமர்ஜன்சியில் இருந்தனர்.

அப்போது அங்கே ஒரு முப்பது வயது மதிக்கதக்க வாலிபனை ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்தனர்.

முற்றிலும் மயக்கமான நிலையில் அந்த வாலிபன் இருக்க அவன் மனைவி போலும் உடன் ஒரு சிறுவனோடு  அழுத வண்ணம் இருந்தார்.

ஹர்ஷவர்தன் முதலில் சென்று பரிசோதிக்க அதிர்ந்தான். உடனேயே ஹரிணியை உதவிக்கு அழைத்தான்.

நர்ஸின் உதவி கொண்டு உடனடி அவசர சிகிச்சைகள் செய்து கொண்டிருந்தனர்.

அந்த வாலிபனின் இதயத்திற்கும் அதனை சுற்றி இருக்கும் திரைக்கும் நடுவில் நீர் நிறைந்து இதயத்தை சுருங்கி விரிவவடைய செய்ய விடாமல் பலவீனமாக்கிக் கொண்டிருந்தது.

“நர்ஸ் கார்டியாக் சர்ஜன்க்கு எமர்ஜன்சி இருப்பதாக தகவல் சொல்லுங்கள்” ஹர்ஷா கூறிக்கொண்டே உடனடி சிகிச்சைகளை செய்து கொண்டிருந்தான்.

“டாக்டர், எல்லோருமே ஆபரேஷன் தியேட்டரில் பிசியா இருக்காங்க. சீனியர் பிஜி மாணவர்களும் பிசி தான்” நர்ஸ் வந்து சொல்ல அந்த சூழ்நிலை ஹர்ஷாவிற்கும் தெரியாமல் இல்லை.

இதயத்தை அழுத்தும் நீரை வெளியேற்றினால் தான் இதயம் சீராக இயங்கி நோயாளி உயிர் பிழைக்க இயலும் என்பது ஹர்ஷவர்தன் ஹரிணி இருவருக்கும் தெரிந்தே இருந்தது.

ஆனால் ஹவுஸ் சர்ஜன் பயிற்சியில் இது போன்ற சிறப்பு துறை பயிற்சிகள் கிடையாது. அப்போது விபத்தில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் சிறப்பு மருத்துவர்களும் உடனடியாக அங்கு வர இயலவில்லை. நேரம் ஆக ஆக நிலை மோசமாகிக் கொண்டு தான் போனது.

ஹர்ஷா ஹரிணியிடம் அந்த நீரை எப்படி வெளியேற்றுவது என்ற முறையை விளக்கினான். “இப்படி தான் செய்யணும்” என்று சொன்னான்.

“அப்போ அதை செய். இவ்வளவு நேரம் செய்யாம என்ன செய்துட்டு இருந்த” ஹரிணி கோபமாய் சொல்ல ஹர்ஷாவோ அவனுக்கு தியரி மட்டும் தான் தெரியும் முன் பின் செய்ததில்லை என்றான்.

“ஹார்ட், இட்ஸ் நாட் ஈசி, கொஞ்சம் தப்பா ஆகிட்டா கூட பேஷன்ட் உயிரே போயிடும்” ஹர்ஷா சொன்னதும் சரி என்று தான் ஹரிணிக்கு பட்டது.

இருப்பினும் அப்போது அவர்கள் பார்க்க பார்க்க அவர்களின் கண் முன் ஒரு உயிர் பிரிவதா. அவர்கள் இயன்ற முயற்சிகள் செய்கிறார்கள் தான். ஆனால் அது நீண்ட நேரம் பலனளிக்காது என்ற போது ரிஸ்க் எடுத்தால் தான் என்ன.

ஹரிணி கூற ஹர்ஷா பதற்றமானான்.

“ஹரி, டூ இட்” அவன் கரத்தினைப் பற்றினாள்.

ஹர்ஷா டாக்டர் துரையின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தான். அவன் முறையாக ஊசியை செலுத்தி நீரை அகற்ற அதே சமயம் ஹரிணி நோயாளியின் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்காணித்து மருந்துகள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்தாள்.

வெற்றிகரமாக சிகிச்சை முறையை செய்து முடிக்க, நோயாளியும் பிழைத்துக் கொள்ள  இதயப் பிரிவினை சேர்ந்த மூத்த மருத்துவரும் டாக்டர் துரையும் அங்கே வந்து சேர்ந்தனர்.  

நோயாளியை பரிசோதித்த இதய நிபுணர் உடனடியாக இதய சிகிச்சை பிரிவிற்கு அவரை மாற்ற ஆணை பிறப்பித்தார்.

நோயாளியின் மனைவியிடம் பேஷன்ட் விரைவில் குணமாகி விடுவார் என்று நம்பிக்கையும் தெரிவித்தார் அந்த மருத்துவர்.

அவர்  ஹரிணி ஹர்ஷாவிடம் ஏதோ கூற வரும் முன் டாக்டர் துரை இருவரையும் அவரது அறைக்கு வருமாறு அணையிட்டு சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.