(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 18 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

சாரு… இந்த போன் எப்படி இருக்கு?...”

தீபன் தன் தமக்கையிடம் வினவ, “உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாருடா…” என எதிர்கேள்வி கேட்டாள் அவள்…

“ஹேய்… நான் உங்கிட்ட கேட்டேண்டி…”

அவன் கேட்டுக்கொண்டிருக்கையிலே, அவள் சட்டென எழுந்து கொண்டாள்…

“என்னாச்சு இவளுக்கு?...” என்ற கேள்வியுடன் அவன் மனமானது யோசனை செய்ய,

“தீபா…” என்ற கணீர் குரலில் திடுக்கிட்டான் தீபன்…

பார்வை சட்டென நிமிர, கால்களும் பட்டென எழுந்து கொண்டது அவனுக்கு…

“வாங்கோப்பா… எப்படி இருக்குறேள்…”

சாரு நலம் விசாரித்திட,

“நேக்கென்ன குறைச்சல்ம்மா… நான் நன்னா இருக்குறேன்…” என சிரித்தவர் பார்வை சாருவின் மீது நின்றிட, அவளும் அவரைப் பார்த்திட்டாள்…

“என்னப்பா?.. வேத்து மனுஷாளா பார்க்குற மாதிரி பார்க்குறேள்…”

“நான் வளர்த்த பொண்ணு… இப்போ என் முன்னாடி மத்தவ பெருமையா பேசுற மாதிரி வளர்ந்துநிக்குறியோ இல்லையோ… அதான் பெருமையா பார்த்துண்டிருக்கேன்…”

“நான் இன்னும் எதுவும் சாதிச்சுடலைப்பா… இப்பதான் அடி எடுத்தே வச்சிண்டிருக்கேன்…”

அவளின் பதிலுக்கு சிரித்தவர், தீபனைப் பார்த்தபடி, “உன்னோட ப்ராக்டீஸ் எல்லாம் எப்படி போயிண்டிருக்குடா?..” என வினவ,

“நன்னா போயிண்டிருக்குப்பா…” என பவ்யமாய் பதிலளித்தான் அவனும்…

“அடுத்த வாரம் அமெரிக்கா போறதுக்கு ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டியோண்ணோ?...”

“செஞ்சுட்டேன்ப்பா…”

“அப்படி என்ன செஞ்சுட்ட நீ?...”

“சாருவோட ப்ரோகிராம் எல்லாம் இப்பவே இயர்லியரா முடிச்சிட்டேன்… நெக்ஸ்ட் ஒன் மந்த் அவ ஃப்ரீ தான்… அவ சேஃப் ஆ வீட்டுக்குள்ள இருப்பா… எதுவும் கச்சேரி மட்டும் அவசரமா வந்துடுச்சுன்னா, அவளை பத்திரமா கூட்டிட்டுப்போகவும், வரவும், ஆள் ஏற்பாடும் பண்ணிட்டேன்ப்பா…”

அவர் எதை நினைத்து கேட்டாரோ, அதை அவன் தெளிவாய் உரைத்திட, அவரின் முகத்தில் ஒரு பெருமை மின்னியது…

“பாருங்கோப்பா… என்ன வேலை செஞ்சிருக்கான்னு?...”

அவள் குறையாய் கூறிட,

“அவன் செஞ்சதுல நேக்கெதும் தப்பு தெரியலையேம்மா… அவன் சரியா தான செஞ்சிருக்கான்…”

“இல்லப்பா… இந்த தடவை என்னால தனியா இருக்க முடியாதுப்பா…”

“சரிம்மா… நீ ஆத்துக்குப் போய் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வை… நான் கார் அனுப்புறேன்…”

அவர் சொன்னதும், சாரு புரியாமல் அவரை பார்த்துவிட்டு, தீபனையும் ஒருமுறை திரும்பி பார்த்தபடி,

“புரியலையேப்பா…” என்றாள் தன்மையாக…

“நீ நம்மாத்துக்கு வந்துடும்மா…”

அவர் சொன்னது தான் தாமதம் என்பது போல், “நான் குறுக்கே பேசுறதுக்கு என்னை மன்னிச்சிடுங்கோப்பா… சாரு அங்க வந்து தங்குறது நேக்கென்னவோ சரியா படலைப்பா…” என்றான் தீபன் அவசரமாய்…

“தீபா… அப்பாகிட்ட என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறீயா?...”

அவள் அவரின் முன், அவனை பல்லைக்கடித்தபடி அதட்ட,

“பரவாயில்லை… விடும்மா… அவன் மனசுல பட்டதை அவன் சொல்லுறான்…” என சிரித்தவரிடம்,

“மன்னிச்சிடுங்கோப்பா… அவன் பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்….” என கைகூப்பியவள்,

“இந்த தடவை அவனை தனியா விட நான் தயாரா இல்லப்பா… இதுவரை அவன் போன ஃபாரீன் ட்ரிப் எல்லாம் மிஞ்சி மிஞ்சி போனா 7 நாள் ஆகும்… ஆனா இப்போ ஒரு மாசம் அதிகம்ப்பா… அவ்வளவு நாள் அவனை விட்டுண்டு நான் தனியா இருக்க முடியாதுப்பா… அதனால அவனோடவே நானும் அமெரிக்கா போகலாம்னு இருக்கேன்ப்பா…”

அவள் சொல்வதில் இருந்த நியாயமும் அவருக்கு புரிந்திட, “ஆனா அவன் தனியா போகலையேம்மா… அவனோட சேர்த்து இங்க இருக்குற ப்ளேயர்ஸ் எல்லாருமே போவாங்களே…”

“உண்மைதான்ப்பா… நேக்கு தனியா டிக்கெட் போட்டுண்டேன்… அங்க என் ஃப்ரெண்ட் ஒருத்தி இருக்கா… அவ ஆத்துல தங்கிட்டே, தீபாவோட மேட்ச் பார்த்த மாதிரியும் இருக்கும்… நானும் அவனோட இருந்த மாதிரியும் இருக்கும்…. நீங்க என்ன சொல்லுறேள் அப்பா?...”

அவள் தயக்கத்துடன் கேட்டிட,

“ஷேமமா போயிட்டுவாம்மா…” என்றார் அவரும் அக்கணமே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.