(Reading time: 16 - 32 minutes)

ரண்டு நாட்கள் கழித்து,

சோபாவில் அமர்ந்து டீவியைப் பார்த்துக்கொண்டிருந்த சாருவின் முன், புன்னகையுடன் வந்து நின்றான் தீபன்…

“என்னடா?... முகமெல்லாம் பல்லா இருக்கு?...”

“உனக்கு ஒரு குட் நியூஸ்…”

“என்ன குட் நியூஸ் தம்பி… எனக்கும் சொன்னா, நானும் சந்தோஷப்படுவேன்ல…”

மஞ்சுளாக்கா தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தீபனிடம் கேட்க,

“உங்களுக்கு சொல்லாமலா?... சாருக்கு இந்த வருஷத்தோட பெஸ்ட் சிங்கர் அவார்ட் கிடைச்சிருக்கு…”

“அட போங்க தம்பி… அதுதான் எனக்கு என்னைக்கோ தெரியுமே…”

“அட அக்கா… அவ பேரைப் போட்டு, விருதையும் அவ பக்கத்துல போட்டு, நிறைய புக், மேகசின் எல்லாத்துலயும் அவ போட்டோ வந்துச்சு… ஆனா இப்போ அவார்டே சாரு கைக்கு கிடைக்கப்போகுது…”

“என்ன தம்பி சொல்லுறீங்க?...”

“இன்னும் இரண்டு நாள்ல அவார்ட் ஃபங்க்ஷன்… சாரு பல பெரியவங்க முன்னாடி வாங்கப்போற ஃபர்ஸ்ட் அவார்ட்… நினைக்கவே செமயா இருக்குல்ல…”

தீபன் குதூகலத்துடன் கூற, மஞ்சுளாவிற்கும், சந்தோஷம் தாளவில்லை…

“ரொம்ப ரொம்ப சந்தோஷம் தம்பி… நீங்களும் சாரு பாப்பாவும் நல்ல படியா போயிட்டு அந்த அவார்ட் வாங்கிட்டு வாங்க… சரியா?...”

“எது நாங்க மட்டுமா?... அப்போ நீங்க வரலையா?...”

“அவ்வளவு பெரிய இடத்துக்கு இந்த வேலைக்காரி வர்றது சரியா இருக்காது தம்பி…”

மஞ்சுளா சொன்ன மாத்திரத்தில், “மஞ்சுளாக்கா, இதுதான் கடைசி… இனி இப்படி ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா பார்த்துக்கோங்க…”

தீபன் உரிமையுடன் கோபப்பட, “நீ சும்மா இரு தீபா… அவங்களைப் பொருத்தவரை நாம அவங்களோட இந்த வீட்டுல இருக்குறவங்க… அவ்வளவுதான… நாம ஒன்னும் அவங்க சொந்தம் இல்லையே…” என்றாள் சாருவும் அமைதியாக…

“தீபன் தம்பி… நானும் வரேன்… எத்தனை மணிக்கு கிளம்பணும்னு சொல்லுங்க… கிளம்பி ரெடியா இருக்குறேன்…”

சாருவின் வார்த்தைகளில் இருந்திட்ட ஆதங்கமும் வருத்தமும் மஞ்சுளாவிற்கு புரிய சட்டென வருவதற்கு சம்மதம் தெரிவித்தார் அவரும்… அங்கு அவருக்கு கிடைக்கப்போகும் அதிர்ச்சி அறியாமல்…

“தீபா… அப்பாகிட்ட சொல்லணும்டா…”

“கண்டிப்பா சாரு…”

“அப்படியே அம்மாகிட்டயும்…”

சாரு இழுத்திட, “அப்பாகிட்ட வேணா, நான் சொல்லுறேன்…” என்றவன் சட்டென எழுந்து சென்றுவிட,

தீபன் போகும் திசையையே பார்த்துக்கொண்டிருக்க,

“என்ன பாப்பா?... தம்பியையே பார்த்துட்டிருக்க?..” என்ற மஞ்சுளாவின் கேள்விக்கு,

“இல்லக்கா… அ…ம்….மாவுக்கு…. போன் பண்ணனும்… அதான்….” என சாரு தயங்கிட,

“அவளை அம்மான்னு நீதான் சொல்லணும்… நல்லா இருந்த குடும்பத்தை கெடுக்க வந்த பாதகி…” என மனதிற்குள் அர்ச்சனை செய்தவர்,

“தீபன் தம்பி கோபப்படுறதுல தப்பே இல்லன்னு தான் நானும் சொல்லுவேன் பாப்பா… அவங்க கிட்ட எல்லாம் சொல்லணுமான்னு நல்லா யோசிச்சிக்கோ…” என்றவர் நில்லாது சென்றுவிட,

யோசனைகளின் மத்தியில் உழன்றவள், போனை எடுத்து நம்பரை டயல் செய்தாள்…

“சொல்லுடி… போன் பண்ணிட்டியா?... என்ன விஷயம் சொல்லு?...”

எதிர்முனையில் ஏன் போன் செய்தாய் என்ற தோரணையுடன் கேள்வி வர,

அதற்கு மேலும் விஷயத்தை தாமதிக்காது அவள் உரைத்திட,

“ஆ… அவ்வளவுதான?... சரி… வேலை இருக்கு… போனை வை…” என பதில் வந்த கையோடு,

“அந்த கௌஷிக்கிற்கும் போன் போட்டு சொல்லிட்டியா?... அப்படி எதும் சொல்ல நினைச்சிருந்தா கூட மனசுல இருந்து அதை அழிச்சிடு சொல்லிட்டேன்… அவன் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவர மாட்டான்… புரிஞ்சதா?...” கட்டளையும் வந்து, போன் அழைப்பு துண்டிக்கப்பட, கண்களில் கசிந்திட்ட நீருடன் போனை கீழே வைத்தாள் சாரு…

அந்நேரம் அவளது கண்ணீரை பெருக்குவது போல் அடுத்த போன் வர, அதை எடுத்து மெல்ல காதுக்கு கொடுத்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.