(Reading time: 16 - 32 minutes)

“தீபா… கேஷியை பத்திரமா பார்த்துக்கணும்… நீயும் ஜெயிச்சுண்டு வரணும்…”

வேண்டுகோள் பாதியும், கட்டளை மீதியுமாய் சாருவைப் பார்த்துக்கொள்ள சொல்லியவர், அவனும் வெற்றிபெற வாழ்த்த,

“பெரியவா உங்க ஆசீர்வாதம் எங்கூட எப்பவும் இருந்தா போதும்மா… நான் ஜெயிச்சுடுவேன்…”

என சொல்லியவண்ணம், சட்டென அவரின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தவனை தட்டிக்கொடுத்தார் ஸ்ரீனிவாஸ்…

“அப்போ கிளம்புறதுக்கு முன்ன, எங்கிட்ட சொல்லிண்டு போக வரமாட்டீயாடா?...”

“ஏன்ப்பா…. இப்படி கேட்குறேள்?...”

சாரு புன்னகையுடன் கேட்டிட, “இல்ல கேஷிம்மா… இவன் இப்பவே ஆசீர்வாதம் வாங்கிட்டானோ இல்லையோ… அதான்….” என்றார் அவரும் அதே புன்னகையுடன்…

அவர்களின் புன்னகை நீண்டு கொண்டிருந்த அந்த நொடியே, அவர்களை சுற்றி மக்கள் கூட்டம் கூடியது…

“கேஷிம்மா…. ஆட்கள் வர ஆரம்பிச்சுட்டா… நீ ஆத்துக்கு கிளம்பு…”

“அப்பா… அவா உங்களைத் தேடி வந்துருக்காப்பா… அதுமில்லாம நாங்க தீபாக்கு போன் வாங்க வந்தோம்… இன்னும் அவன் செலக்ட் பண்ணலை…”

“நீ ஆத்துக்கு போறதுக்குள்ள போன் அங்க இருக்கும்… கவலைப்படாம கிளம்பும்மா… தீபா கூட்டிண்டு போ…”

“அப்பா நீங்க?...”

சாரு தயங்கி நிற்க, “அவாகிட்ட கொஞ்ச நேரம் பேசிண்டு அப்புறம் நான் ஆத்துக்குப் போறேன்… நீ கிளம்பும்மா…” என்றவர் தீபனிடம் சைகை காட்ட, சாருவின் கையைப் பிடித்து வேகமாக காருக்கு அழைத்துச்சென்றான் தீபன்…

“என்ன தீபா?... அப்பா பாவம் தனியா இருக்குறார்?... அவரை இப்படி விட்டுட்டு வந்தது சரிதானா?...”

“நாம வரலைன்னா தான் தப்பா போயிருக்கும்…”

தீபனின் வார்த்தைகள், சாருவிற்கு யோசனையைக் கொடுக்க,

“அங்க பாரு…” என அவன் கைகாட்டிய திசையில் ஸ்ரீனிவாஸை நோக்கி நடைப்போட்டுக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி வேகமாய்…

“எக்ஸ்கியூஸ்மி…” என்றபடி கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்தவர், “அவருக்கு உடம்பு சரியில்லை… ப்ளீஸ்… அவரை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுறதுக்குத்தான் வெளியே கூட்டிட்டு வந்தேன்… இங்கயும் வந்து அவருக்கு தொந்தரவு கொடுக்குறீங்களே… இது உங்களுக்கே நியாயமா?...”

படபடவென்று பொரிந்தவராய் அப்பெண்மணி கேட்டிட, “சாரி மேடம்… சாரை நீங்க கூட்டிட்டு போங்க…” என அங்கிருந்த ஒருவர் மன்னிப்பும் கேட்டிட,

“சகுந்தலா…. என்ன இது?.. அவா என்ன தப்பு பண்ணினா?.. அவாளை மன்னிப்பு கேட்க வச்சுண்டியே?... இது கொஞ்சம் கூட நன்னா இல்ல…..” என சினம் கொண்டவராய் ஸ்ரீனிவாஸ் சகுந்தலாவிடம் பல்லைக்கடித்தபடி கேட்டிட,

“இல்ல சார்… உங்க மேல உள்ள அக்கறையில தான அவங்க எங்க மேல கோபப்பட்டாங்க… அவங்களை திட்டாதீங்க… உங்க உடம்பு சரி ஆகட்டும் சார்… அது தான் எங்களுக்கும் வேணும்…” என கூடியிருந்த கூட்டத்தில் உள்ளவர்கள் மெல்ல கலைந்து செல்ல, ஸ்ரீனிவாஸ் சினத்தை தனக்குள் அடக்கியவராய் அங்கிருந்து வெளியேறினார் வேகமாய்…

“பார்த்தீயா?... நல்லவேளை எஸ்கேப் ஆனோம்… இல்ல அவங்களுக்கு ஏற்பட்ட நிலைமை தான் நமக்கும்…”

தீபன் பெருமூச்சுடன் கூற

“பாவம் அப்பா… முகமே வாடிப்போச்சு…” என்றாள் சாரு வருத்தம் தாங்காமல்…

“அது அவரா தேடிக்கிட்டது தான…” என்றவனை முறைத்தவள்,

“நீ என்னை முறைக்காத… உண்மைதான நான் சொன்னதும்… அவரா போய்த்தான அந்த சாக்கடையில விழுந்திருக்கார்…”

“தீபா….” என ஆத்திரம் பொங்க இருந்தவளை,

“சாரிடி… நான் இப்படித்தான… உனக்குத் தெரியாதா?...” என பாவமாக கேட்டவன், “ஆமா நீயும் அமெரிக்கா வரீயா?... எங்கிட்ட ஒருவார்த்தைக்கூட சொல்லவே இல்லை…?...” என பொய்க்கோபமாக கேட்க

“ஆமா… உங்கிட்ட சொன்ன வேண்டாம்னு சொல்லுவ… அதான் விக்கிக்கிட்ட சொல்லி டிக்கெட் புக் பண்ண சொன்னேன்… அங்க வந்து உன் மேட்ச் பார்க்கும்போது உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்… நீ சந்தோஷப்படுவன்னு நினைச்சேன்… அதுக்குள்ள அப்பா மூலமா உனக்கே தெரியுற மாதிரி ஆகிப்போச்சு….” என்றாள் அவள் முகம் கூம்ப…

“பாருடா… எனக்கு தெரியாம ப்ளான் எல்லாம் போட்டிருக்கீங்க போல… ஹ்ம்ம்… அந்த விக்கி வரட்டும்… அவனை நான் ஸ்பெஷலா கவனிச்சிக்குறேன்…” என்றான் அவனும் சற்றே கோபமாக…

“டேய்… தீபா… பாவம்டா அவன்… நான் சொன்னதால தான் அவன் சரின்னு சொன்னான்… நீ அவனை எதும் திட்டிடாத…”

“சரி சரி… நீ சொல்றதால விடுறேன்…” என்றவன் காரை ஸ்டார்ட் செய்தபடி, அவளைப் பார்த்தான் மெல்ல…

“உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் அங்க காத்திட்டிருக்கு சாரு….” என புன்னகைத்தவனாய் காரை எடுக்க, அவளோ ஜன்னல் வழி வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள் அமைதியாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.