(Reading time: 18 - 35 minutes)

28. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

க்காக்கு கல்யாணமாக போகுதுங்குற சந்தோஷத்துல என்னோட வருங்கால மாமாவை பார்க்க ரொம்ப ஆசையா கருடா மால்கு வந்த! ஆனாலும் இன்னும் எதுவுமே முடிவாகாத நிலையில அவரோட உரிமையா பழகினா என்ன நினைப்பாரோனு ஒரு கேள்வியும்...அவங்க மனசு விட்டு பேசிக்க தானே இந்த சந்திப்பு? ஸோ இங்க நமக்கென்ன வேலை?”

அவர்களுக்கு தனிமை கொடுத்து, மாலின் கடைகளை சுற்றிக்கொண்டு கடைசியாக மேல் தளத்திலிருந்த ஸ்கேரி ஹௌஸினருகே வர... யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்.

“முதமுதலா உங்களை பார்த்த! உங்களோட சிரிப்பு போல நீங்களும் என்னை ஈர்த்திட்டீங்க ஜெய்! என்னன்னு சொல்ல தெரியாத ஒரு சந்தோஷம், கூடவே கொஞ்ச பதட்டம், பயம்னு கலவையான உணர்வுகள்.  என்னையும் மறந்து உங்களையே பார்த்துட்டு இருந்த”

ஜெய்யோடிருந்த சரயூவையும் மைத்ரீயையும் கண்டவளுக்கு காரணமரியாத பொறாமையும் ஆத்திரமும் வந்து ஒட்டி கொண்டது.   அவர்களையே விழியகற்றாது பார்த்தவளுக்கு நால்வரும் சேர்ந்து ஸ்கேரி ஹௌஸருகே செல்வதும், அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்பதும் புரிய...அந்த சமயத்தை பயன்படுத்தி அவசரமாக சென்று அவளுக்கான நுழைவுச்சீட்டை வாங்கி கொண்டு ஓடி வந்தவளுக்கு கிடைத்தது ஃபோனில் பேசியபடி நின்றிருந்த ராகுல் மட்டும்தான்.  ஜெய்யை காணவில்லை என்றதும் ஏமாற்றமும், மனதை கொள்ளையடித்தவனை நெருங்க எடுத்த முதல் முயற்சியின் தோல்வியும் வெகுவாக பாதித்தது. 

உள்ளே போனால் வெளியில் வந்துதானே ஆக வேண்டும்! சற்று நேரத்திற்கெல்லாம் தன்னை தேற்றியவள் அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.  எல்லாவற்றையும் ப்ரியாவிடம் பகிர்ந்து கொள்ளுபவள், உடனிடியாக கைபேசியில் தொடர்புகொண்டாள்.  ஜெய்யை பற்றி சொல்லிவிடும் அவசரத்தில் அழைத்துவிட்டவளுக்கு பிறகுதான் புரிந்தது, ப்ரியாவிற்கு தனிமை கொடுக்க விரும்பிதான் இங்கு வந்தாள் என்பது.  ஆனாலும் எதுவும் பேசாது வைக்க முடியாதே! எதையோ பேச, ப்ரியா இவளை வரச்சொல்ல... அய்யோவென்றாகி போனது!

அவனை பின்தொடர்ந்து அவனுடைய முழுவிவரங்களையும் கண்டுபிடித்திடும் திட்டமிட்டிருக்க அக்கா வா என்கிறாளே!

அதே சமயம் ஸ்கேரி ஹொஸிலிருந்து ஜெய் வெளிவரவும், அவனை தவரவிட்டால் ப்ரியாவே தன்னை முட்டாள் என்றுதான் சொல்லுவாள்.  அவன் கவனத்தை ஈர்க்காது பின்னோடு நடக்க... இவள் செல்ல வேண்டிய அதே காஃபி ஷாப்பினுள் அவனும் மைத்ரீயும் நுழைய இவளுள் ஒருவித எதிர்பார்ப்பும் படபடப்பும்! அதை பொய்யாக்காது ஜெய்யும் ப்ரியா இருந்த டேபிலில் உட்காரவும் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போனாள் யஷ்விதா.  துள்ளிக்குதிக்க துடித்த கால்களை அடக்கி இவளும் அவனெதிரே சென்று அமர்ந்து கொண்டாள்.  ஆதர்ஷின் தம்பி என்றால் இவனும் தனக்கு மாமா, ‘ஜெய் மாமா’ என்று மனதுக்குள் சொல்லி பார்க்க சிலிர்த்தது.  அவனை நெருங்கிவிட்ட நிறைவு! இனி யோசிக்கவும் கவலைபடவும் ஏதுமில்லை! சுலபமாக ஜெய்யிடம் காதலை சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். 

ஆனால் இதை ப்ரியாவிடம் சொல்லி, அவளுக்கு விருப்பமில்லை என்றாலும், எங்கே தனக்காக ஆதர்ஷை திருமணம் செய்ய சம்மதிப்பாளோ? வேண்டாம்! அப்படியேதும் நடக்க வேண்டாம்.  அவளாகவே ஆதர்ஷை பற்றி பேசட்டும் பிறகு நம் மனதை சொல்லிக்கொள்ளலாம்.

ப்ரியா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பிறகோ, காதல் பித்துபிடித்த மனம் தன் காதலை முதலில் அவனிடம்தான் சொல்ல வேண்டுமென புத்தாசை கொண்டது.

‘ஜெய் மாமா.... ஜெய் மாமா’ என்று அவனை கொஞ்சி, தங்களின் அடுத்த சந்திப்பை எண்ணி பல கற்பனைகளில் கரைந்திருந்தவளுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தான் அன்று!

மாப்பிள்ளை வீட்டு சார்பில் இவள் குடும்பத்திற்கு துணியெடுக்க யஷ்விதா தான் போக வேண்டுமென அம்மா சொல்லிவிட....கல்யாண பிஸியில் குடும்பத்தாருக்கு இந்த சிறு உதவி கூட செய்வில்லை என்றால் எப்படியென்று தான் ஒப்பு கொண்டாள்.  ஆதர்ஷின் பெற்றோரோடு ஷாப்பிங்க் என்று நினைத்து தயாராகி வர...அங்கே உட்கார்ந்திருந்த ஜெய்யை கண்ட மகிழ்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.

“எனக்காக நீங்க வெயிட் பண்ணது தெரிஞ்சு மன்னிப்பு கேட்க... மைத்ரீ சாரியெல்லாம் வேணாம், வேறேதாவது வேணும்னு சொன்னப்போ... என்னவேணாலும் கிடைக்கும்னு சொன்னேனே ஜெய்... உங்களுக்கு புரியலையா? என்னையே கொடுக்க தயாராயிருந்த... ஏன் இப்பவும் தான்! நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க, உங்களுக்காக எதை வேணாலும் செய்ய காத்திட்டிருக்க ஜெய்” காதலும் ஆசையும் போட்டியிட்ட கண்களில் அவள் சொன்னதை செய்திடும் உறுதியும் மறைந்திருந்தது.

ப்ரியாவின் திருமணத்தில் ஜெய்யிற்காக சிரத்தையோடு தன்னை அலங்கரித்து கொண்டவள், அவனுடைய ரசனையான பார்வைக்காக காத்திருந்தாள்.  பரபரப்போடு பம்பரமாய் மண்டபத்தில் சுழன்று கொண்டிருந்தவன், இவளை சாதரணமாக கூட பார்க்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.