(Reading time: 18 - 35 minutes)

ஜெய்யும் தனது புத்திக்கூர்மையை சோதிக்க அதில் கலந்துகொண்டான்.  மாதக்கணக்கில் பயிற்சி மேற்கொண்டு, தேர்ச்சி பெற்றுவிடும் உறுதியோடு இருந்தவன்... கடைசி பத்து நிமிடங்களையும் வீணாக்க விரும்பாது, குறிப்புகளை பார்த்தபடி நின்றிருந்தான்.  திடீரென புயல் வேகத்தில் ஓடிய ஒருவன் இவனுடைய தோளை உரசிச்செல்ல, கையிலிருந்த குறிப்புகளடங்கிய காகிதங்கள் பறந்து சிதறின.

நேரமாகிவிட்டதை உணர்ந்தவன் சிதறியிருந்த காகிதங்களை அவசரமாக ஒன்று திரட்டி பொறுக்க....இருகைகள் இவனுக்கு உதவிட...

“தாங்க் யூ!” என்றபடி நிமிர்ந்தவன் அசையாது நின்றுவிட்டான். 

பச்சை நிற சீருடையில் இவனுக்கு உதவ வந்த தேவதை அவள்! அப்படிதான் அவனுள்ளம் சொன்னது.

களங்கமில்லாத பளிங்கு போன்ற மதிமுகத்தின் வில்லென வளைந்திருந்த புருவங்களும், கூரான நாசியும், சிவந்த இதழ்களும், இவனை ஈர்த்து தனக்குள் அடைத்து கொண்ட மையிட்ட கண்களுமாக முன்னிருந்தவளை அலசிய கண்கள், சட்டையை முழுதாக மறைத்திருந்த கோட்டிலிருந்த கல்லூரியின் பெயரில் நிலைத்தது.   

“வெல்கம்” என்று மென்னகை புரிந்ததில் ஜெய்யின் இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது.

அசையாது நின்றவனிடம், “இப்படியே நின்னுட்டிருந்தா, எக்ஸாம் முடிஞ்சு போயிடும்! கடைசி பெல் அடிச்சிட்டாங்க வாங்க போலாம்” என்று அவனை கலைத்தவள் நடக்கலானாள்.

அவள் பின்னோடு செல்ல துடித்த கால்களை அடக்கி, பையினுள் காகிதங்களை திணித்தவன், செல்ல வேண்டிய அறையை நோக்கி விரைந்தான்.

அறுபது பெஞ்சுகள் மூன்று வரிசையாக பிரித்து போடபட்டிருந்த அந்த பெரிய வகுப்பறையில், தனது பதிவு எண்ணை தேடி உட்கார வேண்டுமே! பரீட்சை ஆரம்பிக்கும் கடைசி நிமிடத்தில் வந்த பதற்றத்தோடு ஒவ்வொரு வரிசையாய் பார்வையை செலுத்தியபடி வேகமாக நகர்ந்து கொண்டிருக்க...

“வாட் இஸ் யுவர் நம்பர்?” மறுபடியும் பச்சை தேவதைதான்.

வந்த வேலையை மறந்து அவளையே பார்த்தபடி நின்றுவிட...

“இஸ் இட் 689?” என்று சரியாக அவன் எண்ணை சொல்லிடவும், ஆச்சரியத்தில் கண்கள் விரிய, தலை ஆமென அசைந்தது.

வகுப்பறையின் மற்ற இரு வரிசைகளில் எண் கிடைக்காது போகவும் மீதமிருந்த வரிசையில் மூன்று பெஞ்சுகள் காலியாக இருக்க, அதில் ஒன்றுதான் இவனுடைய எண்ணாக இருக்குமென ஊகித்து தனக்கு முன் வரிசை எண்ணை சொல்லியதில் ஆச்சரியமேதும் இல்லையென்பதை அவனுக்கு யார் சொல்வது!

“கம்...கம்...இட் இஸ் ஹியர்” என்று அவளுக்கு முன், காலியாக இருந்த பெஞ்சை காட்டவும் விடுவிடுவென சென்று அமர்ந்து கொண்டவன்

“தாங்க் யூ!” என்றான்.

சற்று முன் காகிதங்களை எடுக்க உதவிய போதிருந்த அதே ட்ரேட் மார்க் புன்னகையுடன், “வெல்கம்” எனவும்... வினா மற்றும் விடை தாள்கள் கொடுத்தபடி ஆசிரியர் வரவும்...அதில் கவனம் திரும்பியது.

கடுமையான பயிற்சி மேற்கொண்டிருந்தவனுக்கு வினாக்களுக்கு சுலபமாக விடையளிக்க முடிந்தது. 

மாநில அளவிளான தேர்வென்பதால், ஒவ்வொரு வகுப்பறையிலிருந்த மூன்று ஆசிரியர்களோடல்லாமல், எக்சாம் ஸ்க்வாட் (Exam squad) ஏற்பாடு செய்யபட்டிருந்தனர்.

முறைக்கேடில்லாமல் தேர்வு நடைபெறுகிறதா என்று ஆராய அதிரடியாக எந்த வகுப்பறையிலும் நுழைந்து மேற்பார்வையிடுவதும், விதிகளை மீறி முறைக்கேடேதும் நடந்தால் அதில் ஈடுபட்ட மாணவனோ மாணவியோ, அடுத்த மூன்று வருடங்களுக்கு, இந்த பரீட்சை அல்லாது செகண்ட் பி.யூ (+2) பரீட்சையும் எழுத முடியாது தடைசெய்வதும் இந்த அணியின் வேலையாகும்.

மாணவர்கள் மும்முரமாக விடையளித்து கொண்டிருக்க, வகுப்பறையின் அமைதியை கலைத்தது மாணவனொருவன் தவரவிட்டதால் கீழே விழுந்த பேனாவின் சத்தம்.  அதில் நிமிர்ந்து பார்த்த பச்சை தேவதையின் கண்களில் சிக்கியது அந்தக் காட்சி.

இவளுக்கு குறுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒருவன், யாருக்கும் தெரியாது கால்குலேட்டர் உபயோகிப்பது. 

கால்குலேட்டர் பயன்படுத்தக் கூடாது என்ற பரீட்சையின் விதிகளில் ஒன்றை அவன் மீறியிருந்தான்.

இதை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு செல்ல நினைத்த வேளையில் எக்சாம் ஸ்க்வாட் வகுப்பறையில் நுழைந்தது.  அந்த மாணவன் கால்குலேட்டர் உபயோகித்ததை அவர்களிடமே தெரிவித்துவிட்டாள்.

அவனை பரிசோதிக்க மிகக் சிறிய கால்குலேட்டரை கண்டுபிடித்து, அவனை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.