(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 07 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே!

சொந்த பந்தங்களெல்லாம் ஒவ்வொருவராக நிச்சயதார்த்த விழாவிற்கு வருகை தந்துக் கொண்டிருக்க, பெரியவர்களெல்லாம் அவர்களை வரவேற்கும் மும்முரத்தில் இருந்தாலும், ஒருப்பக்கம் மகிழ்வேந்தனையும், அறிவழகனையும் காணவில்லையே! என்று  கவனிக்கவும் தொடங்கினர்.

ஏதாவது ஒரு தேவைக்கு வாங்க கொள்ள அனுப்ப இருவரும் வேண்டுமே! இன்னும் கொஞ்ச நேரத்தில் புரோகிதரும் வந்துவிடுவார். அதற்குள் இருவரும் எங்கே சென்றுவிட்டார்கள். எங்கேயும் செல்ல வேண்டாம் என்று தானே மகியிடம் சொல்லியிருந்தேன். அறிவையும் ஒரு வேலைக்காக வெளியில் அனுப்பியிருந்தேன். இன்னுமா அந்த வேலையை அவன் முடிக்கவில்லை என்று யோசித்த பூங்கொடி மகிக்கும் அறிவுக்கும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் இருவரது அலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.

அறிவழகனாவது வேண்டுமென்றே அலைபேசியை அணைத்திருந்தான் என்றால், மகிழ்வேந்தன் சுடரொளியை பற்றிய சிந்தனையில் இருந்ததால், தானாகவே சார்ஜ் இல்லாமல் அவன் அலைபேசி அணைக்கப்படிருந்ததை அவன் கவனிக்கவில்லை. இதில் மகியின் வீட்டு முன்பு நின்று மகியிடம் பேசிய பின் அலைபேசியை அணைத்திருந்த சுடரும் கூட பின் அதை உயிர்ப்பிக்க தோன்றாமல் விட்டுவிட்டாள். இதில் ஏர்ப்போர்ட்டில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டு வருவது மூவருக்கும் தெரியாமல், அறிவு பைக்கிலும், மகியும் சுடரும் ஒருவருக்கொருவர் பேசாமல் டேக்ஸியிலும் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

விமான நிலையத்தில் வைத்து காதலியை மணந்த காதலன், கோபமாக இருந்த காதலியை சமாதானப்படுத்த காதலன் செய்த கல்யாணம், அடி வாங்கினாலும் அசராமல் தாலி கட்டி காதலியை கைப்பிடித்த காதலன் இப்படி பல்வேறு தலைப்புகளில் அந்த காணொளி வேகமாக பரவிக் கொண்டிருந்தது. கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருந்தும், இளைஞர்கள் கவனம் இதுபோன்ற விஷயங்களில் இருப்பது வருத்தம் கொள்ளும் விஷயமாக இருக்கிறது என்று முகநூல் போராளிகள் வேறு ஒருப்பக்கம் இதை பரப்பிக் கொண்டிருந்தனர். சில தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த காணொளி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

பூங்கொடி.. மகி எங்க? அவன் கண்லயே படல.. புரோகிதர் வேற இன்னும் 5 நிமிஷத்துல வந்துடுவார்.. நிச்சயதார்த்த சடங்கு ஆரம்பிக்கும் போது அவன் சபையில வந்து உட்கார வேண்டாமா?” புகழேந்தி தன் மனைவியை தனியாக கூட்டிக் கொண்டு வந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

“தெரியலங்க.. சீக்கிரம் ரெடியாகு, புரோகிதர் வந்ததும் சடங்கு ஆரம்பிச்சிடும்னு சொல்லித்தான் வச்சிருந்தேன். அங்கேயும் இங்கேயும்னு போய்க்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான். இப்போ திடிர்னு காணோம். கூட அறிவையும் காணோம்.. ரெண்டுப்பேருக்கும் போன் செஞ்சு பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப்னு வருதுங்க..” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே, சடங்கு ஆரம்பிக்கிற நேரத்துல அண்ணனும் அண்ணியும் எங்கே? என்று தேடிக் கொண்டு அங்கு வந்தாள் எழிலரசி.

“என்ன அண்ணா.. ரெண்டுப்பேரும் இங்க இருக்கீங்க? புரோகிதர் வர நேரம் ரெண்டுப்பேரும் அங்க நிக்க வேண்டாமா?” என்றுக் கேட்டப்படியே இருவர் முகத்தை பார்த்த போது ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

“என்னாச்சுண்ணா? என்ன அண்ணி? இருவருடமும் கேட்க,

“ நம்ம மகியை காணும் எழில்.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட இருந்தான் இல்ல.. இப்போ எங்க போனான்ன்னு தெரியல.. கூட அறிவையும் காணும்..” என்றதும் எழில் ஒரு நொடி அதிர்ந்தாள்.

“ஒருவேளை சுடரை கூப்பிட போயிருப்பானோ! அவனுக்கு ஏன் இந்த வேலை?” என்று யோசித்தவள், “இருக்காது.. மகி அப்படியெல்லாம் பொறுப்பில்லாம நடந்துக்க மாட்டான்” என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவள்,

“என்ன அண்ணி.. மகி எங்க போயிருக்கப் போறான்? ஃப்ரண்ட்ஸ் யாரையாச்சும் இன்வைட் செஞ்சுருப்பான். அவங்களுக்கு இங்க வழி தெரிஞ்சிருக்காது.. அதனால கூட்டிட்டு வர போயிருப்பான். புரோகிதர் வந்து எல்லாம் ஆரம்பிக்கிறதுக்குள்ள வந்துடுவான் கவலைப்பாடாதீங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அதான் அறிவு இருக்கான் இல்ல.. ப்ரண்ட்ஸ்னா ரெண்டுப்பேருக்கும் பொதுவா தானே இருக்காங்க.. கூட்டிட்டு வர அறிவு மட்டும் போக வேண்டியது தானே! ஏன் மகி போகனும்?” அதிரடியான ஒரு கேள்வியை கேட்டப்படியே கலையரசியும் அங்கு வந்தார்.

கலையரசிக்கு மகி இல்லாத விஷயம் தெரிந்ததை நினைத்து எழிலரசிக்கு கொஞ்சம் உள்ளுக்குள் உதறியது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

“இல்லை கலை.. அறிவை நான் தான் ஸ்வீட் கடை வரைக்கும் அனுப்பியிருந்தேன். ஸ்வீட்டை தனியா தானே ஆர்டர் கொடுத்திருந்தோம். அதை சீக்கிரம் அனுப்பி வைக்க சொல்லி சொல்லிட்டு வரச் சொன்னேன். அங்க போனவன் இன்னும் வரல.. ஒருவேளை அறிவு இல்லாததால மகி போயிருப்பான்.” என்று பூங்கொடி எழில் சொன்னதற்கு ஏற்ப இப்படி தான் இருக்கும் என்று அவர் புரிந்துக் கொண்டதை சொன்ன போது,

“அண்ணி ஸ்வீட் எப்பவோ வந்துடுச்சு.. அதை சொல்லப் போன அறிவு இன்னும் வரலையா? எனக்கென்னமோ சுடர் திரும்ப ஏதாவது பிரச்சனை பண்றாளோன்னு தோனுது..” என்று கலை சொன்னதும், இவள் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறாள்? என்று மூவரும் பார்க்கும் போதே,

“ஆமாம் ண்ணா.. மகி ஏதோ எழில்கிட்ட தனியா பேசினான். அதுல இருந்து எழில் முகமே சரியில்ல.. உம்முன்னு இருந்தா, அப்புறம் அவளோட புருஷன் கூட போய் ஏதோ பேசினா.. அதான் ஏதோ பிரச்சனைன்னு எனக்கு தோனுது..” கலை பேசிய சத்தம் கேட்டு அனைவரும் இவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். கதிரவன், மாணிக்கம், மங்கை அனைவரும் அருகில் வந்தனர்.

“அக்கா ஏதாவது தெரியாம பேசாத.. சுடரால இனி எந்த பிரச்சனையும் வராது.. அவ லண்டனுக்கே போறதுன்னு முடிவு செஞ்சுட்டா, இந்நேரம் ஃப்ளைட் கூட ஏறியிருப்பா” என்று எழில் சொன்ன விஷயம் கதிரவனை தவிர மற்றவருக்கெல்லாம் புது செய்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.