(Reading time: 19 - 38 minutes)

ருவரும் கைக்கோர்த்த படி உள்ளே நுழைந்ததும், “இன்னும் என்ன பிரச்சனை பண்ண காத்திருக்க சுடர்.. இப்போ உன்னால நாங்க தலைகுனியிற மாதிரி ஆயிடுச்சு, அதுக்கு தான் லண்டன்ல இருந்து இங்க வந்தியா?” என்று எழில் ஆவேசத்தோடு பேச,

“அத்தை தப்புக்கெல்லாம் நான் தான் காரணம்.. எதுவா இருந்தாலும் என்னை கேளுங்க?” என்று மகி கூறியபோது,

“நான் எங்க பொண்ணை தான் எதுவா இருந்தாலும் கேக்க முடியும் மகி.. ஏன்னா அவ செஞ்ச காரியத்துக்கு நான் தானே பதில் சொல்லனும், லண்டனுக்கு போகனும்னு நினைச்சவ சொல்லிக்காம போயிருக்க வேண்டியது தானே! எதுக்கு லெட்டர்ல்லாம் எழுதி வச்சு பிரச்சனையை உண்டு பண்ணனும்?” என்று கேட்டாள். யாரும்  சுடரொளியை பேசிவிடக் கூடாது என்று தான் முந்திக் கொண்டு அப்படி பேசினாள். அதற்கு காரணம் சுடரின் மீது உள்ள  அக்கறையும் தான்..

ஆனால் சுடரால் அதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. யார் திட்டியிருந்தாலும் பேசி இருந்தாலும் அது அவளுக்கு பெரிய பாதிப்பை கொடுத்திருக்காது. ஏன் அவளின் தந்தையே திட்டியிருந்தால் கூட அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். ஆனால் எழில் அப்படி பேசியது தான் அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

இதற்குள் எழில் இப்படி பேசியதில் பூங்கொடியோ, “என்ன எழில் ஏன் இப்படி பேசற? நடந்தது தப்பு தான் அதுக்காக இப்படியெல்லாமா பேசறது” என்று சமாதான பேச்சு பேச,

“அதானே.. வீட்டுக்கு வந்த மருமகளை ஆரத்தி எடுத்து வரவேற்காம இது என்ன பேச்சு.” என்று ஒரு ஓரமாக சுவற்றில் சாய்ந்தப்படி தரையில் உட்கார்ந்திருந்த கலை கொஞ்சம் குத்தலாக பேசினார்.

“கலை.. என்ன இருந்தாலும் சுடரும் நம்ம வீட்டு பொண்ணு தானே!”

“ஆமாம் எங்கிருந்தோ வந்தாலும் அவ அப்பா நல்ல வேலையில, நல்ல அந்தஸ்துல இருக்கார். அவளை உங்க மருமகளா ஏத்துக்கிறதுல உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது. ஆனா நானும் என்னோட பொண்ணுங்களும் இங்க அடைக்கலம் தேடி தான வந்தோம். அதனால என்ன நடந்தாலும் அமைதியா நாங்க உள்வாங்கி தான் ஆகனும்” என்று கலை சொன்னதும், எழிலுக்கும் பூங்கொடிக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“கலை எதுக்கு இப்படியெல்லாம் பேசற?” என்று முத்து பாட்டி தான் அவரை அதட்டினார். அதே சமயம் இப்படி செய்துவிட்டாயே! என்று மகியிடம் ஒரு குற்றம் சாட்டும் பார்வையும் அருகில் இருந்த சுடரொளி மீது ஒரு கோபப்பார்வையும் வீசினார். அந்த நேரம் சுடரால் மகியிடம் மற்றுமே ஒன்ற முடிந்தது. அவன் கெட்டியாக அவளது கைகளை பிடித்துக் கொண்டிருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

“என்னடா மகி.. நீ பொறுப்பான பையன் தானே, நீயே இப்படி செய்யலாமா?” என்று பொது ஆளாக மங்கை தான் மகியை பார்த்துக் கேட்டார்.

“சாரி சித்தி.. நான் செஞ்சது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க!” என்று மகி சொன்னதும், ‘இவன் இப்போது எதை தப்பென்று சொல்கிறான். என்னை திருமணம் செய்ததையா?’ என்ற கேள்வி சுடரின் மனதில் தோன்றியது. அந்த நேரம் அவன் பற்றியிருந்த  தன் கைகளை   விடுவித்தால் தேவலாம் என்றிருந்தது. விடுவித்துக் கொள்ளவும் முயற்சித்தாள். ஆனால் அவன் அவனது பிடியை தளர்த்தவில்லை.

“எது தப்பு? அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டினதா? இல்லை இங்க ஒரு பொண்ணுக் கூட நடக்க இருந்த நிச்சயத்தை நிறுத்தினதா? இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த புகழேந்தி, இப்போது சுடரின் மனதில் தோன்றிய கேள்வியையும் சேர்த்து  வெளிப்படையாக கேட்டார்.

“நான் சுடரை கல்யாணம் செஞ்சுக்கனும்னு நினைச்சு அங்க போல.. சுடரை போகவிடாம தடுக்க தான் அப்படி செஞ்சேன். அப்படி ஒரு சூழ்நிலையில் நான் சுடரோட விருப்பத்தை கூட கேட்காம அப்படி செஞ்சது தப்பு தான்.. அதேபோல அருள் கூட நடக்க இருந்த நிச்சயத்தை நிறுத்தினதும் தப்பு தான். ஆனா அதுக்கு நான் முழுமனதோட சம்மதம் சொல்லல.. அதனால அது நடக்காம இருந்தது நல்லது தான். அதேபோல சுடர் கழுத்துல கட்டினது மஞ்சள் கயிறா இருந்தாலும், அந்த பந்தத்தை முழு மனசா அப்பவே ஏத்துக்கிட்டேன். ஆனாலும் நான் சூழ்நிலையை சரியா கையாளலன்னு எனக்கு தெரியுது. அதுக்காக தான் இந்த மன்னிப்பு. இதுக்கு பிறகாவது எல்லாம் சரியா பண்ணனும்னு நினைக்கிறேன்.”

“குடும்பத்தோட ஒத்த ஆண்பிள்ளையா இருந்துக்கிட்டு பொறுப்பில்லாம ஒருவேளையை செஞ்சுட்டு, அதை நியாயப்படுத்தக் கூடாது. இந்த நிச்சயத்துக்கு முன்ன உன்கிட்ட சம்மதம் கேட்டேன் தான.. அதை முழுமனசா ஏத்துக்க முடியலன்னா எதுக்கு சம்மதம்னு சொல்லனும்? யாரும் உன்னை கட்டாயப்படடுத்தலையே! நீ வேணாம்னு சொல்லியிருந்தா அருளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்திருப்போம். ஆனா அப்போ சம்மதம்னு தலையாட்டிட்டு இப்போ இவ்வளவு தூரம் வந்தப்புறம் இந்த கல்யாணத்தை நான் முழுமனசா ஏத்துக்கிறேன்னு நீ சொல்லலாம்.. ஆனா அதை எங்களால ஏத்துக்க முடியாது.” என்று தெளிவாகவே புகழேந்தி கூறினார்.

மகி செய்த காரியம் கண்டிப்பாக பிரச்ச்சனையை கொண்டு வரும் என்று தெரியும், இருந்தும் அண்ணன் இதை சுமூகமாக தான் முடித்து வைக்க பார்ப்பார் என்று எழில் நினைத்திருந்தாள். ஆனால் அவர் அப்படி சொல்லவும் அடுத்து என்ன? என்ற எழிலுக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பி தன் கணவனை பார்க்க, கதிர் அந்த நேரத்திலும் அமைதியாக தான் நின்றிருந்தார். இதில் புகழேந்தியின் பதிலை கேட்டு மாணிக்கம் தான் பேச ஆரம்பித்தார்.

“என்ன புகழ் இப்படி சொன்னா எப்படி? நம்ம மகி இப்படி செஞ்சத ஏத்துக்க முடியாது தான்.. அதுக்காக அதை அப்படியே விட்டுட முடியுமா? மகி இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்னதை ஊரே பார்த்திருக்கு.. இனி இந்த பொண்ணை ஏத்துக்கிட்டது தான் ஆகனும்.. இது யார் வீட்டு பொண்ணோவா? அப்படின்னாலே விட்டுட முடியாது.. அப்படியிருக்க இது உங்க மச்சானோட பொண்ணு.. அப்புறம் எப்படி விட்டிடுவீங்க?”

“நான் அந்த பொண்ணை விட்டுடுவோம்னு சொல்லல. இப்படி ஒரு கல்யாணத்தை ஏத்துக்க முடியாதுன்னு தான் சொல்றேன்.”

“அப்போ முறைப்படி கல்யாணத்தை வச்சுப்போம்” என்று அவர் திருப்பி சொல்ல, அந்த நேரம் கலை புகழேந்தியை தான் பார்த்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.