“அது இப்போ முடியாது.. இவன் செஞ்ச காரியத்தால இப்போ இங்க ஒரு பொண்ணோட எதிர்காலம் கேள்விகுறியா இருக்கு.. ஒன்னுக்கு ரெண்டுமுறை கல்யாண பேச்சு வந்து நின்னுப்போச்சு.. சாதாரணமான்னா அதை நானே பெருசா எடுத்துக்க மாட்டேன். ஆனா அருளுக்கு நடந்த பிரச்சனை உங்களுக்கே தெரியுமில்ல.. அதுக்கு தானே இவனோட கல்யாணம் பேசினோம். இப்போ இவனும் இப்படி செஞ்சுட்டான். இனி அடுத்து வர வரன் அருளை பத்தி ஏதும் தப்பா பேசினா? அருளை என்னோட தங்கச்சி பொண்ணா மட்டும் நினைக்கல.. அவ இந்த வீட்டு பொண்ணு.. என்னோட பையனுக்காக பார்த்துக்கிட்டு அருளை அப்படியே விட்டுட முடியாது. அவளுக்கு நல்லப்படியா கல்யாணம் ஆனா தான், என்னால இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியும். இதை கதிரவனும் எழிலும் புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்.”
“அப்போ என்ன பண்ணலாம்னு சொல்றீங்க?”
“இப்போதைக்கு அந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லுங்க? அருளுக்கு நல்ல வரனா அமைஞ்சு அவ கல்யாணம் முடிவாகட்டும், அதுக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே இவங்க கல்யாணத்தையும் வச்சிப்போம்” என்றார்.
கலையரசியையும் சேர்த்து ஓரளவுக்கு அங்கிருந்த அனைவருக்கும் இந்த முடிவு சரியாக தான் பட்டது. முதலில் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் சொன்னதில் அனைவரும் கொஞ்சம் அதிர்ந்தனர். இப்போது இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள தயாரானர். பாட்டிக்கு மட்டும் இது கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் இனி அவர் ஆசை நடக்கபோவதில்லை என்று தெரிந்ததால் அமைதியாகிவிட்டார். இதில் கதிரவன் நினைப்பது என்ன என்பது புரியாமல் இருக்க, எழில் திரும்பவும் அவரை ஒருப்பார்வை பார்க்க,
“புகழ் சார் சொல்றது தான் சரி.. நமக்கு அருளோட எதிர்காலமும் முக்கியம்.. அதனால் அவளை கூட்டிட்டு வா வீட்டுக்கு போகலாம்.” என்றதும் எழில் முகத்தில் புன்னகை வந்தது. எனவே அருகில் போய் சுடரை அழைக்க,
“இனி நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்” என்று யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை சுடரொளி கூறினாள்.
“நான் இனியும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கனும்னு நினைக்கல.. என்னால இனி உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம்னு தான் வீட்டை விட்டு வந்தேன். ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. என்னை இவங்க ஏத்துக்கலன்னாலும் பரவாயில்ல, ஆனா இனி நான் அங்க வரமாட்டேன்.” என்று தீர்க்கமாக கூறினாள். ஏற்கனவே இந்த முடிவு தான் எடுத்திருந்தாள். இதில் எழில் வீட்டுக்குள் நுழைந்த போது அப்படி பேசவும் மனதிற்குள் இன்னும் உறுதியாக இந்த முடிவை எடுத்துவிட்டாள். புகழேந்தி அவர் முடிவை உறிதியாக சொன்ன பின்பும் கூட, அடுத்து என்ன என்று தெரியாத நிலையிலும், மீண்டும் வீட்டுக்கு செல்ல போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.
“இப்போ தான் பிரச்சனை சுமூகமா முடிஞ்சிடுச்சே! நீ நினைச்சதும் நடக்கப் போகுது அப்புறம் என்ன? என்ன இருந்தாலும் நீ முன்ன செஞ்சது தப்பு தான? அதுக்காக தானே கோபப்பட்டோம். எனக்கு அந்த உரிமைக் கூட இல்லையா? என்னை வேத்து மனுஷியா தான் நினைக்கிறியா?” குனிந்திருந்த தலையை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்துக் கேட்டாள். ஆனாலும் சுடர் இறங்கிவரவில்லை. புவி கூட அவளை கூப்பிட்டு பார்த்தான். ஆனால் அதற்கும் அவள் இளகவில்லை.
“அத்தை சுடர் அங்க வரமாட்டா.. அவ என்னோட தான் இருப்பா.. அதனால அவளை கட்டாயப்படுத்தாதீங்க” என்று மகி கூறினான். இப்போது அவன் அப்பா எடுத்த முடிவு சரி தான், ஆனால் சுடர் அங்கே போக பிடிக்கவில்லை எனும்போது அவளை அவன் வற்புறுத்தி அனுப்ப விரும்பவில்லை. ஏற்கனவே அவள் மீது கொண்ட கோபத்தினால் இத்தனை சொதப்பல்கள் செய்திருக்கிறான். அதனால் தான் அவள் லண்டனுக்கு போக நினைத்தாள். இப்போது அவள் அவன் மீது அதிக கோபத்தில் இருக்கிறாள். இதில் உன் வீட்டுக்கு போ என்று அனுப்பிவிட்டால், அவள் சமாதானம் ஆவாளா? ஏற்கனவே இது திருமணமே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறாள். அதனால் பெரியவர் முடிவுக்காக அவளின் விருப்பமில்லாத ஒரு செயலுக்கு அவளை கட்டாயப்படுத்த அவன் விரும்பவில்லை. அதற்காகவே அப்படி கூறினான்.
“ஆனா முறைப்படி கல்யாணம் நடக்கற வரை சுடரொளிக்கு இங்க இடமில்லை. அருள் கல்யாணம் நடக்கற வரை உங்க கல்யாணமும் நடக்க போறதில்ல. இதுதான் என் முடிவு. இந்த முடிவுல உனக்கு சம்மதம்னா நீ வீட்டுக்கு வரலாம். இல்லன்னா உனக்கும் இந்த வீட்டில் அனுமதி கிடையாது” என்று புகழேந்தி தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்ற தோரணையோடு இந்த விஷயத்தை கூறினார்.
திரும்பவும் பிரச்சனைக்கு ஒரு முடிவில்லாமல் போகிறதே! என்று அனைவரும் கவலைக் கொண்டனர். மகிழ்வேந்தனுக்கும் இந்த விட்டில் இடம் இல்லை என்ற வார்த்தைக்காவது கலையரசியிடம் ஏதாவது மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.
அதேபோல் அருள்மொழி வந்து பேசினாலாவது பெரியப்பா முடிவில் மாற்றம் வரலாம் என்று இலக்கியாவும் நினைத்தாள். இருந்தும்,
வெளியே இத்தனை களோபரங்கள் நடந்தும் கூட அருள்மொழி இன்னும் அறைக்குள்ளேயே தான் இருந்தாள். அவளையொட்டி தான் இங்கு பிரச்சனைகள் போய் கொண்டிருந்தது. ஆனாலும் அவள் வெளியில் வரவில்லை. இலக்கியாவிற்கே அருள்மொழியின் இந்த நடவடிக்கை புரியாத புதிராக இருந்தது. முன்பு அருள்மொழியை பற்றி வேறொன்று நினைக்க, இப்போது அவளின் நடவடிக்கை இலக்கியாவிற்கு வேறொன்றை உணர்த்தியது. அவள் மகி அண்ணனை காதலிக்கிறாளா? மகி அண்ணா சுடரை திருமணம் செய்துக் கொண்டதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா? அதனால் தான் அமைதியாக இருக்கிறாளா? என்ற கேள்வி இலக்கியா மனதில் எழுந்தது.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.