(Reading time: 12 - 24 minutes)

அமேலியா - 46 - சிவாஜிதாசன்

Ameliya

ஜான் என்ன கூறுகிறான் என்று புரிந்துகொள்ள வசந்திற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. இரவில் தூக்கம் சரிவர இல்லாததால் அவன் தலை லேசாக வலித்தது.

"டேய் வசந்த்! நான் நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன். நீ சொகுசா தூங்கிட்டு இருக்க"

"என்னடா?"

"அமேலியா என்ன செஞ்சிட்டு இருக்கா பாரு"

"அமேலியா அமேலியா எப்போ பாத்தாலும் அவ பேச்சு தானா" என்று சலித்தபடி எழுந்து உடலை முறுக்கியபடி ஜானை நோக்கினான். "சொல்லுடா அவளுக்கு என்ன இப்போ?"

"அங்க பாரு"

ஜான் சுட்டிக் காட்டிய திசையில் தலையைத் திருப்பினான் வசந்த். சிறிது தூரத்தில் கூட்டமாக ஷூட்டிங் ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்.

"என்ன நடக்குது அங்க?"

"எல்லாம் இங்க இருந்துட்டே கேளு. அங்க போய் பாரு"

என்ன நடக்கிறது என்ற ஒருவித எதிர்பார்ப்போடு அங்கு சென்று பார்த்த வசந்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. கூட்டத்தின் நடுவே ஓவியம் வரைந்து எல்லோரையும் மகிழ்வித்துக்கொண்டிருந்தாள் அமேலியா. அவளது ஓவியத் திறமையைக் கண்டு சுற்றியிருந்தவர்கள் பிரம்மித்துக்கொண்டிருந்தார்கள்.

"எப்படி இவங்களால இவ்வளவு வேகமா ஓவியம் வரைய முடியுது?"

"மிராக்கிள்!"

"அமேஸிங்!"

"இவங்க மேஜிக் பண்ணுறாங்கன்னு நினைக்குறேன்"

இப்படியான குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டிருந்தன. அமேலியா வரைந்த இயற்கை அழகை சில நொடிகள் மெய்மறந்து பார்த்தான் வசந்த்.

"உன்னை ரசிக்கவா கூட்டிட்டு வந்திருக்கேன்?" என்றான் ஜான் எரிச்சலோடு.

"என்னடா இருக்கு? ஓவியம் தான வரையுறா?"

"அப்படியா? ஈராக்ல இருந்து தான் எப்படி வந்தேன்னு எல்லோருக்கும் வரஞ்சி காட்டி நம்மளை ஜெயிலுக்கு அனுப்புவா"

அந்த நேரத்தில் டைரக்டரின் கார் அங்கே வந்து நிற்க கூட்டம் கலைந்தது. அமேலியா மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளது விழிகள் வசந்தைப் பார்த்துக்கொண்டிருந்தன. வசந்தின் முகத்திலோ எரிச்சல்.

"எல்லாம் தயாரா இருக்கா வசந்த்?"

"எது சார்?"

"எதுவா? இன்னைக்கு ஷூட்டிங் இருக்கு. அந்த வேலையெல்லாம் தயாரா?"

"எனக்கு தெரியல சார். எனக்கு உடம்பு சரியில்லை. அதனால தூங்கிட்டேன்"

"நீ டைரக்டரா இருந்தா இப்படி தான் பொறுப்பில்லாம இருப்பியா வசந்த்"

"சாரி சார்"

டைரக்டர் அமேலியாவையும் அவள் வரைந்த ஓவியத்தையும் பார்த்தார். "அமேசிங்! இவங்களா இந்த ஓவியத்தை வரைஞ்சது?"

"ஆமா சார்"

"சொல்ல வார்த்தையே இல்லை"

"அமேலியா லவ்வரா கிடைச்சது வசந்தோட அதிர்ஷ்டம்" என்றபடி அங்கு வந்து நின்றாள் மாடல் பெண்.

வசந்த் வெறுமையோடு புன்னகை புரிந்தான்.

ஷூட்டிங் ஆரம்பமானது. அமேலியா ஓர் ஓரத்தில் நின்று ஷூட்டிங் பார்க்கத் தொடங்கினாள். காமெரா, நடிகர்கள், அவர்களை சுற்றி கூட்டம், மேக்கப் மேன், எடுபிடி ஆட்கள் என அவள் இதுவரை கண்டிராத வித்தியாசமான காட்சி.

ஓர் ஆணும் மாடல் பெண்ணும் நெருக்கமாக பேச, அதை பார்ப்பதற்கு  அமேலியாவிற்கு பிடிக்கவில்லை. 'சுற்றி மக்கள் கூட்டமிருக்கு. எப்படி இவர்களால் ஆபாசமாக நடந்துகொள்ள முடிகிறது. அதை புகைப்படமாக வேறு எடுக்கிறார்கள்.'

மேற்கொண்டு அந்த இடத்தில நிற்க பிரியப்படாமல் கிளம்பலாம் என்று எண்ணுகையில் தன் பின்னால் வசந்த் நின்றுகொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்தாள். இதுவரை அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்ததை கவனிக்கவில்லையே என்று எண்ணியவள் வசந்தை திருட்டுத்தனமாக நோட்டமிட்டாள். வசந்தின் விழியில் கோபம் மட்டுமே எஞ்சியிருந்தது.

எதற்காக இவன் தன் மேல் கோபமாக இருக்கிறான் என்று அமேலியாவிற்கு முதலில் காரணம் தெரியவில்லை. பின்னர், தான் அனைவரின் முன்னால் ஓவியம் வரைந்தது பிடிக்கவில்லை போலும் என ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.

அவள் வேண்டுமென்றே ஓவியம் வரையவில்லை. ஷூட்டிங் ஆட்கள் கொண்டு வந்து வைத்த டிராயிங் போர்டை பார்த்ததும் அவளை அறியாமல் ஓவியம் வரைய, கூட்டம் கூடிவிட்டது.

வசந்தும் அமேலியாவும் ஒன்றாக நின்றுகொண்டிருந்ததை ஜான் சிறிது நேரம் நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர், டைரக்டரை நோக்கி சென்று அவர் அருகில் அமர்ந்தான். அடுத்த சீனுக்காக மாடல் பெண்ணிற்கு மேக்கப் வேலை நடந்துகொண்டிருந்தது. அவளின் அழகில் மயங்கிக்கொண்டிருந்தார் டைரக்டர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.