(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா

Kannathil muthamondru

ரிஷ்! ஷங்கரின் மனதிற்குள் நிற்காமல் சுழன்றுக்கொண்டிருந்தான் ஹரிஷ்.

ஷங்கர் அவனை சந்தித்த நாள் முதல் ஏனோ அவனை தனக்கு ஒரு போட்டியாளனாகவே நினைக்க பழகி இருந்தான். கீதா எனக்கானவள், என்னுடையவள் என இன்று வரை கூவிக்கொண்டேதான் இருக்கிறது அவன் மனம்.

அவள் தன்னுடைய அம்மா வீட்டுக்கு இரண்டு நாட்கள் தங்கி விட்டு வர என்று போனால் கூட ஏனோ பரிதவித்து போகும் இவன் மனம். ஒரே நாளில் இவனும் கிளம்பி விடுவான் அவர்கள் வீட்டுக்கு. இவனது இயல்புக்கு ஏற்ற படி வாழ கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டாள் கீதா என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்று முதன் முதலில் ஹரிஷை  சந்தித்த போது அவன் கீதாவை இவனிடமிருந்து பாதுகாப்பதை போல் நடந்துக்கொண்டதை ஷங்கரால் இன்னமும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.  அதற்கு மேல் அன்று ஹரிஷ் அவனை கீழே தள்ளியதும், கேலியாக சிரித்ததும்.

அவனது அம்மா லோசனாவை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றுமே மகனது கௌரவம், சந்தோஷம் இரண்டுமே ரொம்பவும் முக்கியம்.

அன்று கீதாவின் வீட்டு வாசலில் அந்த சண்டை நடந்த பிறகு இந்த திருமணம் நடக்காதோ என கீதாவின் அம்மாவை ஒரு பயம் பற்றிக்கொண்டது நிஜம்.

ஆனால் லோசனாவை பொறுத்தவரை எந்த விஷயமாக இருந்தாலும் அது மகனுக்கு பிடித்துவிட்டால் அதன் பிறகு அது அவனுக்கு இல்லை என்று சொல்வதெல்லாம் இல்லை. ஆனாலும் கீதா அருகில் இல்லாத நேரத்தில் மெல்ல ஆரம்பித்தார் அவளது அன்னையிடம்.

‘யாரது இப்போ காரிலே கீதா கூட வந்தது எல்லாம்? அவளோட காலேஜிலே படிக்கிற பசங்களா? அது என்ன அதிலே ஒருத்தன் அவ மேலே இவ்வளவு உரிமை எடுத்துக்கறான்? இந்த காலத்திலே எவனையும் நம்ப முடியாது. இதெல்லாம் நல்லா இல்லை. கல்யாணத்துக்கு அப்புறமாவது மாறிடுவாளா அவ? மெல்ல பட்டும் படாமலும் தூவினார் தனது மனதில் உள்ளதை.

‘அதெல்லாம் மாறிடுவா. சின்ன பொண்ணுதானே ஏதோ விளையாட்டு தனமா இருக்கா. நான் சொல்லி புரிய வைக்கிறேன்’ பரபரத்தார் பெண்ணின் அம்மா..

‘சொல்லு. முக்கியமா அந்த பையனை விட்டு தள்ளி இருக்க சொல்லு’ அவரிடம் ஓதிவிட்டு சென்றார் லோசனா.

அம்மா பேசியதை பார்த்துக்கொண்டேதான் இருந்தான் ஷங்கர். அதில் அவனது அடி மனதில் நிறையவே சந்தோஷம்.

இந்த வார்த்தைகளே கீதாவின் அம்மாவை உலுக்க போதுமானதாக இருந்தது. ‘இந்த காலத்திலே எவனையும் நம்ப முடியாது’ லோசனா சொன்ன வார்த்தைகள் அவரை அழுத்திக்கொண்டிருந்தது.

ஆம். ஒரு பெண் ஒரு ஆடவனுடன் பழகும் போது சமுதாயத்தின் பார்வை அப்படித்தானே இருக்கிறது. அதே நேரத்தில் இப்போது ஊருக்குள் நடக்கும் சம்பவங்கள் யாரையும் நம்பாதே என்றுதானே பறைசாற்றுகிறது. ஒரு சராசரி தாயாகத்தான் யோசிக்க ஆரம்பித்தது அவர் மனம்.

இப்போது நடந்த அந்த சம்பவத்துக்கு பிறகு ஹரிஷின் மீது பெரிதாக நம்பிக்கையும் வந்துவிடவில்லை அவருக்கு. இவனுடன் எல்லாம் எப்படி பழகுகிறாள் இவள் என்றுதான் தோன்றியது.

அவளது தந்தை இல்லாத நிலை, உடல் நலமில்லாத ஸ்வேதாவின் நிலை எல்லாம் பயமுறுத்த ஆரம்பித்திருந்தது அவரை. கீதாவை கேட்டால் இதையெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டாள். அவர்கள் எனது நண்பர்கள் என்பாள். எல்லாரும் நல்லவர்கள் என்பாள். இது போன்ற வாக்குவாததுக்கு எல்லாம் அவர் தயாரக இல்லை.

இதை பற்றி எல்லாம் எதுவுமே பேசாமல் கண்ணீரை மட்டுமே உபயோகித்து அவளை திருமணதிற்கு சம்மதிக்க வைத்திருந்தார் அன்னை. இரண்டு நாட்களில் நடந்திருந்தது நிச்சியதார்த்தம். கீதாவின் உறவினர்கள் என அதிகம் பேர் வந்திருக்கவில்லை.

அனுவும் அப்போது ஹைதிராபாதில் இருந்ததால் வரவில்லை. லோசனா அவரது உறவினர்கள், தோழிகள் மட்டுமே நிறைந்திருந்தனர் அங்கே,

லோசனா கீதாவுக்கென வாங்கி வந்திருந்த பட்டு புடவையிலேயே அவரது அந்தஸ்து நன்றாக தெரிந்தது. கீதாவை லோசனாவும் அவரது உறவினர்களும் தாங்கிய விதத்தில் அவள் சற்றே கரைந்து போனாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனம் நிறைய பூரிப்புடன் அவள் விரலில் ‘வைர மோதிரத்தை’ அணிவித்தான் ஷங்கர். ‘பிடிச்சிருக்கா?’ என்றான் கிசுகிசுப்பான குரலில். அழகான புன்னகையுடன் தலை அசைத்தாள் கீதா.

‘நீ சந்தோஷமா இருக்கணும் இனிமே அதுதான் முக்கியம். இந்த வைர மோதிரம் என்ன? கல்யாணத்துக்கு உனக்கு வைர நெக்லஸ்சே போட்டுடலாம் கவலை படாதே’ என்ற அவனது கிசுகிசுப்பில் நிறையவே மகிழ்ந்து போனாள் கீதா.

அதன் பின்னர் இரண்டு மாதங்களில் மடமடவென இவர்கள் திருமணம் நடந்து முடிந்திருந்தது. திருமணதிற்கு ஹரிஷுக்கு அழைப்பில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.