(Reading time: 17 - 34 minutes)

ஷங்கரின் பதில் அவனை உலுக்கியது ‘‘ரகுநந்தன் மனைவி’ என்றான் அவன் நிதானமாக.

‘நீங்க கூப்பிடுங்க அவங்களை இங்கே. நான் கேட்கிறேன் அவங்ககிட்டே. கண்டிப்பா அவங்களாலே என் மேலே புகார் கொடுத்திருக்கவே முடியாது’ ஹரிஷின் குரலில் அப்படி ஒரு நம்பிக்கை. அவனுக்கு என்ன தெரியும் மாப்பிள்ளை சொன்னதற்கு மறு பேச்சு இல்லாமல் அவன் நீட்டிய இடத்தில் அவர் கையொப்பம் இட்டார் என.

‘அவங்க எல்லாம் இங்கே வரமாட்டாங்க’ என்றான் ஷங்கர் லத்தியோடு விளையாடிக்கொண்டே.

‘அப்போ கீதாவை வரசொல்லுங்க’ என்றான் ஹரிஷ் கூர்மையான பார்வையுடன்

‘யாரை?’ சூடானது ஷங்கரின் குரல். ‘என் பொண்டாட்டியையா?’

‘நான் என் ஃப்ரெண்டை வர சொன்னேன்’ என்றான் ஹரிஷ் ஷங்கர் சொன்ன அதே தொனியில் ‘அவளாலே எனக்கு எதிரா எதுவுமே சொல்ல முடியாது. அவளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது. இப்போ அவ இங்கே வந்தா இந்த புகாரை கண்டிப்பா திரும்ப வாங்கிப்பா’

‘எப்படி எப்படி? உன் ஃப்ரெண்டா? நான் அவளை வர சொல்றேன் அவ என்ன சொல்றான்னு பார்க்கறியா? என்றான் குரலில் சேர்ந்துக்கொண்ட கேலியுடன்.

‘கண்டிப்பா கூப்பிடுங்க பார்க்கலாம்’ என்றான் படு தைரியமாக.

தாலிக்கயிறு என்ற ஒன்று கழுத்தில் ஏறிய பிறகு அது செய்யும் மாயங்களை பற்றியும் அதன் பின் பெண்களுக்குள் நிகழும் மாற்றங்களை பற்றியும் அவனெங்கே அறிந்தான் பாவம்..

அவன் அவளை இன்னமும் தனது தோழியாகவே நினைத்திருந்தான். திருமணதிற்கு பிறகு நட்பெல்லாம் ஒரு பொருட்டே அல்ல எனும் நிதர்சனத்தை அவன் உணரவே இல்லை.

சில மணி நேரங்கள் கடக்க வந்து நின்றாள் அவன் தோழி. ஆனால் அவள் அவனது தோழியாக வந்து நிற்கவில்லை ஷங்கரின் மனைவியாக வந்து நிற்கிறாள் என அறியவே இல்லை ஹரிஷ். அவள் இங்கே வருவதற்குள்ளாகவே அவளை மொத்தமாக ஷங்கர் தயார் படுத்தி விட்டான் என்பது ஹரிஷுக்கு தெரியவேயில்லை.

‘கீது’ என்றான் ஷங்கர் ‘இவன் என்னமோ சொல்றான் கேளு.’ அவன் குரலில் கேலி தாண்டவமாடியது.

‘என்னது?’ அவளும் புரியாதவளாகவே கேட்டாள்.

‘இல்லை. உங்க அப்பா மேலே பால் அடிச்சது இவனா இருக்கலாம்னு எனக்கும் உங்க அம்மாவுக்கும் ஒரு சந்தேகம். நீ என்ன சொல்றே?’

‘ம்?’ எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டாள் கீதா.

‘நீ... என்...ன சொல்....றே....னு கே...ட்...டே..ன்’ அவன் ஒவ்வொரு எழுத்துக்கும் கொடுத்த அழுத்தத்தில் ஆடிப்போனாள் கீதா.

‘இல்ல அது வந்து... தெரியலை... இருக்கலாம்..’ அவள் மென்று முழுங்க அந்த ‘இருக்கலாம்’ மட்டுமே ஹரிஷை பாதி நொறுக்கி இருந்தது. விழிகளில் அதிர்ச்சி தாண்டவமாட நிமிர்ந்தான் ஹரிஷ்.

‘சரியா சொல்லு. இவன்தான் அடிச்சான்னு’ மெல்ல உறுமினான் ஷங்கர்.

‘சரி சரி இவன்தான் அடிச்சான்’ படபடத்தாள் அவள்.

‘எங்கே அவன் முகத்துக்கு நேரே விரல் நீட்டி சொல்லு இவன்தான்னு’ ஷங்கர் அவளை பார்வையால் ஊடுருவிக்கொண்டே சொல்ல ஹரிஷின் முகம் நோக்கி நீண்டன அவள் விரல்கள். மொத்தமாய் நொறுங்கினான் ஹரிஷ்.

ஹரிஷை ஏளன சிரிப்புடன் பார்த்துவிட்டு அவளை அனுப்பியவன் முகத்தில் இப்போது ஒரு மிருகத்தின் வெறி வந்திருந்தது. அடித்து துவைத்தான் ஹரிஷை.

ஆனால் அவன் அடித்த எந்த அடியும் ஹரிஷுக்கு பெரிதாக வலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதயத்தை கடப்பாறையால் ஒரு பெண் அடித்து நொறுக்கி விட்ட பிறகு அது நசுங்கி உடைந்து சிதறிய பிறகு இந்த வலியெல்லாம் ஒரு வலியா என்ன?

அவனது அப்பாவை பொறுத்தவரை ஹரிஷ் மும்பை சென்றிருப்பதாகவே நினைத்திருந்தார். அவன் எங்கு செல்கிறான் என எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கும் பழக்கம் எல்லாம் எப்போதும் இருந்ததில்லை அவருக்கு.

அவனது அம்மாவும் உயிருடன் இருந்த காலமது. அவன் கைதாகி ஒரு நாள் முழுவதுமாக கடந்து மறுநாள் மதியத்துக்கு மேல் அவன் மேட்சுக்கு வந்து சேரவில்லை என மும்பையிலிருந்து அழைப்பு வந்த பிறகுதான் மெல்ல மெல்ல விஷயத்தின் விபரீதம் புரிய அவனை தேட ஆரம்பித்தார் தந்தை.

இங்கே காவல் நிலையம் ஒரு போதி மரம் போல் தோன்றியது ஹரிஷுக்கு. பல கைதிகளுக்கு நடுவில் கைதியாய் கிடந்தான் அவன். அவனது அடி மனதில் இருந்த கர்வங்கள் மெல்ல மெல்ல கரைந்தன. அங்கே காவல் நிலையத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் அவனுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைத்துக்கொண்டிருந்தன.

வாழ்க்கையில் அவன் கடந்து வந்த பாதையை மனதிற்குள் ஓட்டிக்கொண்டிருந்தான் ஹரிஷ்.

‘அய்யோ... பசிக்குதா. இதோ பூரி இருக்கு சாப்பிடறியா??? இன்னைக்கு நிறைய செய்ய டைம் இல்லை. நாலுதான் இருக்கு போதுமா உனக்கு’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.