(Reading time: 17 - 34 minutes)

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து நடந்தது இவர்கள் திருமண வரவேற்பு. அதற்குள் அனு ஹைதிராபாத் திரும்பி இருந்தாள் வரவேற்புக்கு மட்டும் ஹரிஷையும் அவனது நண்பர்களையும் அழைத்திருந்தாள் கீதா.

மேடையில் மணமக்கள் நின்றிருக்க நண்பர்கள் மேடை ஏறினார்கள்.

‘என்ன கீதா கடைசியில் நம்ம போலிஸ்காரையே கல்யாணம் பண்ணிட்டே போலே’ எந்த உள்ளர்த்தமும் இல்லாமல் விளையட்டுத்தனமாய்தான் கேட்டான் அவளது நண்பன் ஒருவன். ‘சரி நீயாவது நல்லா சமைச்சு போட்டு  சார் உடம்பை தேத்து’ அவன் சொல்லி முடிக்க ஹரிஷ் உட்பட அனைவரும் சிரித்திருந்தனர். ஏன் கீதாவுமே சிரித்துவிட்டாள். அந்த நொடியில் தீப்பற்றிக்கொண்டது ஷங்கரினுள்ளே.

உயிர் தோழி எனும் வாஞ்சையுடன் மனதார வாழ்த்தினான் ஹரிஷ். அவன் முகத்தில்  ஒளிர்ந்த அந்த பாசமும் இவள் முகத்தில் மின்னிய புன்னகையும் ஷங்கரை என்னவோ செய்தன.

‘சாப்பிட்டு போ ஹரிஷ்’ கீதா அவன் கைப்பிடித்து சொல்ல

‘அதெல்லாம் நாங்க கரெக்டா பண்ணிடுவோம். நீ உன் ஆளை பாரு’ சிரித்துவிட்டு இவனையும் வாழ்த்திவிட்டு கீழே இறங்கினான் ஹரிஷ்.

அவர்கள் இருவரின் நட்பு இவனை ரொம்பவுமே உலுக்கியது. இன்னும் இவர்களின் படிப்பு முடியவில்லையே? இன்னும் தினம் தினம் அவளை அவன் சந்திப்பானே! ஏனோ நினைக்கும் போதே கசந்து வழிந்தது அவனுக்குள்ளே.

சில நாட்கள் இப்படியே கடக்க அவளை வேறு கல்லூரிக்கு மாற்றும் அவனது முயற்சிகள் ஏதும் பலிக்கவில்லை. ஹரிஷை எங்காவது எப்படியாவது தட்டி விட வேண்டும் என்ற இவனது எண்ணம் மட்டும் வளர்ந்துக்கொண்டே இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்தை அவன் எதிர் நோக்கி இருந்த போதுதான் அவள் வீட்டில் வந்தது அந்த பேச்சு. அவளது தந்தையின் மரணத்தை பற்றிய அந்த பேச்சு.

‘அப்பாவோட கடைசியா ஹாஸ்பிடல் போனது ஹரிஷா? அவர்கள் பேசிகொண்டிருந்த போது இடையில் கொக்கி போட்டான் ஷங்கர். ஒரு போலிஸ்காரனின் மூளை ஏதேதோ கணக்குகள் போட்டன.

‘ஆமாம். அவருக்கு அடி பட்ட போது அவன்தான் கூட இருந்திருக்கான். தூக்கிட்டு ஓடினானாம் அவரை’ அவனது புத்தி போகும் திசை அறியாமல் சொன்னாள் கீதா

‘அடிப்பட்ட போது அவன் கூட இருந்தானா? இல்ல அடிபட்டதே அவனாலதானா? இன்னொரு தூண்டில் விழுந்தது அங்கே. இப்போது அப்பட்டமான மாற்றம் கீதாவின் அம்மாவின் முகத்தில்.

‘அய்யோ.. அதெல்லாம் இல்லை. வேறே யாரோ அடிச்ச பால்தான் அப்பா  தலையிலே பட்டது. நீங்க வேறே...’ பதறினாள் கீதா.

‘அப்படின்னு நீங்க எல்லாரும் நினைக்கறீங்க. ஒரு போலீஸ்காரனா எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு’ அவன் சொல்ல

‘இருங்க இருங்க. நான் ஸ்வேதாவை கேட்கறேன் அவதான் அங்கே இருந்தாளே’ கீதா அவசரமாக எழ

‘ஹேய்... இரு இரு... இப்போதான் அந்த ஷாக்லேர்ந்து வெளியே வந்திருக்கா. இப்போ மறுபடியும் அவகிட்டே இதெல்லாம் பேசி அவளை மறுபடியும் படுக்க வைக்க போறியா?’ பட்டென உடைத்தான் அந்த பேச்சை. அப்படியே நின்றுவிட்டாள் கீதா.

‘நீ விடு நான் பார்த்துக்கறேன்’ முடித்துவிட்டான் அங்கேயே. அவன் மனதிற்குள் போட்டு வைத்திருந்த கணக்குகள் அவளுக்கு சத்தியமாக புரியவில்லை.

அடுத்து ஒரு மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் தேசிய அளவில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டிக்காக மும்பை கிளம்பிக்கொண்டிருந்தான் ஹரிஷ்  அவன் விமான நிலையத்தை நோக்கி டாக்சியில் சென்றுக்கொண்டிருந்த நேரம் அவனது டாக்சியை வழி மறித்தது அந்த போலீஸ் வாகனம்.

நிச்சியமாக இப்படி ஒரு எண்ணத்துடன் ஷங்கர் தன் முன்னால் வந்து நிற்கிறான் என நினைத்துக்கூட பார்க்கவில்லை ஹரிஷ். தனது தோழியின் கணவன் என்ற எண்ணத்துடன் நட்புடனே எதிர்க்கொண்டான் அவனை.

‘மிஸ்டர் ரகுநந்தன் மரணத்தை பத்தி உங்ககிட்டே கொஞ்சம் விசாரிக்கணும்’ என்றான் கடுமையான குரலில்.

‘என்ன விசாரிக்கணும்’ ஹரிஷின் முகம் நிறைய கேள்விக்குறிகள்

‘நீங்க ஸ்டேஷன் வாங்க சொல்றேன்’ அவன் குரலில் இரும்பின் தன்மை

‘இல்ல சார் நான் இப்போ மேட்சுக்காக மும்பை போறேன். நெக்ஸ்ட் வீக் வந்து உங்களை பார்க்கிறேனே’ ஹரிஷ் நிதானமாகவே சொல்ல

‘இப்போ ஸ்டேஷன் வாடாங்கிறேன். என்னமோ கதை பேசுற’ என்றபடியே அவனை பிடித்து வண்டிக்குள் தள்ளினான் ஷங்கர். அதன் பிறகு ஒரு வெறி பிடித்த மனிதனை போல்தான் நடந்துக்கொண்டான் ஷங்கர்.

ஹரிஷ் தனது தந்தையை அழைக்க கூட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை அவன். அவனது வாதங்கள் எதுவும் எடுபடவில்லை. அவனது கைப்பேசி ஷங்கரின் கைக்கு போயிருந்தது.

‘சரி சொல்லுங்க. என் மேலே கம்பளைன்ட் கொடுத்தது யார்?’ கேட்டான் ஹரிஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.