(Reading time: 12 - 24 minutes)

"சார்"

டைரக்டர் ஜானை நோக்கி எரிச்சலடைந்தார்.

"ஒரு சந்தேகம்"

"என்ன?"

"இந்த அசிஸ்டன்ட் டைரக்டருக்கான வேலை என்ன?"

"உனக்கு எதுக்கு அது?"

"விஷயம் இருக்கு சொல்லுங்க"

"டைரக்டர் வேலையை கத்துக்க வேண்டியது தான் அசிஸ்டன்ட் டைரக்டர் வேலை"

"அப்போ அசிஸ்டன்ட் டைரக்டர் உங்க பக்கத்திலயே இருந்து ஆக்ஷன் கட் எல்லாம் கத்துக்கணும்ல"

"ஏன் தேவையில்லாததை எல்லாம் பேசி என்னை தொந்தரவு செய்யுற?"

"அங்க வசந்த் அவனுடைய லவ்வர்கிட்ட தனியா ஷூட்டிங் பத்தி டிஸ்கஸ் செஞ்சிட்டு இருக்கான். அங்க பாருங்க"

டைரக்டர் வசந்தை பார்த்து டென்ஷன் ஆனார். "வசந்த்! அங்க என்ன செஞ்சிட்டு இருக்க?"

"எதுவும் இல்லை சார்" என்றபடி அங்கு வந்து நின்றான் வசந்த்.

"இதெல்லாம் என்ன பழக்கம் வசந்த்? சுத்தமா பொறுப்பில்லாம இருக்கியே"

"உடம்பு சரியில்லை சார்"

"அதுக்கு? அந்த பொண்ணு பக்கத்துல போய் உரசிகிட்டு நின்னா உடம்பு நல்லாயிருக்குமா?" என்றான் ஜான்.

ஜானை முறைத்தான் வசந்த்.

"ஆகவேண்டிய காரியத்தை பாரு வசந்த்"

அதன் பின் டைரக்டரின் அருகிலேயே நின்று வேலைகளை பார்த்தான் வசந்த். மதிய உணவு இடைவேளை வந்தது. எல்லோரும் கலைந்து சென்றார்கள்.

"ஜான் நில்லு" என்றான் வசந்த்.

"என்னடா?"

"எதுக்குடா அந்த ஆளுகிட்ட என்னை மாட்டிவிட்ட?"

"என்னை ஜெஸிகா கூட சேத்து வைக்குறேன்னு சொல்லிட்டு நீ ஜல்சா செஞ்சிட்டு இருக்கல்ல. அதான். நான் நல்லாயில்லன்னா எவனுமே நல்லா இருக்க கூடாது"

வசந்தும் அமேலியாவும் எதிர் எதிர் திசையில் அமர்ந்து உணவு உண்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் தவறவில்லை. உண்டு முடித்து கைகழுவிக்கொண்டிருந்த வேளையில், "வசந்த்! உன்னை டைரக்டர் கூப்பிடுறார்" என்ற செய்தி அவனை வந்து சேர்ந்தது.

'வசவு இன்னும் முடியவில்லை' என்று எண்ணியபடி டைரக்டரை நோக்கி சென்றான் வசந்த். டைரக்டர் உண்டு முடித்துவிட்டு ரிலாக்ஸாக அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் மாடல் பெண்.

"வசந்த் உட்காரு"

வசந்த் அசௌகரியத்தோடு அமர்ந்தான்.

"காலையில இருந்தே ரொம்ப டென்ஷனா இருக்கேன்னு நினைக்குறேன்"

"இருக்கலாம் சார். கொஞ்சம் படபடப்பா இருக்கு"

"என்ன காரணம்?"

"தெரியல சார்"

"காதலி கூட பிரச்சனையா?"

வசந்த் அதிர்ச்சியடைந்தான். "அப்படியெல்லாம் இல்லை சார்"

"எத்தனை வருசமா லவ் பண்ணுறீங்க?"

கேள்விக் கணைகள் வசந்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கொடுத்தது.

"கொஞ்ச காலமா சார்"

"இந்தா வசந்த், இந்த சாக்லேட் சாப்பிடு" என்று சாக்லேட்டினை அவன் கையில் திணித்தார் டைரக்டர்.

கையில் சாக்லேட்டினை வைத்துக்கொண்டு கேள்விப் பார்வையை டைரக்டர் மீது வீசினான் வசந்த்.

"சாப்பிடு"

"சார்"

"சாப்பிடுன்னு சொன்னேன்"

சின்னதாய் கடித்து சாக்லேட்டை சுவைத்தான் வசந்த்.

"எப்படியிருக்கு?"

"ரொம்ப நல்லாயிருக்கு சார்"

"இந்த சாக்லேட்டோட வரலாறு தெரியுமா வசந்த்?"

"இந்த சாக்லேட் பெரு சாக்கோ மில்க். அத தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது சார்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.