(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 08 - பூஜா பாண்டியன்

En arugil nee irunthum

ர்போர்டில் பால்கியையும், சுனைனாவையும் அழைத்துச் செல்ல, வெளியே அபியும், உத்ராவும் காத்திருந்தனர்.

“அம்மாவையும், அப்பாவையும் அடுத்த மாதம் இங்கு வரச் சொல்லி இருக்கலாம்.” என்று ஆதங்கத்துடன் கூறினாள் உத்ரா.

“ஏண்டா,  இந்த மாதத்திற்கு என்ன குறைச்சல்?” என அபி வினவ... 

“இப்போ இரண்டு நாளாகத் தான் நாமே, நல்லா பேசி, பழக ஆரம்பித்து இருக்கிறோம், அதனால்...” என்று இழுத்தாள் உத்ரா.

“நாம இந்த மூணு மாசமாவே நல்லாத் தானேடா பேசிக் கொள்கிறோம்...”

“ஹையோ, அதுவும், இதுவும் ஒன்றா?”

அதைக் கேட்டதும், சிறு புன்முறுவலுடன், உத்ராவை இன்னும் நெருங்கி, “இந்த ரெண்டு நாள் ரொம்ப ஸ்பெஷல் தான்டா” எனக் கூறி அவளை சிவக்க வைத்தான் அபி. “இதுவும் நல்லா தாண்டா இருக்கும். பெரிய கூட்டுக் குடும்பத்தில், இருக்கும் கணவன் மனைவிக்குள் இருக்கும் ரொமான்ஸ், சில சமயம் தனிக் குடித்தனத்தில் கிடைப்பதில்லை. எப்பொழுது வேணா பார்த்துக் பார்த்துக் கொள்ளலாம், அணைத்துக் கொள்ளலாம் என்று இருந்தால் அதில் ஒரு த்ரில் இருக்காது தானே.” என அபி கூறிக் கொண்டிருந்த பொழுது ஏற்போர்டின் உள்ளிருந்து ட்ராலியை தள்ளியபடி இருவரும் வந்து கொண்டிருந்தனர்.

இப்படி அபியிடம் சொன்னாலும், அப்பா, அம்மாவைப் பார்த்ததும், துள்ளிச் சென்று இருவரையும் பாசத்தில் அணைத்துக் கொண்டாள் உத்ரா.

காரில் வரும் பொழுது, இருவரிடமும் அங்குள்ளவற்றைப் பற்றி விளக்கி சொல்லியபடி வந்தாள். வீட்டைப் பார்த்ததும் இருவரும் அதன் அழகில் வியந்து தான் போயினர். 

சுனைனா தான் “வேலைக்கு ஆள் இருக்கா உத்ரா?” என கவலையுடன் கேட்டார். இவ்வளவு பெரிய வீட்டை எப்படி, உத்ரா தனி ஆளாக  பராமரிப்பாள் என்று.

“எல்லாவற்றிற்கும் மெஷின் இருக்குமா. அதனால் ஒரு கஷ்டமும் இல்லை. நம்ம ஊரைப் போல் தூசி ஆவதில்லை. துணியை மெஷினே துவைத்து, காயப் போடும் வேலை கூட நமக்கு இல்லை, அதுவே உலர்த்தி கொடுத்து விடும். சாமான் கழுவும் வேலையும் இல்லை. டிஷ் வாஷேரே கழுவி விடும்.” என சுனைனாவிற்கு ஆறுதல் கூறினாள்.

உத்ரா அவர்கள் வீட்டில் ஒரு வேலை கூட செய்தது கிடையாது. வீட்டில் கடைக் குட்டி என்று, செல்லம் அதிகம் அவள் அப்பாவிடம். இங்கு அவள் வீடு என்று வந்ததும், எல்லாவற்றையும் பதவிசாகப் பார்த்துக் கொள்கிறாளே என்று, சுனைனாவிற்கு பெருமையாகத் தான் இருந்தது.

அடுத்து வந்த நாட்களில், அபிமன்யூ ஆபிசுக்கு,  உத்தமனோடு காரில் சென்றுவிட, உத்ராவே அவர்களது காரில் அப்பா, அம்மாவை அழைத்துச் சென்று பக்கத்தில் உள்ள இடங்களை காட்டி வந்தாள்.

அன்று மாலை, வெளியே லானில் தேநீர் அருந்தியபடி, பக்கத்தில் இருந்த ஓடை நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்நேரம் அபிமன்யுவும் ஆபிசில் இருந்து வந்ததால், அவர்களுடனே வந்து அமர்ந்தான்.

“இந்த வார கடைசியில் எங்காவது ஊருக்குப் போய் வரலாம் மாமா. நயாகரா பாஃல்ஸ் சென்று வரலாமா?” என்றான் பால்கியிடம்.

“இந்த அருவி பார்ப்பது எல்லாம், நம்ம ஊரிலேயே பார்த்துக் கொள்ளலாம். நம்ம ஊரிலாவது அதில் சென்று குளிக்கலாம், இங்கு அதுவும் முடியாதே! அதனால் லாஸ் வேகாஸ் போய் வரலாமா மாப்பிள்ளை” என்றார் பால்கி.

“நீங்க இன்னும் யூத் என்று நிரூபிக்கறிங்க மாமா” என்று சிரித்துக் கொண்டே கூறினான்  அபி.

“நாம எல்லாம் எப்பவும் யூத் தான் மாப்பிள்ளை” என்றார் பால்கி.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது அபியின் போன் இசைக்க, எடுத்துப் பார்த்த அபி, திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும், போனுடன் அங்கிருந்து எழுந்து சென்றான்.

சூடான பஜ்ஜிகள் அடங்கிய தட்டுடன் அங்கு வந்த உத்ரா, அவன் எழுந்து போவதைப் பார்த்து கவலையுற்றாள்.

“உங்கம்மா பஜ்ஜி பற்றி மாப்பிள்ளைக்கும் தெரிஞ்சுடுச்சு போல. அது தான் இப்படி தலை தெறிக்க ஓடுறார்.” எனக் கூறி சிரித்தார் பால்கி, உத்ராவின் கவலை புரியாமல்.

“அவருக்கு ஆபிஸில் ரொம்ப வேலைப்பா, அதான்.” எனக் கூறி சமாளித்தாள் உத்ரா.

“இந்த வயதில் தான் நல்லா வேலை செய்யனும்மா. அதுக்கு நீ ஏன் இப்படி கவலைப் படற? அப்பா தப்பா நினைக்க மாட்டேன்.” என உத்ராவிற்கு ஆறுதல் கூறினார்.

சிறிது நேரம் கழித்து வந்த அபி, அந்த ஆறிப் போன பஜ்ஜிகளை, சுனைனாவை பாராட்டியபடி சாபிட்டான். அப்பொழுது ஒன்றும் கேட்கவில்லை உத்ரா அவனிடம்.

பின்பு அவர்கள் அறைக்கு அவன் உடை மற்ற சென்றதும், பின்னால் சென்ற உத்ரா, “யார் போனில்?” எனக் கேட்டாள்.

“எனக்கு வர்ற ஒவ்வொரு கால் பற்றியும் உன்னிடம் சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கிறன் உத்ரா.” குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.

“உங்களை சங்கடப் படுத்தும் எதுவா இருந்தாலும் எனக்கு தெரியனும்னு தான் நினைக்கிறன். அது தப்பா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.