(Reading time: 13 - 25 minutes)

“தாங்க்ஸ் சார், ஒன்றும் வேண்டாம். நீங்கள் செக்கை கொடுத்தால், நான் கிளம்புகிறேன்.” என்றாள்.

“ஒரு சூப்பாவது குடிக்கலாம்மா.” என்றபடி பேரரை அழைத்தார். போனில் பேசிக் கொண்டிருந்த பேரரெ வருவது தெரிந்தது.

அதைப் பார்த்ததும்  பூமிஜாவிற்கு கை கால் எல்லாம் உதறலெடுக்க ஆரம்பித்து. அவரிடம் என்ன சொல்வது என்று யோசிக்கையில், அந்த தனி ஒருவன் நியாபகத்திற்கு வந்தான்.

“இல்லை சார், நான் என்னோட வருங்கால கணவருடன் இங்கு வந்து இருக்கேன். அதோ அங்கு அவர் அமர்ந்து இருக்கார். நீங்க செக்கை கொடுத்தால் நான் கிளம்புவேன்.” என்றாள் பூமிஜா.

அந்த பணக்காரர் முகத்தில் ஈயாடவில்லை. கடுகடுப்புடன், எழுந்து செக்கை, அவளிடம் கொடுத்து விட்டு, கொஞ்சம் சந்தேகத்துடன், “உன்னுடைய பிஃயான்சிக்கு வாழ்த்து தெரிவித்து போகிறேன்” என்றார்.

“பரவாயில்லை சார், நானே அவரிடம் சொல்லிக் கொள்கிறேன் என்றாள் பூமி.

“அதனால் என்னம்மா இங்கு தானே இருக்கிறார்.” என்றபடி அந்த டேபிளை நோக்கி நடக்க துவங்கினார்.

அப்படியே ஓடி விடலாம் என்றால், கதவருகே அந்த பேரர் நின்று கொண்டிருந்தான். வேறு எதுவும் செய்தால், அந்த பணக்காரர் இந்த செக்கை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது. ஆதரவில்லா குழந்தைகளுக்கான பணம் அது, அதை இழக்கவும் மனம் இல்லை பூமிக்கு. சரி வந்தது வரட்டும் என்று, அவருக்கு முன் பூமியே அந்த டேபிளை அடைந்தாள். அவனுக்கு எதிர் சேரில் அமர்ந்தாள்.

“சார் நம்ம கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்ல வந்து இருக்காங்க.” என்றபடி கண்களால் கெஞ்சினாள் அவனிடம்.

அவன் முகத்தில் ஒரு ஏளனமே தோன்றியது. பின்பு ஒன்றையும் காண்பிக்காமல் அவரை நோக்கினான். சேரில் இருந்து எழுத்து கொள்ளாமலே, அவரிடம் கை குலுக்கினான். அவரும் வாழ்த்து தெரிவித்து, அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் வெளியே சென்றதை உறுதி செய்த பின்பே, எதிரே இருந்தவனை திரும்பிப் பார்த்தாள் பூமி.

“ரொம்ப நன்றி சார்” என்றாள் அவனிடம்.

அவளிடம் பேசக் கூட விரும்பாதவனாக முகத்தை திருப்பிக் கொண்டான்.

“என்ன சார் நன்றி சொன்னா கூட முகத்தை திருப்பிக்கறீங்க?” என்ற பூமியிடம்...

அவனும் கோபமாகவே பேசினான்.  “உன்னை மாதிரி பெண்களிடம் எல்லாம் நான் பேசுவதே கிடையாது. முதலில் உன்னைப் பார்த்ததும் நானும் கொஞ்சம் ஏமார்ந்து தான் போனேன். இந்த இடத்திற்க்கு சம்பந்தம் இல்லாமல் இப்படி எளிமையாக ஒரு பெண்ணா என்று. காட்டன் சேலை, பின்னிய ஜடை, சிவப்புக் கலரில் பொட்டு, என்று அடக்கமாக  இருக்கிறாயே என்று பார்த்தால்,  பின்பல்லவா தெரிகிறது அவரிடம் கணக்கு முடித்த பின் எனக்கு வலை வீசுகின்றாய் என்று.” என்றானே பார்க்கலாம்.

அதை கேட்டதும் பூமிக்கு வந்ததே கோபம். “ஆமா இவர் பெரிய மகராஜா, இவருக்கு வலை வேற வீசுவாங்க” என்றபடி  அங்கு  கிளாசில் இருந்த குளிர்ந்த  நீரை எடுத்து அவன் முகத்தின் மீதே வீசினாள்.

அதை சற்றும் எதிர்பார்க்காத அவன், அவளது கோபத்தைப் பார்த்து அசந்து தான் போனான். அதற்குள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள் பூமிஜா.

வெளியே வந்து அவளது ஸ்கூட்டியை கிளப்பி ஆசிரமம் வந்து சேரும் வரை அவனை திட்டிக் கொண்டே வந்தாள் கோபத்தில்.

அந்தக் கோபம், ஆசிரம தலைவி அணிமலரை பார்க்கும் வரை நீடித்தது. அவளது முகத்தைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டார் அணிமலர்.

“என்னடா கோபம். அவர் பணம் தர முடியாது என்று சொல்லி விட்டாரா?” என்றார் அவரது அன்பான குரலில்.

அதன் பின்பே நிகழ்வுலகதிற்கு வந்த பூமி, “அதெல்லாம் ஒன்றும் இல்லைமா. இனிமேல் இந்த மாதிரி ஆட்களிடம் எல்லாம் பணம் வாங்க வேண்டாம் அம்மா” என்றபடி அந்த காசோலையை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.

“அவர் போனில் பேசிய பொழுது நல்லபடியாகத் தான் பேசினார் பூமி, ஏதும் பிரச்சனை செய்தாரா?” என்று கவலையுடன் கேட்டார் அணிமலர்.

நடந்ததை சொன்னால் மிகவும் வருத்தப் படுவார் என்று அதற்கு மேல் ஒன்றும் விளக்கி சொல்லவில்லை பூமியும். “இனிமேல் யாரும் பணம் தருவதாகக் கூறினால், நமது வங்கி கணக்கிற்கு அனுப்பச் சொல்லி விடுங்கள் அம்மா.” என்று கூறி அவரிடம் விடை பெற்று கிளம்பினாள்.

அந்த வாரத்தில் ஒரு நாள் அப்பா பால்கியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த பொழுது “ஆதித்யா குருப் ஆஃப் கம்பெனியில், உன் ஐ.டி படிப்புக்கு ஏற்ற வேலைக்கு, வாக் இன் இன்டர்வியு இருக்கு,  நீயும் போய்ப்பாரேன்மா” என்றார் பால்கி பேப்பரை பார்த்துக் கொண்டே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.