(Reading time: 13 - 25 minutes)

“அந்த சங்கடம் உனக்கும் வேண்டாம் என்று தான் சொல்லவில்லை. அதை நீயும் புரிஞ்சுக்கணும் உத்ரா. சரி அதை விடு, நாம் லாஸ் வேகாஸ் செல்ல விமான டிக்கெட்டை, நெட்டில் வாங்கி விடு.” என்று பேச்சை மாற்றினான் அபி.

“விமானத்தில் சென்றால், அங்கு போய், சுற்றிப் பார்பதற்கு, எதில் செல்வது?” என்று அடுத்த கேள்வியை எழுப்பினாள் உத்ரா.

“அங்கு நாமே ஒட்டி செல்ல வாடகைக்கு  கார் கிடைக்கும். ஏர்போர்ட்டிலேயே வந்து கொடுத்து விடுவான். அந்த ஏற்ப்பாட்டை நான் கவனித்துக் கொள்கிறேன். இப்போ கொஞ்சம் வெளியே போய் வருகிறேன் உத்ரா” என்று அவளது அடுத்த கேள்வியை தவிர்த்து, கிளம்பிச் சென்றான் அபிமன்யு.

கீழே கிளம்பிச் சென்று பார்த்த பொழுது, அப்பாவும், அம்மாவும், ‘இந்த ஏரியாவில் சற்று நடந்து வருகிறோம்’ என்று சொல்லி கிளம்பிச் சென்றனர். உத்தராவிற்கு யாருடனாவது பேச வேண்டும் போல் இருந்ததால் அக்காவை வீடியோ காலில் அழைத்தாள்.

போனை எடுத்த பூமிஜா, “எப்படி இருக்க உத்ரா” என்றாள்.

“நான் தான் இந்த கேள்வியை உன்னிடம் கேட்க வேண்டும். சொல்லு நீ எப்படி இருக்க. அத்தான் எப்படி இருக்கார், என்னை சித்தி ஆக்கப் போகும் உன் குழந்தை எப்படி இருக்கு?” என்று கேள்வியாய் அடுக்கினாள்.

“நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம், உத்ரா. எனக்கு தான் உன்னிடம் பேச கொஞ்சம் குற்றவுணர்வா இருந்தது, அதனால் தான் உன்னிடம் இத்தனை நாள் பேசவில்லை. கல்யாணத்தன்று நான் போய் விட்டால், அபிமன்யுவிற்கு நல்ல பெண் கிடைப்பாள் என்று தான் நினைத்தேனே தவிர, உன்னை கல்யாணப் பெண் ஆக்குவார்கள் என்று நினைக்கவில்லை, சாரி உத்ரா.” என பாவமாக மன்னிப்புக் கேட்டாள் பூமிஜா.

“அதுக்காக நான் உனக்கு நன்றி தான் சொல்வேன் பூமி. எனக்கு எப்பொழுதும் அபியை ரொம்பப் பிடிக்கும். நீ அப்படி சென்றதால் தான் எனக்கு ஜாக்பாட் அடித்தது.” என சந்தோஷமாகக் கூறினாள் உத்ரா.

“அடிப்பாவி, இதை சொல்ல உனக்கு மூணு மாசம் ஆச்சா, நான் தான் குற்றவுணர்வில் உன்னிடம் பேசவில்லை. உனக்கு என்னடி கேடு, நன்றி சொல்வதற்கு உனக்கு இவ்வளவு நாளா?” என கொதித்தாள் பூமி.

“எனக்குத் தான் அபியை பிடிக்கும் என்று சொன்னேன், அவருக்கு என்னை பிடிக்க வேண்டாமா? அது தெரியாமல் எப்படி உனக்கு நன்றி சொல்வது? இப்பொழுது தான் நாங்கள் இருவருமே ஒருவாறாக பேசி நல்லபடியா இணைந்து இருக்கோம். அதனால் தான் கொஞ்சம் லேட்.” என விளக்கினாள் உத்ரா.

“உனக்கு அபியை பிடிக்கும் என்று, என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை உத்ரா?”

“என்னுடையாதாவது, ஒன் சைட் லவ், சொல்லவில்லை. நீ ஏன் உன்னுடைய காதல் கதையை என்னிடம் முன்பே கூறவில்லை பூமி?”

“சில சமயம் சொல்ல நினைப்பேன் உத்ரா. ஆனால் நீ அப்பாவுக்கு ரொம்ப பெட். எங்கே அவரிடம் சொல்லி விடுவாயோ என்று தான், மறைத்தேன். சாரி உத்ரா.” என கவலையுடன் கூறினாள் பூமிஜா.

“உன்னுடைய சாரியை நான் எத்துக் கொள்ளனும்னா, உன்னுடைய லவ் ஸ்டோரியை இப்போ சொல்லு. நீ அத்தானை எங்கு முதலில் பார்த்த? எப்படி உங்க லவ் ஆரம்பித்தது?” என கேள்விகளை அடுக்கினாள் உத்ரா.

தங்களது முதல் சந்திப்பைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் பூமிஜா.

பூமிஜா, வார கடைசி நாட்களில்,  இறைவனின் குழந்தைகளுக்கான ஆசரமத்தில் சேவை செய்ய செல்வாள்.  அதில், சில சமையம் ஆசிரமத்திற்க்கான நன்கொடைகளை சேகரிப்பதுவும் ஒரு வேலையாகும்.  

அப்படித் தான் ஒரு பெரிய பணக்காரர், லட்ச ரூபாய்க்கான காசோலை தருவதாகச் சொல்லி இருந்ததால், அதனை வாங்க, ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றாள்.  

அங்கிருந்த வரவேற்பறையில் இருந்து அவரை போனில் தொடர்பு கொண்ட பொழுது, “என்னுடைய அறைக்கு வாம்மா” என்றார்.

“பரவாயில்லை ஸார், நீங்களே இங்கு வந்து கொடுத்து விடுங்கள்” என்றாள் பூமி.

“சரி அப்படி என்றால், ரெஸ்டாரென்டில் காத்திரு வருகிறேன்.” என்றார்.

அந்த இடம் மிகவும் ஆடம்பரமாக இருந்தது. ஒரு பக்க சுவர் முழுவதும் மீன் தொட்டியால் அமைந்து இருந்தது.  உள்ளே சென்று ஓர் இடத்தில் அமர்ந்தாள். ஆட்கள் அதிகம் இல்லை. சிறிது நேரம் கழித்து யாரோ மெல்லிய குரலில் பேசுவது கேட்டது.  அங்கிருந்த ஒரு பேரர் தான், அங்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில்  போனில் மெல்லிய குரலில் உரையாடிக் கொண்டிருந்தான்.

“ஜூஸில்  வேண்டாம் ஸார். சந்தேகம் வரும். சூப்பில் கலந்து கொண்டு வருகிறேன்.” எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

அந்த பேரர் பேசியதில் கொஞ்சம் சந்தேகம் வந்தது பூமிக்கு, சுற்றி பார்த்ததில் ஒரே ஒரு மேஜையில் மட்டும், தனி ஒருவனாக, ஒருவன் அமர்ந்து இருந்தான்.  என்ன செய்வது என்று யோசிக்கையில் அந்த பணக்காரர் ‘ஹாய்’ என்று கையாட்டியபடி வந்து சேர்ந்தார்.

அவருக்கு வணக்கம் தெரிவித்து, “நான் தான் சார் பூமிஜா” என்றாள்.

அவரும் பதில் வணக்கம் கூறியபடி “என்னம்மா சாப்பிடற?” என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.