(Reading time: 23 - 45 minutes)

39. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ங்கையை ஒரு வழியாக சமாளித்தாகிவிட்டது. அவள் படிப்பு குறித்த கவலையும் இனி இல்லை. ஆனால் அவளை அடுத்த முறை சந்திக்கும் போது துஷ்யந்தை பற்றி கேட்டால் என்ன செய்வது? அவளுக்கு இப்போது தான் அறுவை சிகிச்சை நடந்திருந்ததால், அவளிடம் உண்மையை கூற வேண்டாமென்று தான் எதை எதையோ சொல்லி சமாளித்து வைத்தாள். ஆனால் இப்படியே இருக்க முடியாது, ஒருநாள் இல்லை ஒருநாள் உண்மையை சொல்லிவிட தான் வேண்டும்.. ஆனால் அப்போது கூட துஷ்யந்த் தான் என் கணவன் என்று சொல்லிட முடியாது.. எப்படித்தான் யமுனாவை சமாளிக்கப் போகிறோமோ என்ற கவலை கங்காவிற்கு பெரிதாக தெரிந்தது.. இருந்தும் கொஞ்ச நாளுக்காவது எதையாவது சொல்லி சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அடுத்து தான், அவள் எங்கே செல்வது? என்ற கேள்வி எழுந்தது. அத்தையிடம் தெளிவாக சொல்லிவிட்டு கிளம்பிட வேண்டும்.. ஆனால் எங்கே? யமுனா சென்னையில் தான் இருக்கப் போகிறாள்.. பேசாமல் அங்கேயே சென்று ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்வது தான் நல்லது என்று தோன்றியது. டிகிரி முடிக்கவில்லையென்றாலும் தையல் தொழில் தெரியுமே!! ஏதாவது துணி தைத்து கொடுக்கும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் துஷ்யந்தின் ஊர் அதுதானே! எப்படியோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துஷ்யந்தை அவனின் மாமா சென்னைக்கு அழைத்து செல்ல தான் பார்ப்பார்.. அவளை துஷ்யந்த் பார்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பார். அவனுக்கும் அவள் தான் தன் மனைவி என்று தெரியவில்லை என்றாலும், அண்ணாமலை சொன்னது போல சீக்கிரம் செட்டில் செய்து அனுப்புங்க என்று அவனது வாயால் சொல்லியிருக்க மாட்டான். இந்த மூன்று மாத பந்தத்தை ஒரே நாளில் அவன் விட்டுவிடுவான் என்று சொல்வதிற்கில்லை. அது அவன் வருவதற்கு முன்பே அவளை துரத்துவதில் குறியாக இருந்த அண்ணாமலையின் நடவடிக்கையில் நன்றாகவே தெரிகிறது.

ஆனாலும் அவளது வாயால் எந்த உண்மையும் சொல்ல முடியாது என்ற காரணத்தால், அவன் கண்களில் படாமல் இருப்பது தான் நல்லது. எப்படியோ கொஞ்சம் காலம் போனதும் துஷ்யந்திற்கு அண்ணாமலை அவர் எதிர்பார்த்தது போன்று அவர்கள் ஜாதியிலேயே அதிக அந்தஸ்துள்ள பெண்ணாக பார்த்து திருமணம் செய்துவிடுவார். அதை நினைத்து பார்த்தால் மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது. இருந்தும் அது தான் நிதர்சனம் என்று மனதை தேற்றிக் கொண்டாள்.  இப்போதைக்கு சென்னைக்கு செல்லாமல், அதற்கு அருகில் உள்ள ஏதாவது ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்துக் கொண்டு தான் வீட்டிற்குச் சென்றாள்.

கனகாவும் கங்காவின் வருகைக்கு தான் காத்திருந்தார். கொஞ்ச நேரத்திற்கு முன் அவள் வீட்டுக்கு வந்த போதும் கனகா அங்கே தான் இருந்தார். ஆனால் அவர் இருப்பதை அவள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அக்காவும் தங்கையும் ஏதோ கூடி பேசினர். பின்பு கிளம்பும் போது தான் விஷயத்தை அவரிடம் கூறினர். கங்காவின் முடிவு ஒருவித்தத்தில் கனகாவிற்கும் நல்லதாகபடவே யமுனா சென்னைக்கு செல்வதை கனகாவும் ஏற்றுக் கொண்டார். ஆனால் அதே நேரம் கங்காவும் இதே முடிவை எடுத்தால், அதை கனகாவால் அனுமதிக்கவே முடியாது. அவளை வைத்து இன்னும் அவர் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியது உள்ளதே..

மகனும் மருமகளும் அவர்களோடு தன்னை வைத்துக் கொள்ள விரும்பாத அந்த நேரத்தில் தான் கடவுள் கண் திறந்தது போல் கங்காவின் குடும்பத்தை இங்கு குன்னூரில் பார்த்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு தஞ்சம் புகுந்து மூன்று வேலை சாப்பாட்டுக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார். இதில் கங்காவின் பெற்றோர்களும் இறந்த  போது இந்த இரண்டு பெண்களின் பொறுப்பு தன்னுடையதாகிவிடுமோ என்று பயந்த போது, கங்காவே தைரியமாக குடும்பத்தை பார்த்துக் கொண்டதால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற பேரில் இருந்துக் கொண்டார்.

இதில் யமுனாவிற்கு வைத்தியம் என்ற நிலையில் கங்கா தவித்த போது, அந்த நிலையில் உடன் இருக்கவும் முடியாமல், விலகவும் முடியாமல்  இக்கட்டில் மாட்டிக் கொண்டார். அவரால் அவ்வளவு பணத்துக்கும் ஏற்பாடு செய்ய முடியாது. இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து தானும் அல்லல் பட வேண்டுமே என்றிருந்தது. இந்த நேரத்தில் தான் மேனேஜர் மூலம் அவர் குழப்பத்திற்கு விடை கிடைத்தது. அவன் சொன்னதுக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லையென்றாலும், அவராக ஒரு திட்டம் போட்டு அதை நிறைவேற்றியும் விட்டார்.

கடைசி வரை கங்காவின் வீட்டிலேயே காலத்தை ஓட்டிட நினைத்தார். அதுவும் கஷ்டப்படாமல் வசதியாகவே இருக்கலாம். இப்படியெல்லாம் கற்பனையில் மகிழ்ந்திருக்கவே, கொஞ்சம் கால கஷ்டம் தானே என்று யமுனாவுக்கு மருத்துவமனையில் உதவியாக இருந்தது. அவளுக்கு பணிவிடை செய்தது என்று எல்லாமே பார்த்துக் கொண்டார்.

ஆனால் அதுவும் நிரந்தரமில்லை என்பது போல் மேனேஜர் வந்து திரும்பவும் குட்டையை குழப்பினான். கிட்டத்தட்ட மிரட்டினான். அண்ணாமலைக்கு எதிரா எதுவும் செய்திட முடியாது. திருமணத்திற்கும் சாட்சியில்லை அதனால் அப்படியே ஒதுங்கிடுவது தான் நல்லது. சும்மா ஒன்றும் போக வேண்டாம், கங்காவுக்கு மட்டுமில்ல உனக்குமே நிறைய பணம் கொடுப்போம், வாங்கிக் கொண்டு அமைதியாக விலகிடுங்க, மீறி பிரச்சனை செய்தால் உயிருக்கே ஆபத்து என்று கூறினான்.

கனகா மிகவுமே பயந்து போனார். உடம்பு சரியில்லாத பையனாச்சே, அவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா, அதனால் கங்காவை நிரந்தரமாக மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் நிறையவே நம்பினார். ஆனால் இப்படி உயிரையே எடுத்திடுவோம் என்று மிரட்டுவார்கள் என்று நினைக்கவில்லை. கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக விலகிடுவது என்று முடிவு செய்துக் கொண்டார். கங்கா என்ன செய்கிறாளோ செய்துக் கொள்ளட்டும், அது அவள் பாடு.. இனியும் அவர்களோடு இல்லாமல், வேறு எங்காவது சென்று அண்ணாமலையிடம் வாங்கிய பணத்தை வங்கியில் போட்டு, மாதம் மாதம் வரும் வட்டியை செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு விட்டார். ஆனால் அதன்பின் நடந்ததே வேறு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.