(Reading time: 23 - 45 minutes)

த்தை  இன்னும் கூட எனக்கு உங்க மேல கொஞ்சம் மரியாதை இருக்கு.. அம்மா அப்பா இறந்ததுக்கு பிறகு எங்களுக்கு துணையா இருந்தீங்கன்னு நன்றி உணர்ச்சி இருக்கு. இனியும் உங்கக் கூட இருக்க முடியாது, தனியா போகனும்ணு நினைச்சாலும் அப்படியே விட்டுட்டு போக தோணல.. அக்காக்கிட்டயும் மாமாக்கிட்டயும் பேசி உங்களை கூட்டிட்டு போக சொல்லலாம்ணு நினைச்சேன்.. இல்ல வேற ஏதாவது வழி பண்ணிக் கொடுக்கலாமான்னு யோசிச்சேன். இதுவரைக்கும் எனக்கு செஞ்சது பத்தாதுன்னு இப்போ இவ்வளவு கீழ்த்தரமான வேலையில இறங்கறீங்களா? நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன்னு இன்னும் தப்பு கணக்கு போடாதீங்க.. இனியும் உங்களுக்கு இரக்கப்பட்டேன்னா, அது எனக்கு தான் கேவலம்..”

“இங்கப்பாரு நான் உனக்கு நல்லது செய்ய தான் நினைச்சேன்.. இப்பவும் நினைக்கிறேன்.. கொஞ்சம் உடம்பு சரியில்லாதவனா இருந்தாலும் அவனுக்கு சரியாகிடுச்சுன்னா, உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா அண்ணாமலை என்னையும் தான் ஏமாத்திட்டாரு.. உயிரை போக்கிடுவேன்னு சொல்றப்போ அவனை எதிர்க்க முடியுமா? உன்னால அது முடிஞ்சுதா? என் புருஷன்னு உரிமை கொண்டாட மாட்டேன்னு சொல்லிட்டு வந்தல்ல..

இனி உன்னோட எதிர்காலம் என்ன? வேலை செஞ்சு பொழைச்சுப்பன்னு சொல்வ.. ஆனா நான் சொல்றது நீ ராணி மாதிரி வாழ வழி.. நீ மட்டுமில்ல உன்னோட தங்கச்சியையும் ராணி மாதிரி வாழ வைக்கலாம்.. அவளை டாக்டர், இஞ்சினியர்னு படிக்க வைக்கலாம்.. நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டிக் கொடுக்கலாம்.. இப்போல்லாம் பணம்னா வாய பிளந்துக்கிட்டு வந்து கட்டுக்கிட்டு போயிடுவானுங்க.. உங்க பிண்ணனியை பார்க்க மாட்டாங்க.. உனக்கு யமுனாவுக்கும் எந்த குறையும் இல்லாம வாழ வழி சொல்றேன்.. அதை புரிஞ்சு நடந்துக்கோ.

“இப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு பதிலா நானும் யமுனாவும் செத்தே போய்டுவோம்.. புருஷன்னு உரிமை கொண்டாட முடியலன்னாலும் துஷ்யந்த் தான் என்னோட புருஷன், அது எனக்கு தெரியும்ல அது போதும்.. அப்படியே இருந்துப்பேன்..  கஷ்டப்பட்டாலும் மானத்தோட வாழ்ந்துக்குவேன்.. ஆனா என்னைக்கும் இப்படி ஒரு கீழ்நிலைக்கு போகவே மாட்டேன்..”

“நீ அப்படி இருக்க நினைக்கலாம்.. ஆனா உன்னோட வயசு சும்மா இருக்காது.. உன்னை இப்படியே இருக்க விடவும் மாட்டானுங்க.. ஒரு பொண்ணு தனியா இருந்தா அவளை கொத்திட்டு போக எத்தனை பேர் காத்துக்கிட்டு இருப்பாங்க தெரியுமா? அதுவும் நல்லவனாகவே நடிப்பாங்க.. நீதான் முக்கியம், நீ எப்படி இருந்தாலும் பரவாயில்ல, உன்னை நான் ரொம்ப காதலிக்கிறேன்னு ஆசை வார்த்தை பேசுவானுங்க.. ஆனா எல்லாம் உன்னோட உடம்புக்காக மட்டும் தான்..

அது தெரியாம நீ அவனை நம்பி போவ.. உன்கிட்ட அவனோட தேவை தீர்ந்ததுக்கு பிறகு உன்னை விட்டுட்டு போயிடுவான்.. போறவன் சும்மா போவானா? வயித்துல ஒன்னை கொடுத்திட்டு போவான்.. அதுக்காக நீ வாழனும், கஷ்டப்படனும்.. அப்போ மட்டும் சும்மா இருப்பானுங்கன்னா நினைக்கிற, அப்பவும் வந்து ஆசை வார்த்தை காட்டுவானுங்க.. உன்னோட குழந்தை என்னோட குழந்தைன்னு சொல்வானுங்க.. நீங்க ரெண்டுப்பேரும் தான் என்னோட உலகம்னு சொல்லுவானுங்க.. ஆனா அவனோட கண்ணுக்கு பெருசா தெரியறது உன்னோட அழகும் இளமையும் தான்..

அது தீர்ந்தப்பிறகு உன்னோட குழந்தை அவனுக்கு பாரமா தெரியும், அது நம்மக் கூட வேணாம்னு சொல்லுவான்.. பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு பூதாகரமா வெடிக்கும்.. இப்படி சீரழஞ்சு போன எத்தனை பொண்ணுங்களை பார்த்திருக்கேன் தெரியுமா? இப்படி உன் வாழ்க்கை சீரழிஞ்சு போறதுக்கு பதிலா நான் இப்போ சொல்ற மாதிரி இருந்தா அவனை பேசி மயக்கி கொஞ்சமாவது உனக்குன்னு ஏதாவது சேர்த்து வச்சிக்கிட்டா உன் எதிர்காலத்துக்கு பாதுகாப்பா இருக்கும்..” என்று மிகவும் மோசமாகவே பேசினார்.

அவர் பேச்சைக் கேட்கும் போது கங்காவின் உடலே கூசியது. திருமணம், தாம்பத்யம் என்ற சொல்லுக்கெல்லாம் அர்த்தம் இல்லாதது போலவே உணர்ந்தாள். இன்னும் சொல்ல போனால் அவ்வார்த்தைகளை வெறுத்தாள். ஒரு பெண்ணோட அழகும் உடலும் மட்டும் தான் இந்த சமுதாயத்திற்கு தெரியுமா? ஏன் அவளுக்கு ஒரு மனசு இருக்கிறதே யாருக்கும் தெரியாதா? இன்னும் இந்த உலகத்தில் அண்ணாமலை, கனகா, மேனேஜர் போல பிறவிகள் எத்தனை பேரை சந்திக்க வேண்டுமோ? எத்தனையோ பிரச்சனைகள் வந்த போது கூட வாழ்ந்து விடலாம் என்று உறுதியாக இருந்தவளுக்கு, வாழ்க்கையில் முதல்முறையாக இனி எப்படி வாழப் போகிறோமோ? என்ற பயம் தோன்றியது. 

ஆனாலும் கனகா கேட்டதுக்கு கங்கா ஒத்துக் கொள்ளவே இல்லை. உயிரே போனாலும் இதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று தீர்மானமாக கூறினாள். இப்போது மட்டுமல்ல இனி வரும் காலங்களில் கூட   கனகா சொல்வது போல் தன் வாழ்க்கையில் எதுவும் நடக்க அனுமதிக்க போவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.  இனியும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அங்கிருந்து சென்றிட வேண்டும் என்று துடித்தாள்.

அங்கிருந்த ஒன்றிரண்டு துணிமணிகள், தன்னுடைய புத்தகங்கள், சான்றிதழ்கள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு கிளம்ப அறைக்குச் சென்றாள்.

கனகாவிற்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. கங்காவை விட்டுவிட்டால் மருமகளிடம் கண்டிப்பாக திட்டு வாங்க வேண்டியிருக்கும்,  கண்ட கனவெல்லாம் பாழாய் போய்விடக் கூடும் என்று புரிந்ததும், அவசரமாக பூட்டை எடுத்துக் கொண்டு வந்து கங்காவை உள்ளே வைத்து அந்த அறையை பூட்டினார். உடனே தான் புதிதாக வாங்கி வைத்திருந்த தன் அலைபேசியில் தன் மருமகளுக்கு தொடர்புக் கொண்டு பேசினார்.

“ஒத்து வந்திருந்தா நமக்கு வேலை ஈஸியா முடிஞ்சிருக்கும், வரலன்னா என்ன? பூட்டி வச்சிருக்கீங்கள்ள, இன்னும் கொஞ்ச நேரத்துல எஸ்டேட் ஓனர்க்கிட்ட சொல்லி ஆளுங்களை அனுப்பி விட்றேன்.. அதுக்குப்பிறகு அவளை அந்த எஸ்டேட் ஓனர் பார்த்துப்பாரு.. நீங்க பூட்டை மட்டும் திறந்து விட்றாதீங்க” என்று சொன்னதும் கனகா தலையை தலையை ஆட்டிக் கொண்டார்.

கனகா பூட்டிய நொடியே வந்து கங்கா கதவை தட்டினாள். கனகா மசியவே இல்லை. யமுனாவை அழைத்துச் சென்ற போதே தானும் செல்லாமல் போன தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்துக் கொண்டாள். கதவை தட்டி தட்டி சோர்ந்து போனவளுக்கு அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை. அந்த அறையில் தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். ஒரே ஒரு ஜன்னல் மட்டும் தான் இருந்தது, அதை திறந்துப் பார்த்தாள்.  இரும்பு கம்பிகளாலான ஜன்னலை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

ஒன்றுமே செய்ய முடியாத நிலையில், அவர்கள் திட்டத்திற்கு பலியாகவே கூடாது என்று நினைத்தவளுக்கு சாவதை தவிர வேறு வழியே தெரியவில்லை. அந்த நேரம் தன் தங்கையை நினைத்து பார்த்தவளுக்கு, யமுனாவிற்கு மதர் இருக்கிறார்கள், அவர்கள் அவளை விட்டுவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், பையில் வைத்த தன் புடவை ஒன்றை எடுத்தவள், அந்த வீட்டின் ஓடுகளை தாங்கிதல்யிருந்த கம்பியில் கட்டினாள். ஸ்டூல் போட்டு ஏறி, துணிந்து தன் கழுத்தை இறுக்கிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.