சரவணன் மித்ராவிடம் சொல்லிக் கொள்வானோ என்று மற்றவர்கள் அவளை விட்டு சற்று தள்ளி காத்து இருக்க, அவனோ முதலில் காரில் ஏறி விட்டான். அவன் அம்மா தான் பிறகு ஏறினார்.
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு இன்னும் கலக்கம் கூடியது. மித்ராவிடமோ எந்த சலனமும் இல்லை.
வீட்டினர் சாப்பிட்டு கொண்டு இருந்த போது மித்ரா போனிற்கு கால் வர, அதை பார்த்தவளின் முகம் பிரகாசமாகியது. ஒருவேளை மாப்பிள்ளை தான் தனியாக சென்று போன் செய்கிறாரோ என்று மற்றவர்கள் மகிழும் வேளையில்,
“ஹலோ அத்தான். “ என்ற மித்ராவின் குரலில், எல்லோர் உற்சாகமும் வடிந்தது.
ஆனால் ஒரு பக்கம் நிம்மதியாகவும் இருந்தது. மித்ராவை இனிமேல் ஷ்யாம் சரி செய்து விடுவான் என்று பெருமூச்சு விட்டனர்.
“ஹாய்.. மித்துமா.. வாழ்த்துக்கள்.. நல்ல ஹாப்பி நியூஸ் எல்லாம் சொல்லிருக்கீங்க. இன்னைக்கு இருக்கிற சந்தோஷம் உனக்கு என்னைக்கும் இருக்கணும்” என்று முதலில் வாழ்த்தினான் ஷ்யாம்.
“போங்க அத்தான். முதலில் உங்க கூட சண்டை. இங்கே என்னோட விசேஷத்திற்கு கூட வர முடியல்ல உங்களால.:
“முதலில் வெரி சாரி. நான் பர்சனல் மெசேஜ் எதுவும் பார்க்கவே இல்லை. ப்ரீ ஆனதும் முதலில் உன் மெசேஜ் தான் பார்த்தேன். உடனே உன்னை கூப்பிடனும்னு நினைச்சேன். ஆனால் பங்க்ஷன் முடியட்டும்னு வெயிட் செய்தேண்டா”
“சரி. சரி. எப்போ வரீங்க?”
“சீக்கிரம் வரேன். விசேஷம் நல்லபடியா முடிஞ்சுதா? “ என்று வினவ,
“ஹ்ம்ம். நல்லா நடந்தது அத்தான். ஆனால் உங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன்.”
“சாரி டா.. கல்யாணத்துலே கலக்கிடுறேன் ஓகே வா” என்று கூற
“சரி அத்தான்.” என்று வைக்க போகும் முன்,
“மித்தும்மா சபரி அத்தை கிட்டே கொடுடா” என அவள் தன் அம்மாவிடம் மொபைல் கொடுத்து விட்டு தான் சாப்பிடும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அவன் அத்தையிடமும், மாமாவிடமும் முறையாக பேசி முடித்து விட்டு, தன் அன்னையிடம் பேச ஆரம்பித்தவன்,
“அம்மா .. “ என்றழைக்க.
“சொல்லு ஷ்யாம். என்ன ஆச்சு ? குரல் ஒரு மாதிரி இருக்கு?”
“மித்து எப்படிம்மா இருக்க? நார்மல் தானே” என்று கேட்டான் ஷ்யாம்.
“ஹ்ம்ம்.. ஓகே “ என்று கூற,
“அவள கொஞ்சம் பார்த்துக்கோங்க. அவ பாட்டி அவள கொஞ்சம் கஷ்டபடுத்துற மாதிரி தெரியுது”
“ஹ்ம்ம்.. எனக்கும் புரியுது.. ஆனால் நீ எப்போ வருவ?
“கூடிய சீக்கிரம் வர பார்க்கறேன். கல்யாணம் எப்போ வச்சுருக்காங்க ?
“இன்னும் ஒரு மாசத்திலே “ என,
“எனக்கு இன்னும் குறைஞ்சது பதினைஞ்சு நாள் ஆகும் வர. என்ன பண்ண?”
“நீ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துரு ஷ்யாம். அப்போ தான் கொஞ்சம் அவ தைரியமா இருப்பா”
“சரிம்மா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்படி நடந்துக்காரங்க?
“அதை பத்தி நான் வீட்டுக்கு போனதும் பேசறேன்” என்று விட, சரி என்றவன்
மீண்டும் மித்துவிடம் கொடுக்க சொல்ல, அவள் வாங்கி பேச ஆரம்பித்தாள்.
“மித்து.. நீ போன்லே அனுப்பின வாய்ஸ் மெசேஜ் பத்தி நாம நாளைக்கு பேசலாம். இன்னைக்கு நிம்மதியா தூங்கு. எதை பதியும் கவலை படக் கூடாது. சரியா” என
“சரி அத்தான்.” என்று கூறி வைத்து விட்டாள்.
அதன் பிறகு இவர்கள் மண்டபம் காலி செய்து வீடு சென்றனர். சபரி வீட்டினர் அவர்கள் வீட்டிற்கு செல்ல, ராம் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு சென்றனர்.
மைதிலி வீட்டிற்குள் செல்லும் போதே அவள் போன் அடிக்க, ஷ்யாம் தான் கூப்பிட்டு இருந்தான்.
“சொல்லு ஷ்யாம்”
“அம்மா, அத்தை வீட்டிலே என்னமா நடக்குது? இப்போ எதுக்கு இவ்ளோ அவசரமா மித்துக்கு கல்யாணம்?”
“அதான் உனக்கு விவரமா மெயில் செய்து இருந்தோமேடா. நான், அஸ்வின் ரெண்டு பேருமே அனுப்பி இருந்தோமே”
“ம்ச்ச்.. அதுவும் இன்னைக்கு தான் பார்த்தேன். நான் வர வரைக்கும் நிச்சயத்தையாவது ஹோல்ட் செய்து இருக்கலாமே”
“டேய்.. அது எப்படிடா முடியும். அந்த பாட்டி பற்றி தெரியாதா?
“அதான் இன்னும் எரிச்சாலா இருக்கு. அந்த பாட்டி மித்ராவை நல்லா குழப்பி விட்டு இருக்காங்க. அவளுக்கு என்னவோ பிரச்சினை இருக்கிற மாதிரி பேசி இருக்காங்க. அதை கேட்டு அவள் ரொம்ப பீல் பண்றா. “