(Reading time: 13 - 25 minutes)

சரவணன் வீட்டில் அவனுக்கு இரு சகோதரிகள் மட்டுமே. இருவருமே அவனுக்கு அக்காக்கள் என்பதால், எல்லோருக்கும் கடைகுட்டியான சரவணனை அவன் அம்மா கைக்குள் வைத்து பார்த்துக் கொள்வார். நாகரிகமாக சொல்வதென்றால் அவன் அம்மா பையன்.

மாப்பிள்ளை சரவணன் நிச்சயத்திற்கு வந்து இருக்க, அவனின் நண்பர்கள் உடன் இருந்து கேலி கிண்டல், எல்லாம் செய்யவே சற்று உற்சாகமான மனநிலையில் இருந்தான். அதோடு அவன் அம்மாவும் உறவுக்காரர்களை கவனிப்பதில் பிஸியாக இருந்ததில் தன் மகனை கொஞ்சம் விட்டுவிட்டார்.

முதலில் பெரியவர்கள் நிச்சய பத்திரிகை வாசிக்கும் வேலை எல்லாம் முடித்து இருக்க, பின் மித்ராவை வரவைழத்து மேடையில் வைத்து நிச்சய புடவை கொடுத்து, அவளை மாற்றி வர அனுப்பினர். அவள் மாற்றி வந்தவுடன் மித்ராவிற்கு மாப்பிள்ளை வீட்டில், பெண் வீட்டில் என நலுங்கு வைத்தனர்.

கடைசியாக மாப்பிள்ளையையும் மேடைக்கு அழைக்க, அவன் அம்மாவை பார்த்தான். அவர் தலை அசைக்கவும், மேடை ஏறியவன், பெரியவர்கள் சொன்னபடி செய்தான். பிறகு அவன் அம்மா வந்து அவளுக்கு அந்த புடவைக்கு பொருத்தமான கல் நெக்லஸ் அணிவிக்க, அவன் அருகில் நின்று இருந்தான்.

இப்போது மித்ரா அப்பா முரளி மித்ராவிடம் ஒரு மோதிரத்தை கொடுத்து சரவணன் கையில் அணிவிக்க சொல்ல, அவள் தயக்கமாக அவனை பார்த்தாள். அவனோ அவன் அம்மாவை பார்க்க, அவர் கையை காமி என்று சொல்லவும், கை நீட்டினான். மித்ரா பட்டும் படாமல் அவனின் விரலில் மோதிரம் மாட்டினாள்.

சற்று அதிருப்தியுடன் சரவணனின் அம்மா, தங்கள் சம்பந்தியை பார்க்க, அவர்களோ அவரை கவனிக்காமல், அடுத்து தங்கள் மகனை அழைத்து, மாப்பிள்ளைக்கு செயின் போட செய்தனர். இதை பார்த்தவுடன் இப்போது அந்த அம்மாவிற்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது.

அதோடு சரவணனுக்கு ஒரு டிரஸ் வாங்க வேண்டுமென்று இவர்கள் கேட்டிருக்க, அதை தாங்கள் வாங்கி கொள்வதாக கூறி விட்டு, அதற்குண்டான பணத்தை மட்டும் வாங்கி கொண்டு இருந்தனர் மாப்பிள்ளை வீட்டார். இப்போது அந்த ட்ரெஸ் கொடுத்தவுடன் , அதை மாற்றிக் கொண்டு வந்தான் சரவணன்.

பின் வந்தவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள, உள்ளே பந்தி ஆரம்பித்து இருந்தது. எல்லோரும் அதில் பிஸியாகவே, சரவணன் மித்ரா அருகில் இருந்து மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்து இருந்தான்.

“ஹாய் மித்ராந்தவி..” என்று அழைக்க,

“என் பேரு மித்ரவிந்தா..” என்று சொன்னாள் மித்ரா.

“என்ன பேர் இது? சரி மித்ரான்னே கூப்பிடுறேன்” என்றவன்,

“உன் போன் நம்பர் கொடு. நான் ப்ரீயா இருக்கும்போது கூப்பிடுறேன். பேசலாம்.” என்றான்.

அவள் அவனிடம் நம்பர் கொடுக்கவும், தன் போனில் சேவ் செய்து கொண்டவன்,

“நீ ரொம்ப அழகா இருக்கே. “ என, சற்று வெட்கம் வந்தாலும்,

“தேங்க்ஸ்.” என்றாள் மித்ரா.

அதற்குள் மேடைக்கு சிலர் வரவே, அவர்களுடன் பேசி சிறிது போட்டோ எடுத்து அவர்களை அனுப்பி வைத்தான். போடோக்ராபர் அவர்கள் இருவரையும் தனியாக போட்டோ எடுக்க வர, சற்று நேரம் அதற்கு போஸ் கொடுத்தனர்.

அவர் இன்னும் சற்று நெருக்கமாக, தோள் மேல் கை போட்டு, இடுப்பை கட்டிக் கொண்டு போஸ் என சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் அவன் அம்மா வேகமாக வந்தவர்,

“அப்படி எல்லாம் ரொம்ப வேண்டாம் போடோக்காரரே. ஊர்லே நாலு மனுஷா கிட்டே காட்டனும். அவங்க முகஞ்ச்சுளிக்கிற மாதிரி எல்லாம் வேணாம்” என்றார்.

போடோக்ராபரோ “அப்படி எல்லாம் ரொம்ப மோசமா எடுக்க மாட்டோம்மா. அவங்களுக்கு இந்த நாள் வாழ்கை முழுசும் நியாபகம் இருக்கணும் இல்ல. அதான் “ என்று கூற

“அப்படி எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி எடுக்கறது ரொம்ப தப்பு தம்பி. எங்க காலத்துலே எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு மாப்பிள்ளை பார்த்துக்கவே மாட்டாங்க. இப்போ உள்ளவங்களிடம் அப்படி சொன்னா சிரிப்பாங்களே அப்படின்னுதான் நிச்சயத்துக்கே வரவைச்சேன். இல்லாட்டா நேரா கல்யாணத்துலே தான் பார்த்துப்பாங்க. “

என்று சற்று சத்தமாக பேசவே, எல்லோரும் திரும்பி பார்த்தனர். போட்டோ கிராபர் ராம் குடும்பத்தினர் மீதிருந்த மரியாதை காரணமாக அதற்கு மேல் அந்தம்மாவை பேச விடாமல் நகர்ந்து விட்டார்.

இதே போல் சாப்பிடும் போதும் , கல்யாணத்திற்கு முன் சேர்ந்து அமரக் கூடாது என்று கூறி அவர்கள் அனைவரும் முதலில் சாப்பிட வைத்து விட்டார் சரவணன் அம்மா.

இங்கே சுமித்ரா, அஷ்வின், சைந்தவி இன்னும் சில பிரென்டஸ் எல்லோரும் இருவரும் சாப்பிடும் சமயத்தில் அவர்களை ஓட்டலாம் என்று காத்து இருந்து ஏமாந்தனர்.

இதை பார்த்த ராம், மைதிலி இருவருக்கும் சற்று கலக்கமாக இருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

மித்ரா அருகில் செல்லாமா என்று யோசித்த நேரம், மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப தயாராகவே எல்லோரும் அவர்களை வழி அனுப்ப வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.