(Reading time: 13 - 26 minutes)

அமேலியா - 47 - சிவாஜிதாசன்

Ameliya

ல்யாண வீடு மணம் முடிந்தவுடன் வெறிச்சோடி காட்சியளிப்பது போல் வெறுமையோடு காட்சி தந்தது ஜானின் இல்லம். கடைசியாக நால்வர் மட்டுமே அந்த வீட்டில் மிச்சம் இருந்தனர். அந்த நால்வர்களுக்குள்ளும்  நாலாயிர எண்ண ஓட்டங்கள்.

ஜானிற்கு தனிமை, அமேலியா வசந்திற்கு காதல், ஜெஸிகாவிற்கு மனதில் சொல்லமுடியா வேதனை. நால்வரும் நான்கு திசைகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். குளிர்ந்த தென்றல் அவர்கள் உடலைத் தீண்டியபோதும் அவர்கள் அசையாமல் இருந்தார்கள்.

திடீரென வசந்தின் மொபைல் அலறியது. எல்லோரும் கனவில் இருந்து விழித்தவர்களை போல் பார்த்தனர்.

"ஹலோ"

"என்னடா செஞ்சிட்டு இருக்க?" மேகலாவின் குரல் கலகலப்பாய் கேட்டது.

"ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சு இப்போ தான் கொஞ்சம் ஃபிரீயா இருக்கேன்"

"அமேலியா எப்படியிருக்கா?"

"அவளுக்கென்ன ரொம்ப நல்லா இருக்கா"

"ஜெஸிகா நல்லா பாத்துக்குறாளா?"

"ம்"

"இன்னும் இரண்டு நாளுல அமெரிக்கா வந்துடுவோம். நீ மறக்காம ஏர்போர்ட் வந்துடு"

'அதுக்குள்ளயா ஒரு மாசம் முடியுது' என்று மனதிற்குள் எண்ணினான் வசந்த்.

"என்னடா அமைதியா இருக்க?"

"சரி நான் வந்துடுறேன்"

"யாரு போன்ல" என்றாள் ஜெஸிகா.

"போனுக்குள்ள யார் இருக்க போறா?"

ஜெஸிகா ஜானை முறைத்தாள்.

"போன்ல யாரு பேசினான்னு கேக்கணும். அதென்ன போன்ல யாரு. யாரோ போனுக்குள்ள உக்காந்துட்டு பேசுறது போல கேக்குற"

"ஜான் இன்னொரு வார்த்தை நீ பேசினேன்னா உன்னை கொலை செஞ்சிடுவேன்"

"என்னையா?"

"நிஜமா செய்வேன்" என்று ஜானை மீண்டுமொரு முறை முறைத்து வசந்திடம் திரும்பினாள் ஜெஸிகா.

"சொல்லு வசந்த்"

"அக்கா தான் பேசினா. இரண்டு நாளுல அமெரிக்கா வராங்களாம்"

"ஓ நல்லது"

"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?" என்றான் ஜான்.

ஜெஸிகா முறைத்தாள்.

"இந்த ஐடியாவ கேட்டா நீ என்னை கொலை செய்ய மாட்ட ஜெஸ்ஸி. நாம ஷூட்டிங் ஷூட்டிங்ன்னு ரொம்ப பிசியா வேலை செஞ்சிட்டு இருந்தோம்"

"என்ன?"

"சரி நீங்க பிசியா இருந்திங்க. நான் தண்டமா ஓரத்திலே உக்காந்துட்டு இருந்தேன் போதுமா? வசந்துக்கு டைரக்டர் வாய்ப்பு வந்தாச்சு. இனி அவனை கையிலயே பிடிக்க முடியாது. எனக்கும் அடுத்த வாரத்துல இருந்து வேலை ஆரம்பிச்சிடும். ஈராக்குக்கு ஆயுதங்களை கொண்டு போகணும்"

"இத்தனை நாளா நீ கப்பல்ல வேலை செய்றதையே நான் மறந்துட்டேன் ஜான்" என்றான் வசந்த்.

"இந்த நகைச்சுவையை ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை வசந்த்"

"நீ ஈராக் தான போற, அமேலியாவையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுடு" என்றாள் ஜெஸிகா.

"உன் மூளையை வீட்டிலையே மறந்து வச்சுட்டு வந்திட்டியா ஜெஸ்ஸி? அது என்ன ஸ்கூல் பஸ்ஸா? ராணுவ கப்பல். முட்டாள்தனமா பேசிட்டு இருக்க"

"சரி நீ சொல்ல வந்ததை சொல்லு ஜான்"

"நம்ம மூணு பேருமே வேலை வேலையின்னு அலைய போறோம். அதனால இருக்குற இந்த இரண்டு நாளுல சந்தோசமா இருப்போம்"

"இதுக்கான அர்த்தம்..?!"

"சினிமா, பாட்டு, நடனம், சுற்றுலான்னு என்ஜாய் பண்ணனும்"

"நான் இந்த ஆட்டத்துக்கு வரலை" என்றாள் ஜெஸ்ஸி.

"நீ வரலைனா எங்களுக்கென்ன? வழக்கம் போல நீ உன் கூண்டுல போய் அடஞ்சுக்க"

"கூண்டா?"

"உன் வீட்டை தான் சொல்லுறேன். நீ வீட்டுக்குள்ள போனா திரும்பி கதவு திறக்குறதுக்கு இரண்டு மூணு நாள் ஆகுது. அப்படி உள்ள என்னதான் இருக்கு? மூணு ரூம் ஒரு ஹால், இதுக்கு நீ மிருகக்காட்சி சாலையில் கரடி கூட ஒரே கூண்டுல இருக்கலாம்"

"வசந்த் நான் கிளம்புறேன்"

"ஜான் சொல்லுறதும் சரின்னு படுது"

"எனக்கு பிடிக்கலை"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.