(Reading time: 13 - 26 minutes)

"இரண்டே நாள். இதுக்கு அப்புறம் நாம இதே போல மீட் பண்ண சந்தர்ப்பம் கிடைக்குமா? அப்படியே சந்திச்சிக்கிட்டாலும் இந்த வாய்ப்பு கிடைக்குமா?"

ஜெஸிகா அமைதியாக நின்றாள்.

"நீ இதுவரைக்கும் போகணும்னு ஆசைப்பட்ட இடங்களுக்கு எல்லாம் போகலாம். வித்தியாசமான அனுபவமா இருக்கும். உனக்காக என் வீட்டுல ஷூட்டிங் எடுக்க சம்மதிச்சேன். காரியம் முடிஞ்சதும் அப்படியே கழட்டி விட்டுட்டு போறியே"

ஜெஸிகாவின் மனம் மெல்ல மாறத் துவங்கியது. "ஆல்ரைட் இந்த இரண்டு நாளோடு எல்லாம் முடிச்சுக்கலாம். இன்னொரு விஷயம், நான் அதிகமா செலவு செய்யமாட்டேன்"

"அதுக்கு தான் ஜான் இருக்கானே"

"என்னடா வண்டி நம்ம பக்கம் இன்னும் திரும்பாம இருக்கேன்னு யோசிச்சேன் திருப்பியாச்சு"

"சரி எப்போ கிளம்புறது?" ஜெஸிகா கேட்டாள்.

"இன்னைக்கு இரவு"

"அதென்ன இரவு, பகல்ல கிளம்பினா என்ன?"

"பயணம்னா இரவு தான். அது ஒரு தனி சுகம்"

அவர்களின் பேச்சு எதையும் காதில் வாங்காமல் வான் மேகங்களை நோக்கிக்கொண்டிருந்தாள் அமேலியா. 'வசந்த் தன்னை விரும்புகிறானா? இதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? தன் மனம் என்ன சொல்கிறது?' படபடப்பில் அவள் முகம் வியர்வையில் நிரம்பியது.

"அமேலியா"

வசந்த் அழைத்தான். திரும்பினாள்; கண்களில் ஒளியில்லை.

"தயாரா இரு நாம கிளம்புறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றான் வசந்த்.

அமேலியா வெறுமையோடு வசந்தின் முகத்தை நோக்கினாள்.

இரவு நேரம். ஆழ்ந்த அமைதி. இயற்கையழகு இருளுக்குள் மறைந்திருந்த சரியாக இரவு ஒன்பது மணி வேளையில் பெட்டி படுக்கைகளை காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

"எல்லாம் தயாரா?" ஜான் கேட்டான்.

"முடிச்சாச்சு அமேலியா எங்க?" என்றாள் ஜெஸ்ஸி.

வசந்த் அமேலியாவை தேட சென்றான். அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருளில் அமர்ந்திருந்தாள் அமேலியா.

"இங்க என்ன செஞ்சிட்டு இருக்க? வா போகலாம்" என்று வசந்த் அழைத்தான்.

அமேலியா வீட்டை விட்டு வெளியே வந்தாள். உண்மையில் அந்த இடத்தை விட்டு செல்ல அமேலியாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை. ஜானும் ஜெஸ்ஸியும் பின் சீட்டில் அமர்ந்துகொள்ள அமேலியா முன் சீட்டினில் அமர்ந்து கொண்டாள். வசந்த் காரை ஓட்டினான். இருளைக் கிழித்த கார் விளக்கின் ஒளிக் கதிர்களின் உதவியால் கார் புறப்பட்டது.

எங்கும் ஆழ்ந்த அமைதி. ஆங்காங்கே மின் விளக்குகள், தூரத்தில் விளக்கின் ஒளியில் தெரியும் வீடுகள், சாலையில் அவ்வப்போது சிறு சிறு உயிரின நடமாட்டம், இரவு நேர பூச்சிகளின் ரீங்காரம், வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள், மிதமான குளிர் என இரவு நேர பயணம் உண்மையிலேயே அவர்களுக்குள் கிளர்ச்சியை உருவாக்கியது.

எல்லோரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல ஜானையும் ஜெஸிகாவையும் உறக்கம் ஆட்கொண்டது. அமேலியா விழித்துக்கொண்டிருந்தாள். அவள் விழிகள் அவ்வப்போது வசந்த்தை நோக்கின.

வசந்தும் அவளைப் பார்க்க தவறவில்லை. என்ன பேசுவது? என்ன செய்வது? ஐ லவ் யூ க்கான அர்த்தம் அவளுக்கு புரிந்துவிட்டதோ! அவள் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. எல்லா பெண்களுக்கும் வரும் அதே கோபம். இப்பொழுது தான் எது செய்தாலும் மேலும் அவள் கோபத்தை அதிகரிக்கவே செய்யும் என வசந்த் எண்ணினான்

அதனால் அந்த பயணம் ஒரு மௌன பயணமாகவே அமைந்தது. நீண்ட தூர இரவு பயணம் முடிந்து விடியற்காலையில் ரிஸார்ட்டினை வந்தடைந்தது கார். இயற்கையின் பசுமையோடு அமைந்திருந்ததால் அவ்விடமே ரம்மியமாக காட்சி தந்தது.

பயணம் செய்த களைப்பில் சிறிது நேர ஓய்விற்கு பின் குளித்து  தயாராகினர். பின்னர், சைக்கிளிங், போட்டிங், நீச்சல் பயிற்சி என திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தத் தொடங்கினர்.

கலவரமாக இருந்த அமேலியாவின் மனது மெல்ல மெல்ல சாந்தமானது. இதுவரை அவள் அது போன்ற இடங்களை கண்டிராததால் ஏதோ சொர்க்கத்திற்கு வந்து விட்டதை போல் உணர்ந்தாள்.  

அதிக ஜன கூட்டம் இல்லாத இடங்கள். ஆனால், சந்தோசத்திற்கு பஞ்சமில்லாமல் மனதிற்கு இதம் தரும் காட்சிகள். முதலில் சிறிது தூரம் சைக்கிளில் பயணம் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால், அமேலியாவால் சைக்கிளை ஓட்ட முடியவில்லை. அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

நீச்சல் பயிற்சி செய்யவும் அவள் பயந்தாள். வசந்த் அவள் கையைப் பிடித்து ஆளமில்லாத பகுதிக்கு அழைத்து சென்றான். இருந்தாலும் அமேலியா பயந்தாள். பயத்தில் வசந்தின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜான், "கதாசிரியர்ன்னு நிரூபிக்கிறான் பாரு. என்னமா திரைக்கதையை அமைச்சு காதலை ஏற்படுத்துறான்" என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.