(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 11 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ல்கலை கழகத்தில் விண்ணப்பிக்கும் வேலை முடிந்ததும்,  “இங்கு தானே கதிர் சித்தப்பாவும் பேராசிரியராக இருக்கிறார். தமிழ் டிபார்ட்மென்ட் எங்கன்னு கேட்டு அவரை பார்த்துட்டு வரலாமா?” என்று அருள்மொழி நினைத்தாள். “நேற்று நடந்த பிரச்சனையால் அவர் கல்லூரிக்கு வந்தாரோ.. இல்லையோ.. அப்படியே வந்திருந்தாலும் என்னை பார்த்தால், அவருக்கு அது சங்கடமாக தான் இருக்கும்.. அதனால் அவரை இப்போதைக்கு சந்திக்காமல் இருப்பது தான் நல்லது. அதனால் வீட்டுக்கு கிளம்பிவிடலாம்” என்று சிந்தித்தப்படியே  நின்றிருந்த போது,

“இங்க தமிழ் டிபார்ட்மெண்ட் எங்கம்மா இருக்கு?” என்ற ஒரு பெண் குரல் கேட்டது. அவளது அருகில் நின்று அவளை தான் கேட்டார் அந்த பெண்மணி. அளவான உயரம், உடல்வாகு, வயது ஐம்பது இருக்கும்,  மாநிறம், நேர்த்தியாக கட்டிய சேலை, இந்திராகாந்தி போல் வெட்டியிருந்த முடி, முகத்தில் ஒரு சாந்தம் என்று அவரை சில நிமிடங்கள் ரசித்து பார்த்துக்  கொண்டிருந்தாள். அவரது முகம் யாரையோ நினைவுப்படுத்தியது. இருந்தாலும் நினைவில் வரவில்லை.

“என்னம்மா இங்க தமிழ் டிபார்ட்மெண்ட் எங்க இருக்குன்னு தெரியுமா?” திரும்பவும் கேட்டார் அவர்..

“ஓ சாரி மேம்.. நான் இங்க அப்ளை செய்ய தான் வந்தேன்.. எனக்கு இங்க எந்த டிபார்ட்மெண்ட் எங்க இருக்குன்னு தெரியாது..”

“ஓ அப்படியாம்மா.. சரி நான் வேற யார்க்கிட்டயாவது கேட்டுப் பார்க்கிறேன்..” என்று அவளிடம் சொல்லிவிட்டு சென்றவர், ஒரு பத்தடி தான் நகர்ந்திருப்பார்.. அதற்குள் தலையைப் பிடித்தப்படியே, மயங்கி விழப் பார்க்கும் போது அருள் ஓடிச் சென்று அவரை தாங்கி பிடித்துக் கொண்டாள். கீழே அமர்ந்தப்படி அவரை மடியில் தாங்கிக் கொண்டாள்.

“மேடம்.. மேடம்..” முகத்தில் தட்டி தட்டி எழுப்பியும் அவர் மயக்கத்திலேயே தான் இருந்தார். அதற்குள் கூட்டம் கூடி விட, ஒருவர் தண்ணீர் கொடுத்து தெளிக்க சொன்னார். அதை வாங்கி முகத்தில் தெளித்தும் அந்த பெண்மணி கண் விழிக்கவில்லை. கூடியிருந்தவர்களோ எல்லாம் வேடிக்கை பார்த்தப்படி நின்றிருந்தனர். “இது சாதாரண மயக்கம் இல்லை போலயே?” என்று மனதிற்குள் பயந்த அருள்மொழி,

“யாராச்சும் ஒரு ஆட்டோ கூப்பிட்டுட்டு வாங்க.. இவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்..” என்றாள். உடனே ஒருவர் ஓடிச் சென்று ஆட்டோ கூட்டிக் கொண்டு வந்தார். அவசரம் என்பதால் ஆட்டோ அவர்கள் இருக்கும் இடம் அருகிலேயே வந்ததால் சில பேர் உதவியோடு அந்த பெண்மணியை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள்.

நேற்று சென்னை வந்து சேர்ந்ததுமே தோழியை பார்க்க ஆவல் இருந்த போதும் அவள் தன் மேல் கோபமாக இருப்பது புரிந்து அவளை உடனே பார்க்கும் ஆசையை அடக்கிக் கொண்டவனுக்கு மறுநாளே சுடரொளியை பார்ப்போம் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவளை பார்த்த மகிழ்ச்சியில் அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை கூட மறந்து அவளை கூப்பிட்டான். அதற்கு அவளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுமே அவன் மனமும் மகிழ்ச்சியடைந்தது. உடனே அவள் முகம் மாறிப்போனதை அறிந்துக் கொண்டாலும், அவளை சீக்கிரம் சமாதானப்படுத்திவிடலாம் என்று அவள் அருகில் சென்று, “ஹாய் டார்லிங்” என்று அழைத்து லேசாக அணைத்த போது, திடிரென்று யாரோ அவளை இழுத்தார்கள்.

யார் இப்படி செய்தது என்று அவன் பார்த்த போது மகி தான் சுடரின் கைக்கோர்த்தப்படி நின்றிருந்தான். “மகிழ் எப்படி சுடரோடு.. சுடர் மேல இருந்த கோபம் மகிக்கு போயிடுச்சா..” மனதில் கேள்வியோடு இருவரையும் பார்த்தான்.

“இன்னும் கூட இவ கூட பேசற தகுதி உனக்கு இருக்கா.. ஒரு நல்ல ப்ரண்ட்னா என்னன்னு தெரியுமா? அவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு என்ன வேணாலும் செய்றது மட்டுமில்ல.. பிரச்சனைன்னாலும் கடைசி வரைக்கும் கூட இருக்கணும்.. ஆனா நீ என்ன செஞ்ச? உன்னால தான இவ்வளவும், என்ன ஆனாலும் நீயே பார்த்துக்கன்னு விட்டுட்டு போனவன் தானே.. இப்போ எந்த முகத்தை வச்சிக்கிட்டு டார்லிங்னு சொல்லிக்கிட்டு அவக்கிட்ட வந்து பேச முடியுது” என்று மகி கோபமாக கேட்டான்.

உண்மையிலேயே அதற்கு அவனிடம் பதில் இல்லை. அவன் மௌனமாக நின்றான். “உன்னை திரும்ப பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேன்.. நீ என்னடான்னா நான் இருக்கும் போதே இவக்கிட்ட வந்து பேசற.. உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்..” இன்னும் கோபமாகவே மகி பேசிக் கொண்டிருக்க,

“மகிழ் போதும் நிறுத்து.. என்ன இருந்தாலும் சார்லி என்னோட ப்ரண்ட்.. நீ அவனை கோபமா பேசறது பிடிக்கல..” என்று சுடரொளி கூறினாள்.

“சுடர் இன்னுமா இவனுக்கு சப்போர்ட் பண்ற.. அன்னைக்கு அவன்கிட்ட எவ்வளவு கெஞ்சின.. அப்பவும் அவன் மனசு இறங்கலல்ல.. உன்னை தனியா விட்டுட்டு போயிட்டான் இல்ல.. அவனுக்காக சப்போர்ட் பண்ற..”

“நீ கூடத்தான் அப்போ என்கிட்ட கோபமா இருந்த.. என்னை அவாய்ட் பண்ண.. தப்புக்கு மூலக்காரணம் நான்  தானே, அப்போ நான் மட்டும் தான் தண்டனையை ஏத்துக்கணும்..

“அப்போ இவன் தப்பே செய்யலன்னு சொல்றியா? உன்னோட ப்ரண்ட்ங்கிறதால அவனுக்கு நீ சப்போர்ட் செய்யலாம்.. ஆனா அருள் விஷயத்துல இவன் செஞ்சது தப்பு தான்.. எவ்வளவு சாதாரணமா ஒரு பொண்ணோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிட்டு போனான்..”

“அப்போ நீ மட்டும் இப்போ என்ன பண்ணிட்டு வந்திருக்க.. நீயும் தான் அருளோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிட்டு வந்திருக்க..” என்று அவள் பதிலுக்கு சொல்ல, மகியால் ஒன்றும் பேசமுடியாமல் போனது. அருகில் இருந்தவனோ சுடர் எதற்காக இப்படி கூறினாள் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்போ என்ன உன்னோட ப்ரண்டை நான் ஒன்னும் சொல்லக் கூடாது அப்படித்தானே.. ஒன்னும் சொல்லல போதுமா? அந்த நேரத்துல உன்னை மட்டுமே பார்த்து, உனக்காக வருத்தப்பட்டு, எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன் இல்ல.. இதுவும் சொல்லுவ இன்னும் சொல்லுவ..” என்று கோபத்தோடு புலம்பிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.