(Reading time: 12 - 23 minutes)

கோபத்தோடு சென்றவனை பரிதாபமாக பார்த்தப்படி நின்றிருந்தவளை அருகில் இருந்தவன் அழைத்தான். உடனே அவனை முறைத்தாள். “நடந்த விஷயத்துக்கு மூலக்காரணம் நான் தான்ங்கிற காரணத்தால் தான் மகிழ்க்கிட்ட அப்படி பேசினேன்.. மத்தப்படி மகிழ் கேட்டதை தான் நானும் கேக்கறேன்.. எதுக்கு என்னைப் பார்த்து கூப்பிட்ட? இன்னும் கூட ப்ரண்ட்ங்கிற அக்கறையெல்லாம் உனக்கு இருக்கா.. நடந்த விஷயம் எனக்காகன்னாலும் அதுல மகிழ் சொன்னது போல உன்னோட பங்கு துளி கூட இல்லையா..

அன்னைக்கு எனக்காக கூட வேண்டாம்.. அருளுக்காகயாவது நீ யோசிச்சிருக்கலாம்.. ஆனா நீ அப்போ உனக்காக மட்டும் யோசிச்சு செல்ஃபிஷா நடந்துக்கிட்டல்ல.. அதுக்கப்புறம் மகிழ் வீட்ல இருக்கவங்க ஒரு முடிவெடுத்து இப்போ அது எங்க வந்து முடிஞ்சிருக்கு தெரியுமா? திரும்ப என்னால அருளோட ஃப்யூட்சர் கேள்விக்குறியா நிக்குது..”

“அருள்க்கு என்னாச்சு.. என்ன பிரச்சனை?”

“அது உனக்கு தேவையில்லாதது.. புதுசா என்ன அக்கறை அவ மேல.. இன்னும் ஏதாச்சும் அவளுக்கு செய்ய காத்திருக்கிறியா?” எரிச்சலோடு கேட்டாள். அப்போது தான் அவள் கழுத்தில் இருந்த தாலியை அவன் கவனித்தான்.

“சுடர் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.. எப்போ நடந்துச்சு இது.. மகிக்கு உன் மேல இருந்த கோபம் போயிடுச்சா.. இதுக்காக தான நீ அவ்வளவு கஷ்டப்பட்ட.. இப்போ எப்படி இது நடந்தது..” உண்மையான மகிழ்ச்சியோடு கேட்டான்.

“மண்ணாங்கட்டி.. மகிழ் கூட என் கல்யாணம் எப்படில்லாம் நடக்கணும்னு நினைச்சிருந்தேன்.. ஆனா இப்போ.. ஏன் எனக்கு மட்டும் நான் நினைச்சது போல எதுவும் நடக்க மாட்டேங்குது.. ஏன் தப்பாவே எல்லாம் நடக்குது.. இப்போ  திரும்ப எல்லோரோட கோபத்துக்கும் நான் ஆளாயிட்டேன்.. திரும்ப என்னால எல்லோருக்கும் பிரச்சனை தான்.. நான் இங்க வந்திருக்கவே கூடாது.. “ அவள் வருத்தத்தோடு பேசவும், அவள் கைகளை பிடித்து அவன் ஆறுதல் கூற முயற்சித்த போது, அவனது கைகளை உதறியவள்,

“எனக்கு உன் மேல இருக்க கோபம் போகல சார்லி.நான் முன்ன சொன்னது தான், சுடரொளிங்கிற ஒருத்தி உனக்கு ப்ரண்ட்ங்கிறத மறந்திடு, அடுத்த முறை என்ன பார்த்தா கூட யாரோ மாதிரி போய்டு” என்றாள்.

அவனோ அதையெல்லாம் பொருட்படுத்தாதவன்,”சுடர் உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்..” என்று சொன்னதை கூட கேட்காமல்,  கோபமாக வெளியெறினாள்.

ள்ளே அந்த பெண்மணிக்கு சிகிச்சை நடக்க, அருள்மொழியோ வெளியே தவிப்போடு நின்றிருந்தாள். சிறிது நேரத்தில் நர்ஸ் வெளியே வந்தபோது அவரிடம் அந்த பெண்மணியை பற்றி விசாரித்தாள்.

“சிஸ்டர்.. அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு..”

“அவங்க மயக்கம் தெளியல.. அதான் ட்ரீட்மெண்ட் போயிட்ருக்கு.. என்ன பிரச்சனைன்னு பார்க்க ஸ்கேன், ப்ளட் டெஸ்ட்ல்லாம் எடுக்கணும்.. அதனால அட்வான்ஸா கொஞ்சம் அமௌண்ட் ரிஷப்ஷன்ல பே பண்ணிடுங்க..”

“சிஸ்டர்.. என்கிட்ட அவ்வளவு காசு இல்ல.. அதுமட்டுமில்லாம அவங்க யாருன்னும் எனக்கு தெரியாது.. பக்கத்துல இருக்க யூனிவர்சிட்டில திடிர்னு மயங்கி விழுந்துட்டாங்க..”

“ஓ அப்படியா.. இருந்தாலும் அவங்களுக்கு ஏதோ ப்ராப்ளம் மாதிரி தெரியுது.. அவங்க பேக்ல இல்ல மொபைல்ல அவங்க டீடெயில்ஸ் தெரியுதான்னு பாருங்க.. இல்ல நீங்க தான் பணம் கட்ட வேண்டியிருக்கும்” என்று நர்ஸ் சொல்லிவிட்டு சென்றார்.

இத்தனை நேரம் பதட்டத்தில் இது எதுவும் தோன்றாத அவளுக்கு, நர்ஸ் சொல்லிவிட்டு சென்றதும் தான், அந்த பெண்மணியின் கைப்பை தன்னிடம் இருப்பதை உணர்ந்து அதை திறந்துப் பார்த்தாள். அதில் அலைபேசியை தவிர அவரை பற்றி தெரிந்துக் கொள்ள எந்த தகவலும் இல்லை. அதனால் அந்த அலைபேசியை எடுத்து அவரது உறவினர்கள் அலைபேசி எண் ஏதாவது கிடைக்குமா? என்று தேடினாள்.

அமுதா என்ற எண் தான் முதலில் இருந்தது. “அமுதா” ஒருமுறை அந்த பெயரை உச்சரித்து பார்த்தாள். என்னென்னவோ ஞாபகங்கள், அதிலிருந்து அடுத்த நொடியே தன்னை மீட்டுக் கொண்டவள், இன்னும் சில பெயரில் உள்ள எண்களை பார்த்தாள். எல்லாம் வெளிநாட்டு எண்களாகவே இருந்தது. அமுதா என்ற பெயரில் மட்டுமே ஒரு வெளிநாட்டு எண்ணும், ஒரு இந்திய எண்ணும் இருந்தது. அமுதா என்ற பெண்மணி அவருக்கு மிக முக்கியமானவராக இருக்க வேண்டும்.. இல்லையென்றாலும் அந்த பெயரில் தான் இந்திய எண் இருப்பதால் அதற்கு முயற்சித்தாள்.

அவரின் மொபைலில் சிக்னலே இல்லை என்பதால் தன் அலைபேசியில் முயற்சித்து பார்த்தாள். ஆனால் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது பணம் வேறு கட்ட வேண்டும்.. என்ன செய்வது என்று புரியாமல் யோசித்தவளுக்கு, திடிரென்று அந்த எண்ணம் தோன்றி, மகியின் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்து, பின் அவன் மீது தனக்கு இருக்கும் கோபத்தை நினைவு கூர்ந்தவள், உடனே அறிவழகனுக்கு முயற்சித்தாள்.

“சொல்லு அருள்..”

“இப்போ நீ எங்க இருக்க அறிவு..”

“நான் இப்போ கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன்.. இப்போ தான் அம்மா, அப்பாவை பஸ் ஏத்திவிட்டேன்.”

“அறிவு இப்போ ஒரு அவசரம், உடனே வர முடியுமா?” என்றுக் கேட்டவள், முழு விவரத்தையும் அவனிடம் கூறினாள்.

“அப்படியா.. சரி நீ அங்க வெய்ட் பண்ணு, கொஞ்ச நேரத்துல வந்துட்றேன்..”

“சரி.. ஆ மறக்காம பணம் எடுத்துக்கிட்டு வந்துடு..” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள். அந்த நேரம் திரும்பவும் நர்ஸ் வந்து, “அவங்களை பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதாம்மா” என்றுக் கேட்டார்.

“இல்ல சிஸ்டர்.. அமுதாங்கிற ஒரு நம்பர்க்கு போன் செஞ்சு பார்த்தேன் ஆனா காண்டாக்ட் செய்ய முடியல.. நீங்க ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.. இப்போ எனக்கு வேண்டியவங்களுக்கு போன் பண்ணியிருக்கேன்.. கொஞ்ச நேரத்துல வந்ததும் பணம் கட்டிடுவோம்”

“சரிம்மா.. அந்த மொபைலை கொடுங்க, ரிஸப்ஷன்ல சொல்லி அந்த நம்பர்க்கு காண்டாக்ட் செய்ய சொல்றேன்..” என்று நர்ஸ் அலைபேசியை வாங்கிக் கொண்டு சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.