(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 02 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

ழகாக ஒரே சீராக வெட்டபட்ட புல்வெளி. சில புல்களின் மேல் வைர கீரீடமாய் பனிதுளி. ஆங்காங்கே வண்ண மலர்கள் தலையாட்டி சிரித்துக் கொண்டிருந்தன. அதிக பரப்பளவை கொண்ட இடம்.  நடுவே சதுர வடிவில் இரண்டு தளங்களைக் கொண்ட கட்டிடம். அதன் மேலே “காஞ்சனா ஸ்கூல் ஆப் டான்ஸ்“ என்று ஆங்கிலத்தில் பொன்னிற எழுத்துகள் மின்னின.

கட்டிட நுழைவு பகுதியின் முன்னே கைக்கு வேலை வைக்காமல் கால் வைத்ததும் சரக்கென்று விலகிக்கொள்ளும் பெரிய ஆட்டோமேடிக் கண்ணாடி கதவுகள். உள்ளே வரவேற்பரையில் தன் அழகை அதிகப்படுத்தி புன்னகையும் ஆங்கிலமும் இணைந்து எப்பொழுதாவது  தமிழும் பேசும்  பெண் க்ளாரா வுட். அவள் பேசுவது அவளுக்கே கேட்குமா என சந்தேகம் வரவைக்கும் டெசிபளிலில் அவள் மென்மையான குரல். பரதநாட்டியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவள்.  

அவள் முன் கணினி அவளை அசையவிடாது. அந்த நடன பள்ளியில் சேருவது மற்றும் பல முக்கிய விஷயங்கள் அவளிடமே அடக்கம். புத்தகத்தின் முன்னுரைப் போல இப்பள்ளியின் முகவுரை க்ளாரா வுட். காஞ்சனாவின் இடது கை.

அனைத்து தளத்திலும் நடன பயிற்ச்சிகான அறைகள். மாணவர்கள் தங்கள் நடன அபிநயங்கள் முத்திரைகள் போன்றவற்றை சரிப் பார்த்துக் கொண்டே ஆட வசதியாக எல்லா அறைகளிலும் ஒருபுறம் சுவர் போல கண்ணாடி.

எங்கும் ஜல் ஜல் என்ற சலங்கையின் ஒலி அதனோடு “தாஹ தஜெம்தரிதா” “ததிங்கிணதொம்” “தித்தித்தெய்” போன்ற ஆசிரியர்களின் கம்பீர குரல் மற்றும் சில அறைகளில் “கிருஷ்ணா நி பேகனே பாரோ” என ஆடியோ சாதனங்கள் பாட்டை இசைத்துக் கொண்டும் இருந்தன.

மாணவிகள்  அல்லாது மாணவர்களும் சம அளவில் இருந்தனர். பல வருடமாக நடனத்தையே சுவாசமாக கொண்ட மாணவர்கள் . . மற்றவரை பார்த்து தானும் கற்க வேண்டும் என்ற விருபமுள்ள  மாணவர்கள் . . என்னதான் இதில் உள்ளது என ஆவலோடு சேர்ந்த மாணவர்கள் என பலவகை மனநிலைக் கொண்ட மாணவர்கள் கதம்பமாக பயிற்சியில் முருகன் கண்ணன் ராமன் பார்வதி காளி என அனைவரையும் அங்கே அவ்வபொழுது தங்கள் பாணியில் வரவைத்தனர்.

அந்த இடமே தெய்வீகமாக இருந்தது. இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்க மற்றும் ஒரு சில சீன மாணவர்களும் அங்கிருந்தனர்.

முக்கியமான பெரிய அறையில் மேடை போன்ற அமைப்பு அதில் பெரிய நடராஜர் சிலை. வலது கை அபயம் அளிக்க . . இடது காலை வலப்பக்கமாய் தூக்கி நிற்க. கீழே அபஸ்மாரன் என்னும் அரக்கன் வீழ்ந்து கிடக்க. . . வலது கையில் உடுக்கை இடது கையில் தீயும. மயிலிறகாய் விரிந்த சடாமுடி கொடியிடை அதனோடு நாகம் பார்க்க பார்க்க பரவசமாய் இருந்தது.

காஞ்சனா நடராஜர் சிலையை பார்க்காதவர் இல்லைதான். ஆனால் இந்த சிலையை செய்த இளைஞன்  முத்துகுமார் அறிவியல் பட்டதாரி. படித்து முடித்தவன் தன் குல தொழிலான சிற்ப கலையை விட மனமில்லை. அழிவின் விளிம்பில் இருக்கும் இக்கலையை தொடர முடிவெடுத்தான்.

சென்னை மகாபலிபுரம் அருகில் தன்னை போல் ஒற்ற கருத்துக் கொண்ட நண்பர்களை சார்ந்து சிற்ப கலையில் ஈடுபட்டுள்ளான். காஞ்சனா தற்செயலாக அங்கே சென்றிருந்த சமயத்தில் இதைக் கண்டார். அந்த இளைஞனை ஊக்குவிக்க எப்பொழுதும் சிலையை வாங்குவார். நேர்த்தியாக வடிவமைக்கபட்ட சிலையை காண கண்கோடி வேண்டும்.

அங்கிருந்து வரவழைக்கபட்டதுதான் இந்த நடராஜர் சிலை. முன்தினம்தான் நடராஜர் அங்கே வருகை தந்திருந்தார்.

“ஒரு சிலை செய்ய ஆறு மாசம் வரைக்குகூட ஆகும். நம்ம நாட்டு காரங்கவிட வெளிநாட்டு காரங்கதான் சிலையை   அதிகம் வாங்குறாங்க.” என கூறுவான்.

காஞ்சனாவிற்கு அதை காணும் போதெல்லாம் முத்துவின் முகம் நிழலாடும். சிலையை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் காஞ்சனா.

“ குட் மார்னிங் மேம் . .வாவ் சிலை வந்திடுச்சா . .” என்ற சாரு. அவள் கண்களும் நடராஜர் சிலையை மொய்க்க ஆரம்பித்தது.

சாரு மெரூன் லெக்ங்கிஸ் அதனோடு கனுக்கால் வரையிலான மாம்பழ நிற சேலை மற்றும் மெரூன் பிளவுஸ் அணிந்திருந்தாள். இது அப்பள்ளியின் நடன சீருடை. இந்த கலர் காம்பினேஷனில்  சுடிதாரும் அணியலாம். சாரு ஐந்தடி உயரம் மெலிந்த தேகம்.

இரண்டொரு நொடிகளில் சாரு வகுப்பு எடுக்க சென்றுவிட்டாள். ஜல் ஜல் என்ற சலங்கை ஒலி அவளுக்கு முன் ஓடியது. அன்று முதன் முறையாக நடனம் கற்றுக் கொள்ள வந்திருக்கும் குழந்தைகளுக்கு அவள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆறு பெண் குழந்தைகளில் ஐந்து முதல் பத்து வயதுக்கு உட்பட்டவர்கள். அவள் வகுப்பில் மூன்று இந்தியா  இரண்டு அமெரிக்கா  ஒரு சீனா மாணவர்கள்.

முதலில் சாதாரணமாய் குழந்தைகளிடம் பேசினாள். ஆசரியர் மாணவர் இறுக்கம் சற்றே தளர்ந்தது. குழந்தைகளிடம் ஏன் நடனம் கற்க ஆசை என கேள்வி எழுப்ப

“என் அம்மாவும் நடனம் ஆடுவார். அவர் ஆடுவதை பார்த்து எனக்கும் பிடித்துவிட்டது.” என இந்திய குழந்தை  பதில் அளித்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.