(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 11 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் வந்த பிறகு மித்ராவின் கல்யாணம் மேலும் களை கட்ட ஆரம்பித்தது. கல்யாணத்திற்கு தேவையானதை தனியாகவும், அவள் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்ல போகும் பொருட்களை தனியாகவும் பேக் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

அன்றைக்கு மித்ராவிடம் சண்டையிட்ட சரவணன், மறுநாள் அவளிடம் பேசினான். ஆனால் முதல் நாள் பேசியதற்கு வருத்தமோ, இல்லை விளக்கமோ எதுவும் சொல்லவில்லை. எப்போதும் போல் அவனை பற்றி அல்லது அவன்  குடும்பத்தை பற்றி பேசினான்.

இரண்டு முறை மித்ரா அதை பற்றிய பேச்சு எடுத்த போதும், அவன் அதை விட்டு வேறு பேசவே, அவளும் விட்டு விட்டாள்.

அதே போல் கடைக்கு சென்று வந்த மறுநாள் சபரி வீட்டிற்கு வந்த ராம், மைதிலி இருவரும் சபரி, முரளி இருவரோடு அந்த பாட்டியையும் அமரவைத்து பேசினார்கள்.

மைதிலி முதலில் “பெரியம்மா, பெரியவங்க நீங்க. நீங்களே இப்படி செய்யறது சரியா சொல்லுங்க?

“நான் என்ன பண்ணினேன்?

“நாம நம்ம பக்க வேலைகளை முடிச்சுட்டு இருக்கோம். அத ஏன் சம்பந்தி வீட்டுக்காரங்களுக்கு சொல்லணும்?

“இது நல்லா இருக்கே. இங்கே என்ன என்ன வேலை நடக்குதுன்னு சொல்லத்தான் செய்யணும்.

“அது அவங்க சம்பந்தப்பட்ட விஷயம்ன்னா சரி. நேற்றைக்கு முழுக்க நம்ம பக்கம் செய்ய வேண்டிய முறைக்கு தான் எல்லா கடைக்கும் போனோம். அத எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே?

“அவங்க வெறும் சம்பந்தக்காரங்க மட்டும்னா கூட பரவாயில்லை. உறவுக்காரங்களும் கூட. சிலத எல்லாம் சொல்லித்தான் ஆகணும்.

இப்போது ராம் “அதுக்காக மித்ராவ பத்தி எதுக்கு அப்படி பேசினீங்க அத்தை?

இதை கேட்ட முரளி “என்ன ஆச்சு மச்சான் ? அம்மா என்ன பேசினாங்க?

அதற்கு பதிலாக அவன் அம்மா “அதில் என்ன தப்பு? நம்ம பொண்ண பத்தி யாரோ சொன்னா அது எப்படி எப்படியோ போகும்? அதை விட நாமளே சொல்லிட்டோம்னா, தப்பில்லாம போயிடும் இல்லியா?

“மித்ராவ பத்தி குறை சொல்ல என்ன இருக்கு அத்தை? நல்ல பொண்ணு. எல்லோரையும் அனுசரிச்சு போற பொண்ணுதானே. அத ஏன் தலை கால் புரியாம ஆடறானு எல்லாம் சொல்லிருக்கீங்க?

இப்போது முரளி “அம்மா, என்ன பேச்சுமா இது? உங்ககிட்டேர்ந்து நான் இத எதிர்பார்க்கல”

“நான் என்னடா தப்பா சொல்லிட்டேன். நேத்திக்கு ஷ்யாம் பார்த்தவுடன் அந்த குதி குதிக்கிறா கடைன்னு கூட பார்க்காம. ஒருவேளை சம்பந்தக்கராங்க யாரவது வந்து இருந்தா, என்ன ஆகிருக்கும்?

இப்போது ராம் “யார் வந்து இருந்தாலும் ஒன்னும் ஆகி இருக்காது. இந்த பசங்க என்ன இன்னைக்கு நேத்தா பழகறாங்க. சும்மா ஹாய், பாய்ன்னு சொல்லிட்டு கிளம்பி போக, பொறந்த அன்னிலேர்ந்து ஒண்ணா இருக்காங்க. அப்போ இப்படி தான் இருப்பாங்க”

“அந்த மாதிரி இனிமே இருக்க முடியுமா? அவங்க எல்லாம் ஊர்பக்கம் உள்ளவங்க. வீட்டாளுங்கள தவிர யாரு வந்தாலும் வெளி வரண்டாவில் தான் உக்கார வச்சு பேசுவாங்க. சொந்தக்காரங்க வந்து தங்கினால் அவங்களுக்கு எல்லாம் செஞ்சு விருந்து போடுவாங்களே தவிர்த்து , அவங்க கூட சமமா உக்கார்ந்து பேசுறது எல்லாம் நடக்காது. நாள பின்ன நம்ம பசங்க அங்கே போனா, இவ இந்த மாதிரி செஞ்சா, நம்ம வளரப்ப தானே பேசுவாங்க. “

“அதுக்கு நீங்க மித்ரா கிட்டே பேசியிருக்கனும். அத விட்டு சம்பந்தி அம்மா கிட்டயா சொல்லுவீங்க?

முரளி “அம்மா, மித்ரா நம்ம பொண்ணு. அவளுக்கு என்ன புத்தி சொல்லணுமோ நீங்க சொல்லுங்க அவ கேட்டுப்பா. அத விட்டு வேண்டாத வேலை எல்லாம் பார்த்தீங்கன்னா, நீங்க கல்யாணத்துக்கு வந்தா போதும்ன்னு எங்கியாவது டூர் அனுப்பி விட்டுடுவேன் பார்த்துக்கோங்க”  என்று எச்சரித்தான்.

இப்போது ராமும் “அத்தை. மித்ராவுக்கு இப்போ இல்லை, எப்போவும் எங்க எல்லோரோட ஆதரவும் உண்டு. இதயும் அந்த சம்பந்தி அம்மா கிட்டே சொல்லி வையுங்க” என்றான்.

மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டாலும், அதற்கு பின் அந்த மித்ராவின் பாட்டி அதிகமாக எந்த வம்பும் செய்வது இல்லை.

அதோடு, ஷ்யாமின் பாட்டி கௌசல்யா வந்து , கல்யாணம் ஆக போற பொண்ணு, எங்க வீட்டிலேயும் ஒரு நாலு நாள் இருக்கட்டும் என்று அழைத்துக் கொண்டு சென்று விடவே, மித்ராவின் பாட்டியால் வேறு எதுவும் பிரச்சினை ஏற்படவில்லை.

ராமின் வீட்டிற்கு மித்ரா மட்டும் இல்லாமல், சைந்தவியும் வந்து விடவே, மித்ரா, சுமி, சைந்தவி மூவரும் கலாட்டாவும், மகிழ்ச்சியோடும் இருந்தனர்.

ஷ்யாம் அலுவலகம் சென்று வந்த பின் அவர்களோடு சேர்ந்து கொண்டான். அஷ்வின் லீவ் போட்டு வந்து இருந்தாலும், அவனுக்கு அவர்கள் வீட்டில் வேலை சரியாக இருந்தது. அவனுடைய ஷாப்பிங் வேலையே அவனுக்கு நிறைய இருந்தது. அது போக பிரெண்ட்ஸ்க்கு பத்திரகை கொடுக்க வேறு செல்ல வேண்டியிருந்தது. அவ்வப்போது வந்து இவர்களோடு அமர்ந்து கலாட்டாவில் சேர்ந்து கொள்வான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.