(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 15 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ருள்மொழியும்  அறிவழகனும் இங்கு எப்படி என்று அதிர்ச்சியோடு பார்த்தனர் கதிரவனும் எழிலரசியும். அதுவும் அமுதவாணன் இருக்கும் இடத்தில் எப்படி அருள்மொழி வந்தால் என்று புரியாத பார்வை பார்க்க,

“சித்தி.. சித்தப்பா..” என்று அவர்களை அழைத்தாள் அருள்மொழி. அவள் உறவுமுறை சொல்லி அழைத்ததில் ஆனந்தி தான் அதிசயித்து போனார்.

“அருள், அறிவு.. ரெண்டுப்பேரும் இங்க எப்படி?” எழில் கேட்க,

“அது ஆன்ட்டியை பார்க்க வந்தோம் அத்தை..” என்று பதில் கூறினான் அறிவு.

“எழில் உனக்கு இவங்க ரெண்டுப்பேரையும் தெரியுமா?”

“தெரியுமாவா.. அருள் என்னோட அக்கா பொண்ணு.. அறிவு பூங்கொடி அண்ணியோட தங்கச்சி பையன்.. ஆனா உங்களுக்கு தெரியாமேயாவா ரெண்டுப்பேரும் இங்க வந்திருக்காங்க..?? அமுதனுக்கு ரெண்டுப்பேரையும் நல்லா தெரியுமே..” என்றப்படி எழில் அமுதனை பார்க்க, ஆனந்தியும் அதேசமயம் ஏன் சொல்லவில்லை? என்ற பார்வையோடு அவனை தான் பார்த்தார்.

“நேத்து கதிரை பார்க்கப் போனப்ப மயங்கிட்டேன்னு சொன்னேனே.. அப்போ அருள் தான் என்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சா.. அப்படித்தான் அருளை எனக்கு தெரியும்.. இவங்க 3 பேருமே ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சது போல காட்டிக்கவே இல்லை..” என்றவருக்கு அப்போது தான் அருள் நேத்து அமுதனிடம் தெரிந்தவள் போல் பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

“உன் பையன் பண்ண காரியத்துக்கு அருள் இவ்வளவு செஞ்சதே பெரிய விஷயம்..” என்று கோபப்பட்ட கதிர் பின் அறிவையும் அருள்மொழியையும் பார்த்து “சரி நீங்க கிளம்புங்க அப்புறம் பார்க்கலாம்..” என்று அனுப்பி வைத்தார். இருவரும் தலையசைத்து ஆனந்தியிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினர்.

“வந்து ரெண்டு நாளாகுது.. இன்னைக்கு தான் எங்களுக்கு சொல்லணும்னு தோனுச்சா ஆனந்தி.. ரெண்டு நாள் முன்ன உன்னோட மொபைல்க்கு ட்ரை பண்ணேன்.. ஆனா லைன் கிடைக்கல..” அந்த நேரம் அனேகமா நீ இங்க இருந்திருக்கணும், இல்ல ப்ளைட்ல ட்ராவல் செஞ்சிருந்திருக்கணும்.. உடம்பு சரியில்ல, இந்தியாக்கு வந்து ட்ரீட்மெண்ட் செய்யணும்னு முடிவு செஞ்சிருக்கீங்க.. ஆனா கிளம்பறதுக்கு முன்ன கூட  போன் பண்ணி எங்களுக்கு சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல..”

“எதுக்கு கதிர் இவ்வளவு டென்ஷன்.. அங்க இருந்து சொல்லியிருந்தா நீங்க பதறியிருப்பீங்க.. டாக்டர் எனக்கு ட்யூமர்னு சொன்னதுமே மனசுக்குள்ள இங்க வந்துடணும்னு தோனிடுச்சு.. அந்த முடிவு உறுதியானதும் சொல்லலாம்னு இருந்தேன். ஆனா டிக்கெட் உடனே கிடைச்சு, உடனே இங்க வரவே வந்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.. ஆனா நான்தான் போன்ல சொன்னேனே, அமுதாவும் உங்கக்கிட்ட பேசல.. எனக்கு ஒரு சிம் வாங்கிக் கொடுக்கல.. இப்போ காலையில் தான் எனக்கு சிம் வாங்கிக் கொடுத்தான். ஆக்டிவ் ஆனதும் உனக்கு உடனே பேசிட்டேன்.”

“மொபைல் இல்லன்னா என்ன? எத்தனை பி.சி.ஓ இருக்கு என்னோட நம்பர்க்கு போன் பண்ணலாமே.. இந்த நேரத்துல எதுக்கு என்னை பார்க்கணும்னு அவ்வளவு தூரம் வந்த..”

“அட ஆமால்ல.. எனக்கு இது தோனவே இல்லை பாரேன் கதிர்.. வந்ததுல இருந்து ரெண்டு நாளா இவன்கிட்ட உங்கக்கிட்ட பேச சொல்லி சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்.  ஆனா இவன் அதை கண்டுக்கிட்டது போலவே தெரியல.. அதான் நேர்ல பார்க்கலாம்னு நினைச்சேன்.. ஆனா அதுலயும் ஒரு நல்லதுன்னா அது அருளை பார்த்தது தான்..”

“செய்யறதெல்லாம் செஞ்சுட்டு எங்கக்கிட்ட எப்படி உன்னோட பையன் பேசுவான்.. அதான் கண்டுக்காம இருந்திருக்கான். ஆனா அருளுக்கு நீ அமுதனோட அம்மான்னு தெரிஞ்சப்பிறகும் உன்கிட்ட பேச வந்திருக்கான்னா அதிசயமா தான் இருக்கு..” இத்தனையும் அமுதனை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் பேசினார்கள். அவனோ அதற்கெல்லாம் பதில் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.

“அமுதா அப்படி என்ன பண்ணான் கதிர்.. முன்னயும் அதானே சொன்ன.. என்ன விஷயம்?”

“போனமுறை அமுதன் வந்தப்போ இங்க நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியாதா ஆனந்தி” எழில் கேட்டாள்.

“ஆனந்திக்கு தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தா அப்பவே என்கிட்ட பேசியிருப்பாளே..” என்று கதிர் தன் தோழியை புரிந்தவராக பதில் கூறினார்.

“அய்யோ அப்படி என்ன தான் நடந்தது? அப்படி அமுதா என்ன பண்ணான்..” என்று ஆனந்தி அமுதனை பார்த்தப்படியே இருவரையும் கேட்டார். எழிலோ அப்போது நடந்த அனைத்தையும் விரிவாக கூறினாள். அதைக்கேட்டு ஆனந்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போதைக்கு அருள், அமுதனை விட சுடர் பற்றிய கவலை தான் அவருக்கு அதிகமானது. இங்கு வந்ததிலிருந்து இன்னும் அவளும் தன்னை பார்க்காமல் இருக்கிறாளே! கதிர், எழில் இருவருடன் அவளும் வருவாள் என்று அதிகம் எதிர்பார்த்திருந்தார்.

“ஆமாம் சுடர் எப்படி இருக்கா? அவ என்கிட்ட பேசியே கொஞ்ச நாளாகுது.. உங்கக் கூட வருவான்னு எதிர்பார்த்தேன் அதுவும் வரல.. இந்த ப்ராப்ளம்க்கு அப்புறம் அவ நல்லா தானே இருக்கா..” என்றுக் கேட்டவர், பின் தன் மகனைப் பார்த்து “நாம இந்தியா வந்த விஷயத்தை சுடர்க்கிட்ட சொன்னியா அமுதா” என்றுக் கேட்டார். ஏனென்றால் சுடருக்கு விஷயம் தெரிந்திருந்தால் இந்நேரம் தன்னை வந்து பார்த்திருப்பாளே.. ஏன் வரவில்லை? என்ற கேள்வி அவர் மனதில் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.